கொரோனா தொற்றுக்கு பத்திரிகையாளர்கள் பலியாவதை தடுத்து நிறுத்துங்கள். தமிழக அரசுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கோரிக்கை

0
6

கொரோனா பெருந்தொற்றிற்கு பத்திரிகையாளர்கள் பலியாவதை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் தமிழக அரசை வலியுறுத்துகிறது.

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை மிகக் கொடூரமாக பரவிவரும் நிலையில், தங்கள் உயிரை பணயம் வைத்து பத்திரிகையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தேவையை கருத்தில் கொண்டு, தமிழக அரசு பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்ததற்கு பத்திரிகையாளர்கள் அரசுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.

அதேவேளை, கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா முதல் அலையிலும், தற்போது ஏற்பட்டுள்ள இரண்டாம் அலையிலும் பல பத்திரிகையாளர்கள் உயிரிழந்துள்ளனர். அவ்வாறு உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பங்கள் அனைத்திற்கும், இதுவரை முழு நிவாரணத்தொகை வழங்கப்படவில்லை.

அதேபோல், கொரோனா பெருந்தொற்று காலத்திலும், பல ஊடக நிறுவனங்கள், சம்பளத்தை குறைப்பது, அதிக நேரம் வேலை வாங்குவது, ஆபத்தான வேலைகளை செய்ய நிர்பந்திப்பது, உரிய நேரத்தில் சம்பளம் வழங்காமல் இழுத்தடிப்பது, கொரோனா பாதிக்கப்பட்டால் அதற்கும் நிறுவனத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று கை கழுவிவிடுவது, பணியாளர்களுக்கு தங்களைத் தனிமைப் படுத்திக்கொள்வதற்கு ஏற்பாடு செய்துதர மறுப்பது, பத்திரிகையாளர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்காமல் இருப்பது, ஊரடங்கு காலத்தில் பணிக்கு வரும் பத்திரிகையாளர்களுக்கு வாகன வசதி செய்து தராமல் இருப்பது போன்ற மனசாட்சியற்ற வகையிலும், அடிப்படையான தொழிலாளர் நல சட்டங்களைக் கூட மதிக்காமலும் உள்ளன.

ஆகவே, முதல் மற்றும் இரண்டாம் அலையில் இதுவரை உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு, முன்களப் பணியாளர்களுக்கு அரசு அறிவித்துள்ள நிவாரணத் தொகையான 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக் கொள்கிறது.

அதேபோல், மேலே குறிப்பிட்டபடி, பணியிடத்தில் பத்திரிகையாளர் சந்திக்கும் பிரச்சனையை அறிந்து அதை தீர்ப்பதற்கு, தொழிலாளர் நலத்துறையை முடுக்கி விட வேண்டும் என்று தமிழக அரசை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.

பத்திரிகையாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் உள்ளதால், பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு தடுப்பு மருந்து வழங்கும் சிறப்பு முகாம்களை தமிழக அரசு உடனடியாக நடத்த வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கிறது.

கொரோனாவால் பாதிக்கப்படும் பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு சிகிச்சை அளிப்பதற்கு, மருத்துவர்களுக்கு அமைக்கப்பட்டுள்ளது போல், தனியாக சிறப்பு சிகிச்சை மையங்களை உருவாக்க வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் தமிழக அரசை வலியுறுத்துகிறது.