விகடன் நிறுவனம் விரித்துள்ள வலையில் யாரும் விழுந்துவிட வேண்டாம். கொரோனா பெருந்தொற்று காலத்தில், 170 தொழிலாளர்கள் குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்தியதை யாரும் மறந்துவிட வேண்டாம்

0
3
கடந்த ஆண்டு கொரோனா முதல் அலை உலகத்தை உளுக்கிக்கொண்டிருந்த சமயம், விகடன் குழுமத்தில் பணியாற்றி வந்த சுமார் 170 பேரை விகடன் நிர்வாகம் பணிநீக்கம் செய்தது.
பெருந்தொற்றால், உலக பொருளாதாரமே ஸ்தம்பித்துப் போயிருந்த அந்த சமயத்தில், சிறிதும் மனசாட்சியின்றி, 170 குடும்பத்தை நடுத்தெருவில் நிறுத்தியது விகடன் குழுமம். விகடன் நிறுவனத்தின் இந்த அராஜக செயலை செயல்பாட்டாளர்கள் பலர் கண்டித்தனர். பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள், விகடன் நிறுவனத்திடமிருந்து பெற்ற விருதுகளை திரும்ப அளித்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.
விகடனின் இந்த அராஜக நடவடிக்கையை கண்டித்து, மாற்றத்திற்கான ஊடகவியலளார்கள் மையம் விகடன் நிறுவனத்தின் வாயிலில் உடனடியாக கண்ட ஆர்ப்பாட்டம் நடத்தியது. அத்துடன் நிற்காமல், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு, தமிழ்நாடு தொழிலாளர் நல ஆணையம் மற்றும் இந்திய பிரஸ் கவுன்சில் ஆகியவற்றில் புகார் அளித்தது.
இந்திய பிரஸ் கவுன்சிலில் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் அளித்த புகாருக்கு பதில் அளித்த விகடன் நிறுவனம், கொரோனாவால் நிறுவனம் சந்தித்த நெருக்கடியை புரிந்துகொண்டு, 100 தொழிலாளர்கள் அவர்களே வேலையை விட்டு போய்விட்டதாக ஒரு அப்பட்டமான பொய்யை கூறியது.
விகடன் கூறுவது அப்பட்டமான பொய் என்பதை புரிந்துகொண்ட இந்திய பிரஸ் கவுன்சில், விகடன் வேலை நீக்கம் தொடர்பாக விசாரிப்பதற்கு, மூத்த பத்திரிகையாளர் மற்றும் செயல்பாட்டாளர் திரு.சாய்நாத் உள்ளிட்ட ஐந்துபேர் அடங்கிய குழுவை உருவாக்கியது. அந்தக் குழு இதுகுறித்து விசாரணையை தொடங்க இருந்த சமயம், கொரோனா இரண்டாம் அலை வந்ததால் தற்போது விசாரணை இடைக்காலமாக தடைபட்டுள்ளது.
இந்த சமயத்தில், 170 குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்திய விகடன் நிறுவனம், கடந்த ஆண்டு தனக்கு ஏற்பட்ட கெட்ட பெயரை துடைப்பதற்கு, தற்போது, விகடனில் பணியாற்றும் ஊழியர்கள் கொரோனாவால் உயிரிழந்தால், அந்த ஊழியரின் குடும்பதிற்கு இரண்டு ஆண்டுகள் சம்பளம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம், உயிரிழப்பவரின் ஆண்டு வருமானம் 7.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியென்றால், ஒருவர் கொரோனாவால் உயிரிழந்தால், அவருக்கு நிர்வாகம் அதிகபட்சமாக இரண்டு ஆண்டிற்கு 15 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கும். அத்துடன், இதர பலன்களை சேர்த்தால் உயிரிழந்த பணியாளரின் குடும்பத்திற்கு, அதிகபட்சமாக 20 லட்சம் ரூபாய் செலவு செய்யும்.
இந்நிலையில், கடந்த ஆண்டு பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் மூலம் இந்த ஓராண்டில் எவ்வளவு பெரிய தொகையை விகடன் நிறுவனம் மிச்சப்படுத்தியுள்ளது என்பதை கணக்கிடுவோம்.
பணிநீக்கம் செய்யப்பட்ட ஒரு தொழிலாளரின் சம்பளம், சராசரியாக மிகவும் குறைந்தபட்சமாக 25 ஆயிரம் என்று வைத்துக்கொள்வோம். அப்படியென்றால் 170 தொழிலாளர்களுக்கு இந்த ஓராண்டில் சுமார் 5 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டிருக்க வேண்டும். பிரஸ் கவுன்சிலில் விகடன் தெரிவித்த அப்பட்டமான பொய்யின்படி பார்த்தால் கூட, 100 தொழிலாளர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். ஆகவே அவர்களை வைத்து கணக்கிட்டாலும், இந்த ஓராண்டில் 3 கோடி ரூபாயை விகடன் மிச்சப்படுத்தியுள்ளது.
இவ்வாறு, 170 தொழிலாளர்களின் குடும்பத்தை சிறிதும பட்சோதாபமின்றி நடுத்தி தெருவில் நிறுத்திவிட்டு, பிரஸ் கவுன்சிலில், 100 பேர் அவர்களே வேலையை விட்டு போய்விட்டார்கள் என்று பச்சையாக பொய் சொல்லிவிட்டு, தற்போது கொரோனாவால் இறந்த பணியாளருக்கு இரண்டு ஆண்டுகள் சம்பளம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விகடன் நிறுவனத்தின் தலைவர் சீனிவாசன்.
இதில் கவனிக்க வேண்டியது, 5 கோடி ரூபாயை மிச்சப்படுத்துவதற்காக இழந்த பெயரை, 20 லட்சம் ரூபாய் செலவு செய்து மீட்பதற்கு முடிவு திட்டமிட்டுள்ளது விகடன் நிறுவனம். இதை புரிந்துகொள்ளாமலும், 170 தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு இன்னும் நீதி கிடைக்காமல் உள்ள நிலையிலும், விகடன் நிறுகூனம் விரித்துள்ள வலையில் யாரும் சிக்கிவிடக் கூடாது என மாற்றத்திற்கான ஊடகவியலளார்கள் மையம் கேட்டுக்கொள்கிறது.
பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாக, இந்த ஓராண்டாக அனைத்து தளங்களிலும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் போராட்டத்தை நடத்தி வருகிறது. ஆகவே, பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நீதி கிடைக்க, எங்களோடு அனைவரும் கைகோர்க்க அழைப்பு விடுக்கிறோம்.
கொரோனா பெருந்தொற்றால், பத்திரிகையாளர்கள் பலர் உயிரிழந்துள்ளனர். அதனால் அவர்களின் குடும்பம் நிர்கதியாக விடப்பட்டுள்ளது. இதுபோன்ற நேரத்தில் அவர்கள் பணியாற்றிய நிறுவனம் விகடன் அறிவித்ததுபோல், 2 ஆண்டுகளுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பது நியாயமே. ஆனால், விகடன் நிறுவனத்தின் சூழ்ச்சியை புரிந்துகொண்டு, பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் தொடர்ந்து நிற்க வேண்டும் என்பதையும் மனதில் கொள்ளவேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கிறது.