நக்கீரன் இதழின் செய்தியாளர் தாமோதரன் பிரகாஷ் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் பத்திரிகை சுதந்திரத்தின் மீது விழுந்துள்ள மரண அடி.
தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை உடனே கைது செய்ய வேண்டும். தாக்குதலின் பின்னணி குறித்து விசாரிக்க அரசு சிறப்பு விசாரணைக் குழுவை உடனே அமைக்க வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.
நக்கீரன் இதழில் முதன்மை சிறப்பு செய்தியாளராக பணியாற்றும் தாமோதரன் பிரகாஷ், இன்று (19.09.22) கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் பள்ளி மாணவி மரணம் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்றபோது, குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளார். அவருடன் சென்ற புகைப்படக் கலைஞர் அஜித்குமாரும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளார். பத்திரிகையாளர்கள் சென்ற வாகனத்தின் மீதும் தாக்குதல் நடத்திய குண்டர்கள், அவர்கள் வாகனத்தை விரட்டிச் சென்றும் வெறிச் செயலில் ஈடுபட்டுள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான தாமேதரன் பிரகாஷ் மற்றும் அஜித்குமார் தற்போது ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் மரணமடைந்தது குறித்து தொடர்ந்து பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ், அந்த பள்ளி குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற இடத்தில் தாக்கப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. மாணவி மரணத்தை தொடர்ந்து, பள்ளி நிர்வாகத்தின் சந்தேகத்திற்குறிய நடவடிக்கைகளை நக்கீரன் இதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்த நிலையில், பத்திரிகையாளர் பிரகாஷ் மீது நடைபெற்றுள்ள இந்த தாக்குதல், யாருடைய தூண்டதலின் பேரில் நடந்தது என்ற மிக முக்கியமான கேள்வியை எழுப்பியுள்ளது.
மூத்த பத்திரிகையாளரான தமோதரன் பிரகாஷ், சங்கரராமன் கொலை வழக்கு, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு உட்பட தமிழ்நாட்டையே உலுக்கிய பல முக்கிய வழக்குகளில் பல உண்மைகளை வெளிக்கொண்டு வந்தவர். இவ்வாறு அனைவராலும் அறியப்பட்ட மிக முக்கியமான பத்திரிகையாளர் மீது நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல் பத்திரிகையாளர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆகவே, இந்த தாக்குதல் நடத்தியவர்களை உடனே கைது செய்வதுடன், இந்த தாக்குதலின் பின்னணியையும் கண்டறியும் வகையில் இதுகுறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழுவை தமிழ்நாடு காவல்துறை அமைக்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலளார்கள் சங்கம் வலியுறுத்துகிறது.
தாக்குதலுக்குள்ளான பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் அஜித்குமாருக்கு உடனடியாக நிவாரணம் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.
தமிழ்நாட்டில் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தேவையான அனைத்து நடவடிக்கையையும் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலளார்கள் சங்கம் வலியுறுத்துகிறது.