சாதிய பாகுபாட்டை வெளிக்கொண்டு வந்த நியூஸ் தமிழ் செய்தியாளரை மிரட்டும் திமுகவினரை மாற்றத்திற்கான ஊடகவியலளார்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க அமைப்பு வலியுறுத்துகிறது.
கடந்த வியாழக்கிழமை (18.08.22) திருவள்ளுர் மாவட்டம், ஈகுவார் பாளையம் ஊராட்சியில் அரசு சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த விழாவில், பட்டியல் வகுப்பைச் சேர்ந்த வட்டாட்சியர் கண்ணன் மற்றும் இடைநிலை சாதியைச் சேர்ந்த துணை வட்டாசியர் ஜெயச்சந்திரன் கலந்துகொண்டுள்ளனர். இதில், வட்டாட்சியர் கண்ணன் அமர்வதற்கு மேடையில் இருக்கை ஒதுக்கப்படவில்லை. ஆனால், துணை வட்டாசியர் ஜெயச்சந்திரன் அமர்வதற்கு இருக்கை அளிக்கப்பட்டுள்ளது. நிகழ்வு முழுவதும் வட்டாட்சியர் கண்ணன் மேடையில் நின்று கொண்டிருந்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, அரசு விழாவில், வட்டாட்சியருக்கு இருக்கை ஒதுக்கப்படாதது குறித்து, நியூஸ் தமிழ் தொலைகாட்சியின் திருவள்ளுர் மாவட்ட செய்தியாளர் பிரபு அளித்த செய்தி மற்றும் அதற்கு ஆதாரமான வீடியோ பதிவுகளின் அடிப்படையில் நியூஸ் தமிழ் தொலைகாட்சியில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜனின் உதவியாளர் யுவராஜ், செய்தியாளர் பிரபுவை தொலைபேசியில் அழைத்து அந்த செய்தியை நீக்கச்சொல்லி மிரட்டியுள்ளார். இதற்கு பிரபு சம்மதிக்காததைத் தொடர்ந்து “இதற்கு நீங்களும் உங்கள் சேனலும் பின்விளைவுகளை சந்திப்பீர்கள்” என்று யுவராஜ் வெளிப்படையாக மிரட்டியுள்ளார்.
அதைத்தொடர்ந்து பலர், தங்களை திமுகவினர் என்று கூறிக்கொண்டு, செய்தியாளர் பிரபுவை தொலைபேசியில் அழைத்து தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.
உள்ளாட்சி அமைப்புகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள், தரையில் அமரவைக்கப்படுவது, தேசியக் கொடியேற்ற அனுமதி மறுக்கப்படுவது, மேலும் பல வகையில் சாதி ரீதியாக துன்புறுத்தப்படுவது தொடர்பான செய்திகள் தொடர்ந்து வெளிவந்துகொண்டே இருக்கின்றன.
இந்த செய்திகள் வெளியான பிறகே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதும், பட்டியல் சமூகத்தினருக்கு சட்டப்பூர்வமாக கிடைக்க வேண்டிய உரிமை கிடைப்பதையும் நாம் பார்த்து வருகிறோம். ஆகவே, சாதி ரீதியாக பாகுபாடு காட்டப்படுவதை செய்தியாக வெளியிட வேண்டியது ஒரு நல்ல செய்தியாளரின் கடமை. அந்த கடமையைத்தான் பிரபு செய்துள்ளார்.
பிரபு வெளியிட்ட செய்தியில் உண்மை உள்ளது என்பதற்கான ஆதாரம், அந்த நிகழ்வை பதிவு செய்துள்ள வீடியோ. அந்த வீடியோவில், விழா முழுவதும் வட்டாட்சியர் கண்ணன் மேடையில் ஓரமாக நின்று கொண்டிருக்க, துணை வட்டாட்சியர் ஜெயச்சந்திரன் மேடையில் அமர்ந்திருப்பது தெளிவாக தெரிகிறது. இதை ஆதாரமாக வைத்தே பிரபு செய்தி வழங்கியுள்ளார். அந்த ஆதாரத்தின் அடிப்படையிலேயே நியூஸ் தமிழ் அதை செய்தியாக வெளியிட்டுள்ளது.
ஆகவே, செய்தியாளர் பிரபுவை மிரட்டியுள்ள சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜனனின் உதவியாளர் யுவராஜ் மற்றும் திமுவினர் மீது கட்சி ரீதியாகவும், சட்டப்படியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.