CMPC
STATEMENTS / அறிக்கைகள்

கொரோனா தொற்றிலிருந்து, பத்திரிகையாளர்களை பாதுகாக்க ஊடக நிறுவனங்களுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் வேண்டுகோள்

வணக்கம்,

இந்தியாவில், கொரோனா பரவலின் இரண்டாம் அலை உச்சத்தில் உள்ள சூழ்நிலையில், தினசரி பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையில் உலக அளவில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது. அதேபோல், இறப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தமிழகத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தினசரி இறப்போர் எண்ணிக்கை 300ஐ நெருங்கியுள்ளது. இப்படிப்பட்ட ஆபத்தான சூழ்நிலையிலும், கொரோனா குறித்த விழிப்புணர்வையும், அது தொடர்பான தகவல்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை செய்வதற்காக, பத்திரிகையாளர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். இதை உணர்ந்தே, தமிழக அரசு பத்திரிகையாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்துள்ளது.

ஆகவே, பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசு மற்றும் அவர்கள் பணியாற்றும் பத்திரிகை நிறுவனங்களின் கடமையாகும். ஆகவே, தற்போதைய நெருக்கடியான சூழலை கருத்தில் கொண்டு கீழ் காணும், அவசியமான மற்றும் அவசரமான தேவைகளை பத்திரிகை மற்றும் ஊடக நிறுவனங்கள் நிறைவேற்றும்படி கேட்டுகொள்கிறோம்.

1) அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் சானிடைசர், முக கவசம் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை போதுமான அளவிற்கு நிறுவனங்கள் வழங்க வேண்டும்.

2) பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செய்தி சேகரிக்க அனுப்புவதை, இந்த இரண்டாம் அலை குறையும் வரை நிறுத்த வேண்டும்.

3) கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் இடங்களுக்கும் மற்ற மருத்துவமனைகளுக்கும் இந்த இரண்டாம் அலை குறையும் வரை, செய்தி சேகரிக்க அனுப்பக் கூடாது.

4) குறைந்த பட்சம், கொரோனா அச்சுறுத்தல் முடியும் வரையிலாவது, பிற ஊடகங்களை முந்திக்கொண்டு செய்திகளை வழங்க வேண்டும் என்று செய்தியாளர்களை வற்புறுத்தக் கூடாது.

5) உடல் நலம் குன்றியவர்களுக்கு எந்தவித முன் நிபந்தனையுமின்றி நிறவனங்கள் உடனடியாக விடுப்பு வழங்க வேண்டும்.

6) கொரோனா அறிகுறி அதிகபட்சம் 10 நாட்களுக்கு பிறகே தெரியும் என்பதால், உடல்நலக்குறைவால் விடுப்பு எடுப்பவர்களுக்கு குறைந்தது 10 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும்.

7) கொரோனா காலத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு சுழற்சி முறையில் விடுப்பு வழங்க வேண்டும். அந்தவகையில், பத்திரிகையாளர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்வதற்கான ஏற்பாட்டை, நிறுவனங்கள் செய்து தர வேண்டும்.

8) மருத்துவ செலவிற்காக பண உதவி தேவைப்படும் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் சம்பள முன் பணம் வழங்க வேண்டும்.

9) பத்திரிகையாளரோ அல்லது அவருடைய குடும்பத்தாரோ கொரோனாவால் பாதிக்கப்படும் பட்சத்தில், சம்பளத்துடன் சிறப்பு நிவாரணத் தொகையை அனைத்து நிறுவனங்களும் வழங்க வேண்டும்.

10) பல செய்தி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்குவதில்லை. அதுபோன்ற நிறுவனங்கள் இந்த சந்தர்ப்பிலாவது மருத்துவ காப்பீட்டின் அவசியத்தை உணர்ந்து, ஊழியர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் உடனடியாக மருத்துவக் காப்பீடு எடுத்துதர வேண்டும்.

இப்படிக்கு

மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம்.

Related posts

நடிகர் சங்க தேர்தல்: வாழ்த்தும்! நன்றியும்!

admin

திருநெல்வேலி மாவட்ட பிரஸ்கிளப் அலுவலகத்தை சீல் வைக்க உத்தரவிட்டிருக்கும் அம்மாவட்ட ஆட்சியரின் எதேச்சதிகார போக்கை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது.

CMPC EDITOR

தந்தி தொலைக்காட்சி நிருபர் கோகுல ரமணன் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது.

admin