மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன், தான் நடத்தும் அறம் ஆன்லைன் என்ற இணையதளத்தில், ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார். அந்த செய்தியில், தினமணி பத்திரிகையில் பணியாற்றும் செய்தியாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களை அந்த பத்திரிகையின் ஆசிரியர் வைத்தியநாதன், பல்வேறு வகையில் துன்புறுத்துவதாக அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில், தினமணியின் திருநெல்வேலி மாவட்ட புகைப்படக் கலைஞர் விஜயகுமார், மரணமடைந்ததை சுட்டிக்காட்டியுள்ள சாவித்திரி கண்ணன், அவர் மரணமடைந்த செய்தி, சென்னையில் உள்ள அவருடைய குடும்பத்தாருக்கு ஒன்றரை நாள் கழித்துதான் தெரிய வந்ததாக கூறியுள்ளார்.
குடும்பத்தார் சென்னையில் இருந்த நிலையில், தினமணி நிர்வாகத்தால் விஜயகுமார் பல ஊர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். விஜயகுமார் இதய அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையில், சென்னைக்கு மாற்றம் கிடைத்தால் குடும்பத்தோடு இருப்பது தன்னுடைய உடல்நிலைக்கு உகந்தது என்று பலமுறை வைத்தியநாதனிடம் கேட்டதாகவும், ஆனால் அவர் அதற்கு காது கொடுக்கவில்லை என்றும் விஜயகுமாரின் மனைவி கூறியதாக சாவித்திரி கண்ணன் தெரிவித்துள்ளார்.
இதேபோல், மேலும் பல செய்தியாளர்களும், புகைப்படக் கலைஞர்களும் எந்த வித காரணமுமின்றி, வைத்தியநான் அவர்களின் பழிவாங்கும் நோக்கத்தால் பல ஊர்களுக்கு வேண்டுமென்றே மாற்றம் செய்யப்பட்டதாகவும், அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியநாதனின் சொந்த வேலைகளை செய்வதற்கு செய்தியாளர்கள் நிர்பந்திக்கப்படுவதாகவும், அதை செய்யாதவர்கள் இம்மாதிரி பழிவாங்கப்படுவதாகவும் சாவித்திரி கண்ணன் தெரிவித்துள்ளார்.
வைத்தியநாதன் கொடுத்த மன உளைச்சல்கள் காரணமாக கடந்த 15 ஆண்டுகளில் 80க்கும் மேற்பட்டவர்கள் வேலையை விட்டு விலகியுள்ளதாகவும், 6 பேர் வரை மரணமடைந்துள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்ப் பத்திரிகை உலகத்தில் அனைவராலும் அறியப்பட்ட மதிப்பு மிக்க பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன், தினமணி ஆசிரியர் மீது வைத்துள்ள இந்த குற்றச்சாட்டுகள் குறித்து தொழிலாளர் நல ஆணையம் தானாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.
தினமணி பத்திரிகையில் நடைபெறும் இந்த தொழிலாளர் விரோத நடவடிக்கையை தோலுரித்துக் காட்டியுள்ள மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் அவர்களுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு அனைத்து வகையிலும் உதவி செய்ய மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் தயாராக உள்ளது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.