CMPC
STATEMENTS / அறிக்கைகள்

மக்கள் தொலைகாட்சியில் தொழிலாளர்கள் பணிநீக்கம் – மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கண்டனம்

மக்கள் தொலைக்காட்சியிலிருந்து நாற்பதுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது.

தொழிலாளர் நலத்துறை உடனடியாக தலையிட்டு பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு நியாயம் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

மண் பயனுற வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடங்கப்பட்டு, இன்று தமது ஊழியர்களின் வாழ்க்கையிலேயே மண்ணை போட்டுள்ளது மக்கள் தொலைக்காட்சி நிர்வாகம். தொலைக்காட்சியில் பணியாற்றும் யாரையும் ஊழியர்கள் என்று அழைக்கக்கூடாது, அவர்களை மக்கள் குடும்பத்தினர் என்றே அழைக்க வேண்டும் என மக்கள் தொலைக்காட்சி தொடக்கத்தின்போது அன்பு கட்டளையிட்டார் அதன் நிறுவனரான டாக்டர் ராமதாஸ். ஆனால், அப்படிப்பட்ட தொலைக்காட்சி நிர்வாகம்தான் இன்று தன் குடும்பத்தினரையே நடுத்தெருவில் நிறுத்தியுள்ளது.

மக்கள் தொலைகாட்சியில் தொடக்கத்தில் இருந்தே, அதாவது சுமார் 15 ஆண்டுகாலம் உழைத்து கொட்டிய தொழிலாளர்கள் ஒரே நாளில் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த மாத தொடக்கத்தில் ஊழியர்கள் அனைவரையும் அழைத்த மக்கள் டிவி தலைமை செயல் அதிகாரி புவனேஸ்வரி, இந்த கட்டிடத்தில் (நுங்கம்பாக்கம், சுப்பாராவ் அவென்யூ) நாம் வேலை செய்வது இந்த மாதம்தான் கடைசி என்று கூறியுள்ளார். ஊழியர்களும், கடந்த 15 ஆண்டுகளாகவே நிர்வாகம் சொல்லி வந்தது போல், மக்கள் டிவி வேறு இடத்தில் செயல்படவுள்ளது என்று நினைத்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் அங்கு வேலை பார்த்து வந்த 40க்கும் மேற்பட்டோரை அழைத்து, அவர்கள் வேலை செய்த ஜூலை மாதத்துடன் சேர்த்து கூடுதலாக ஒரு மாத சம்பளத்திற்கான காசோலையை கொடுத்து, இனி நீங்கள் வேலைக்கு வரவேண்டாம் எனக்கூறி வீட்டிற்கு அனுப்பியுள்ளது மக்கள் டிவி நிர்வாகம். மக்கள் டிவி செய்தி ஆசிரியர் பாஸ்கரசந்திரன், நிகழ்ச்சி பிரிவு தலைவர் துரைமாணிக்கம் உள்ளிட்ட உயர் பொறுப்பில் உள்ளவர்களும், இதற்கு எதிர்ப்பு ஏதும் தெரிவிக்காமல் மவுன சாட்சியாக இருந்தனர் என்று பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

வார்த்தைக்கு வார்த்தை ஏழை, எளியோர், பாட்டாளிகள், விளிம்புநிலை மக்கள் என பேசும் டாக்டர் ராமதாசின் தொலைக்காட்சி, ஒரே நாளில் 40க்கும் மேற்பட்டோரின் வாழ்க்கையில் இடியை இறக்கியுள்ளது. அதிலும் தற்போது மக்கள் டிவியில் வேலையிழந்திருக்கும் பெரும்பாலானோர் கடலூர், விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, தருமபுரி, மேட்டூர் ஆகிய மிகவும் பின் தங்கிய பகுதிகளை சேர்ந்த மிக ஏழ்மையான குடும்ப பின்னணியை கொண்டவர்கள். அவர்களுள் திருமணமாகி ஒன்றிரண்டு காலமே ஆனவர்களும், 40 வயதை கடந்தவர்களுமே அதிகம் என்பதால், திடீர் பணி நீக்கம் என்பது அவர்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

நேரம் பார்க்காமல் உழைத்து, மிக சாதாரண சம்பளத்தில், ஆண்டுக்கணக்கில் வேலை செய்தவர்களை கிள்ளு கீரை என தூக்கி எறிந்துள்ளது சௌமியா அன்புமணி தலைமையிலான மக்கள் டிவி நிர்வாகம். தொழில் தகராறு சட்டத்தின்படி, பணிநீக்கம் தொடர்பாக தொழிலாளர்களுக்கும், தொழிலாளர் நலத்துறைக்கும் மக்கள் டிவி நிர்வாகம் முறைப்படி தெரியப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், சட்டத்தை மதிக்காத மக்கள் டிவி நிர்வாகம் தன்னிச்சையாக அநியாய பணி நீக்கத்தில் ஈடுபட்டுள்ளதை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது.

தமிழக அரசும், தொழிலாளர் நலத்துறையும் உடனடியாக தலையிட்டு பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு நியாயம் வழங்க வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.

பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு நீதி கிடைக்க மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் அனைத்து வகையிலும் போராடும் என்று உறுதியளிக்கிறோம்.

Related posts

முகம்மது சுபேர் மற்றும் டீஸ்டா செடல்வாட் ஆகியோரை உடடினயாக விடுதலை செய்ய வேண்டும்

CMPC EDITOR

நக்கீரன் மற்றும் சன்டிவியின் செய்தியாளர்கள் மீது காவல்துறையினர் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது

CMPC EDITOR

ஜி டிவி ஊழியர்களுக்கு வாழ்த்துகள்

admin