மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் விடுவிக்கப்பட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி.
அதேநேரம், சட்டத்தை மீறி செயல்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம்.
தமிழ்நாட்டின் பல முன்னணி பத்திரிகை நிறுவனங்களில் பணியாற்றியவர் சாவித்திரி கண்ணன். தற்போது அறம் ஆன்லைன் செய்தி தளத்தை நடத்தி வருகின்றார். அந்த இணையதளத்தில் கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக பல செய்திகளை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் இன்று (11.09.22) காலை 11 மணியளவில் சென்னையில் உள்ள சாவித்திரி கண்ணன் இல்லத்திற்கு வந்த கள்ளக்குறிச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினர் அவரை வலுக்கட்டாயமாக இழுத்து வாகனத்தில் ஏற்றி கள்ளக்குறிச்சி சைபர் கிரைம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
காவல்துறையின் இந்த நடவடிக்கையை கண்டித்து பத்திரிகையாளர் அமைப்புகள், மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், ஜனநாயக அமைப்புகள் அறிக்கைகளை வெளியிட்டனர்.
இதைத்தொடர்ந்து, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் அடிப்படையில், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கில் விசாரிப்பதற்காக 11.09.2022 அன்று மாலை 4 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் காவல் நிலையத்தில் ஆஜராக சாவித்திரி கண்ணனுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டதாகவும், அதன்படி அவர் காவல் நிலையத்தில் ஆஜரானதாகவும் விசாரணைக்குப் பிறகு சட்டப்பூர்வமான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் அவர் விடுவிக்கப்பட்டதாகவும் ஒரு அறிவிப்பை கள்ளக்குறிச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை வெளியிட்டுள்ளது.
11.09.2022 அன்று காலை 11 மணிக்கு சென்னையிலிருந்து தடாலடியாக சாவித்திரி கண்ணனை இழுத்துச் சென்ற காவல்துறை, கண்டனங்கள் எழுந்ததை தொடர்ந்து, அவர் அன்றைய தினம் மாலை 4 மணிக்கு ஒலக்கூர் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று ஏற்கனவே அவருக்கு அழைப்பாணை வழங்கப்பட்டதாகவும், அதன்படி அவர் ஆஜரானதாகவும், அதைத்தொடர்ந்து விசாரணைக்குப் பிறகு அவர் சட்டப்படியான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் விடுவிக்கப்பட்டதாகவும் ஒரு ஜோடிக்கப்பட்ட ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆகவே, சட்டத்திற்குப் புறம்பாக, மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணனை வீட்டிலிருந்து இழுத்துச்சென்ற காவல்துறையினர் மீது தமிழ்நாடு காவல்துறை தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவிலயாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.
செய்தி வெளியிட்ட காரணத்திற்காக சாவித்திரி கண்ணன் மற்றும் பிற பத்திரிகையாளர்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை உடனே ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கிறோம்.