மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் மே தின வாழ்த்துகள் மற்றும் 11 ஆம் ஆண்டு தொடக்க நாள் வாழ்த்துகள்

0
4

உழைப்பால் இந்த உலகத்தை கட்டியமைக்கும் பாட்டாளிகள், தங்கள் உரிமைகளை வென்றெடுத்த மே தின நாளில், பத்திரிகையாளர்கள் நாம், நமது உரிமைகளை வென்றெடுப்போம் என்று உறுதி ஏற்போம்,

பெருந்தொற்று காலத்தில் உயிரையும் பணயம் வைத்து மக்களுக்காக பணியாற்றும் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், உலக சுகாதார நிறுவனம் வழங்கியுள்ள வழிகாட்டுதலின் படி, அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அரசும், நிறுவனங்களும் மேற்கொள்வதை உறுதி செய்வோம்.

கொரோனா பேரிடர் காலத்தில் உயிரிழக்கும் பத்திரிகையாளர்களுக்கு, அவர்களின் இறப்புக்கான காரணத்தை ஆராயாமல், அவருடைய குடும்பத்திற்கு அரசு 50 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துவோம்.

கொரோனா பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு அனைத்து நிறுவனங்களும் ஒரு மாத கால விடுப்புடன் கூடிய சம்பளம் வழங்குவதுடன், அவர்களின் சிகிச்சைக்கான அனைத்து செலவுகளையும் நிறுவனங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவோம்.

பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும், அனைத்து நிறுவனங்களும் மருத்துவக் காப்பீடு செய்து தர வேண்டும் என்று வலியுறுத்துவோம்.

செய்தி தொலைகாட்சிகளில் செய்தியாளர்களே ஒளிப்பதிவு செய்யும் வேலையையும் செய்ய
வேண்டும் என்று நிர்பந்திக்கப்படுவதால், அவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படுவதுடன், ஒளிப்பதிவாளர்கள் வேலை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, செய்தியாளர்களுக்கு ஒளிப்பதிவு செய்யும் பணியை வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்துவோம்.

உழைக்கும் பத்திரிகையாளர் சட்டத்தில் (1955) தொலைகாட்சியில் பணியாற்றும் பத்திரிகையாளர்களையும் இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்வோம்.

அச்சு ஊடகத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு, சம்பளத்தை நிர்ணயிப்பதற்காக அமைக்கப்படும் சம்பள கமிட்டி (Wage board), காட்சி ஊடகத்தில் பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கும் சம்பளத்தை நிர்ணயிக்கும் வகையில் விதிமுறையில் திருத்தம் கொண்டு வர போராடுவோம்.

சம்பள கமிட்டி நிர்ணயிக்கும் சம்பளத்தை, நிரந்தர, பகுதிநேர, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் நிறுவனங்கள் வழங்கும் வகையில் விதிமுறையில் திருத்தம் கொண்டுவர போராடுவோம்.

பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனை வழங்கும் திட்டத்தை ஒவ்வொரு ஆண்டும் அரசு செயல்படுத்த வேண்டும், குறைந்த விலையில் வாடகைக்கு வீடு வழங்குவதையும், குறைந்த விலையில் குடியிருப்பு விற்பனை செய்யும் திட்டங்களையும் அரசு ஆன்லைன் மூலம் வெளிப்படையாக நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வென்றெடுப்போம்.

பத்திரிகையாளர்களின் ஓய்வூதியத்தை 25,000 ரூபாயாக உயர்த்துவதுடன், ஓய்வூதியம் பெறுவதற்கு தற்போது உள்ள நடைமுறை சிக்கல்கள் அனைத்தையும் கலைந்து எளிதில் ஓய்வூதியம் கிடைப்பதை உறுதி செய்ய அரசை வலியுறுத்தி கோரிக்கையை வென்றெடுப்போம்.

அறிவிப்புடன் நிலுவையில் இருக்கும் பத்திரிகையாளர் வாரியத்தை உடனடியாக அமைத்திட ஆவண செய்வோம்.

பத்திரிகையாளர் அமைப்புகளில், ஆண்டுக் கணக்கில் அட்டைப்பூச்சிகளைப் போல் ஒட்டிக்கொண்டிருக்கும் ஜனநாயக மறுப்பாளர்களை விரட்டியடித்து, அனைத்து பத்திரிகையாளர்களையும் உறுப்பினர்களாக சேர்த்து, அனைத்து அமைப்புகளுக்கும் தேர்தலை நடத்தி முடிப்போம் என்று உறுதியேற்போம்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்ப்போம். தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் சட்டங்களை மாற்றியமைப்போம் என உறுதியேற்போம்.

கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்க நினைக்கும் தீய சக்திகளை எந்தவித அச்சமுமின்றி எதிர்த்து வீழ்த்துவோம் என்று சபதமேற்போம்.

பத்திரிகையாளர்களின் உரிமைகளுக்காக எதற்கும் அஞ்சாமல் களம் காணும், மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தை, மேலும் பலப்படுத்துவோம் என்று உறுதியேற்போம்.