CMPC
STATEMENTS / அறிக்கைகள்

தொழிலாளர் போராட்டத்திற்கு வெற்றி – இழப்பீடு தந்த விகடன் – மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் மாபெரும் வெற்றி

மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் மாபெரும் வெற்றி!

வேலை நீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தொழிலாளருக்கு இழப்பீடு வழங்கிய விகடன் நிறுவனம்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன் கொரோனா பெருந்தொற்று உச்சத்தில் இருந்த சமயத்தில், விகடன் நிறுவனம் சுமார் 170 தொழிலாளர்களை சட்டத்திற்குப் புறம்பாக வேலை நீக்கம் செய்தது. இந்த வேலை நீக்க அறிவிப்பு வெளியான மறுநாளே, மாற்றத்திற்கான ஊடகவியலளார்கள் மையம் சார்பாக விகடன் நிறுவனத்தின் வாயிலில் வேலைநீக்கத்தை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆனால், நிர்வாகம் தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.

இதைத்தொடர்ந்து, வேலைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை அணுகி, தொழிலாளர் நல ஆணையத்தில் புகார் அளிப்பதற்கான முயற்சியில் அமைப்பு ஈடுபட்டது. அப்போது, பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களில் கணேசன் என்பவர் மட்டும் புகார் அளிக்க முன்வந்தார். அதைத்தொடர்ந்து தொழிலாளர் நல ஆணையத்தில் கணேசன் புகார் அளிப்பதற்கு அமைப்பு உதவியது.

தொழிலாளர் நல ஆணையத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், தொழிலாளர் கணேசன், விகடன் நிறுவனத்தின் மனிதவளத்துறை அதிகாரி மற்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். ஆனால், பேச்சுவார்தையில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து பேச்சுவார்த்தை முறிந்ததாக தொழிலாளர் நல ஆணையம் உத்தரவிட்டது.

இதன்பின், அமைப்பின் வழிகாட்டுதலின் பேரில், அமைப்பின் வழக்கறிஞர் மூலம், சென்னை தொழிலாளர் நல நீதிமன்றத்தில் கணேசன் சார்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கொரோனா காரணமாக சுமார் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற நிலையில், கடந்த ஏப்ரல் மாதம், விகடன் நிறுவனம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து நீதிமன்றம் நியமித்த மத்தியஸ்தர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கணேசனுக்கு குறிப்பிட்ட தொகையை இழப்பீடாக வழங்க விகடன் நிறுவனம் ஒப்புக்கொண்டது. அதன்படி கணேசனுக்கு இழப்பீட்டுத் தொகைக்கான காசோலையை விகடன் நிறுவனம் வழங்கியுள்ளது.

அமைப்பின் வழிகாட்டுதலின்படி, சட்ட விரோத வேலை நீக்கத்தை எதிர்த்து உறுதியோடு போராடிய கணேசனுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறது.

வழக்கை சிறப்பாக நடத்தி இந்த வெற்றியை பெற்றுத்தந்த வழக்கறிஞர் தோழர்கள் திரு.ரவி, திரு.இளங்கோ ஆகியோருக்கு நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

விகடன் சட்டவிரோத பணிநீக்கத்தை எதிர்த்து மாற்றத்திற்கான ஊடகவியலளார்கள் மையம், இந்திய பிரஸ் கவுன்சிலில் புகார் அளித்துள்ளது என்பதையும் அதுகுறித்து விசாரணை நடத்த பிரஸ் கவுன்சில் ஒரு குழுவை அமைத்துள்ளது என்பதையும் இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

ஆகவே, பாதிக்கப்பட்ட மற்ற தொழிலாளர்களுக்கும் பிரஸ் கவுன்சில் மூலம் நீதி கிடைக்க வாய்ப்புள்ளது என்பதை மாற்றத்திற்கான ஊடகவியலளார்கள் மையம் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறது.

Related posts

“உங்களை வேலையைவிட்டு வெளியேற்றப்போகிறோம், உங்கள் எதிர்காலம் சிறக்க வாழ்த்துகள்”. என்டிடிவி-யின் அதிர்ச்சியளிக்கும் அறிக்கை

CMPC EDITOR

அரியலூர் மாவட்ட நியூஸ் 18 தமிழ்நாடு செய்தியாளர் கலைவாணன் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காட்டு மிராண்டித்தனமான நடத்திய தாக்குதலை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது

CMPC EDITOR

ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதிக்கு எதிராக தொடுக்கப்படும் ஒடுக்குமுறையை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது.

CMPC EDITOR