யூடியூப் சேனல்களுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது.
இந்த உத்தரவை திரும்பப் பெற தமிழ்நாடு அரசு உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமுத்தூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி பயின்ற 12 ஆம் வகுப்பு மாணவியின் மரணம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. மாணவி தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துவரும் நிலையில், மாணவியின் பெற்றோர் அதை முற்றிலும் மறுத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தி வரும் நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார் 29.08.22 அன்று இதுதொடர்பான வழக்கில் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில் மாணவி மரணம் தொடர்பாக “இணை விசாரணை” (Parallel investigation) நடத்தும் சமூக வலைதளங்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், யூடியூப் சேனல்களை முடக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாணவி மரணம் நிகழ்ந்து 3 நாட்களுக்கு மேல் காவல்துறை நடவடிக்கை எடுக்காததையும், பள்ளி நிர்வாகத்தையும் கண்டித்து பொதுமக்கள் மற்றும் அமைப்புகள் இணைந்து பள்ளிக்கூட வாயிலில் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தில் மிகப்பெரிய வன்முறையும் வெடித்தது. இந்த போராட்டம் ஊடகங்களில் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. இது தொடர்பான செய்திகள் டிஜிட்டல் ஊடகங்கள் உட்பட அனைத்து ஊடகங்களிலும் வெளியானது. அதன் பிறகே, சம்பந்தப்பட்ட ஆசிரியர்களையும், பள்ளி நிர்வாகிகளையும் காவல்துறை கைது செய்தது.
இந்த போராட்டத்திற்குப் பிறகு, இதற்கு காரணமானவர்களை கைது செய்கிறோம் என்ற பெயரில் பல அப்பாவிகளை கண்மூடித்தனமாக காவல்துறை கைது செய்ததை ஊடகங்கள் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டின. பாதிக்கப்பட்ட மக்களின் குரல்களை யூடியூப் உட்பட டிஜிட்டல் ஊடகங்கள் வெளியிட்டன.
இதேபோல், மாணவியின் மரணம் தொடர்பாக அவரது பெற்றோர், வழக்கறிஞர்கள், குழந்தைகள் நல ஆர்வலர்கள், மருத்துவர்கள் உட்பட பலர் இந்த மரணத்தில் உள்ள சந்தேகங்கள் குறித்தும், பள்ளி நிர்வாகத்தின் அலட்சியங்கள் குறித்தும், சட்டவிதிமுறைகள் மீறப்பட்டுள்ளது குறித்தும் அனைத்து ஊடகங்களிலும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
களத்திற்கு சென்று பத்திரிகையாளர்கள் நடத்திய விசாரணையில், சம்பந்தப்பட்ட அந்த பள்ளியில் ஏற்கனவே ஒரு மாணவர் உயிரிழந்ததும் அந்த மரணத்தை பள்ளி நிர்வாகம் எவ்வாறு தவறாக கையாண்டது என்பதும் தெரியவந்தது. மேலும் பல வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் மற்றும் துறைசார்ந்த நிபுணர்கள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ள கருத்துகள் இந்த வழக்கில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அந்த சந்தேகங்கள் பாதிக்கப்பட்ட பெற்றோர், நீதிக்காக நடத்தும் போராட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
இவ்வாறு, தமிழ்நாட்டு மக்களால் உற்றுநோக்கப்பட்டு வரும் இந்த வழக்கில், இதுவரை ஊடகங்கள், குறிப்பாக டிஜிட்டல் ஊடகங்கள் மேற்கொண்டுள்ள பணி மிகவும் சிறப்பானது. ஊடகங்கள் சில கேள்விகளை எழுப்பாவிட்டால் அல்லது கேள்வி எழுப்பும் பாதிக்கப்பட்ட தரப்பின் நியாயங்களை பதிவு செய்யாவிட்டால், அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களை எப்படி காப்பாற்றிக்கொள்வார்கள் என்பதற்கு பல முன் உதாரணங்களை சொல்ல முடியும். அந்த வகையில், ஊடகங்கள் வெளிக்கொண்டு வரும் பல புதிய தகவல்கள் மற்றும் கோணங்கள், விசாரணைக்கு உதவிகரமாகவே அமையும்.
ஜனநாயகத்தின் அடிநாதமாக விளங்கும் பத்திரிகைகள், அதிகார வர்க்கத்தின் அத்துமீறல்களை எதிர்த்து கேள்வி எழுப்ப, எந்த வித சட்டப்பூர்வ தடையும் இருக்கக் கூடாது என்பதற்காகவே இந்திய அரசியல் சாசனத்தை வடிவமைத்த நமது தலைவர்கள், கருத்துச் சுதந்திரத்தை அடிப்படை உரிமையாக்கியுள்ளனர். இந்த உரிமையின் அடிப்படையில் செயல்படும் பத்திரிகையாளர்களை பேசக்கூடாது என்பதும், பேசினால் நடவடிக்கை பாயும் என்று உத்தரவிடுவதும் அரசியல் சாசனத்திற்கு எதிரானது.
கருத்து சுதந்திரத்தை பேசும் அதே அரசியல் சாசனம், அதற்கான வரையறையையும் வகுத்துள்ள நிலையில், அந்த வரையறை மீறப்படுவதாக யாரும் கருதினால், அவர்கள் நீதிமன்றத்தையோ அல்லது பிற சட்டப்பூர்வ அமைப்புகளையோ நாடுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஊடகங்கள் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை பேசவே கூடாது என்று உத்தரவிடுவதும், அப்படி பேசினால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுவதும் அரசியல் சாசனத்திற்கே எதிரானது.
ஆகவே, கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக டிஜிட்டல் ஊடகங்கள் இணை விசாரணை நடத்தக் கூடாது என்றும், அதுகுறித்து செய்தி வெளியிடும் யூடியூப் சேனல்களை முடக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை தவறான முன்னுதாரணமாகவே மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கருதுகிறது.
ஆகவே, இந்த உத்தரவை திரும்பப்பெறுவதற்கான வகையில் தமிழ்நாடு அரசு உரிய சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.