மழைநீர் வடிகால் குழியில் விழுந்து பத்திரிகையாளர் பலி! அரசின் அலட்சியத்திற்கு வன்மையான கண்டனம்! உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது!
சென்னையின் பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியும் அவற்றை புதுப்பிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. காலம் தாழ்த்தி இந்தப் பணிகள் செய்யப்பட்டு வருவதாகவும், ஆங்காங்கே குழிகள் வெட்டப்பட்டு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் விடப்பட்டிருப்பதாகவும் பல்வேறு ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தன.
மக்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு, செய்தி வெளியிட்டு வந்த ஊடகத்துறையைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவரே அந்த குழிக்கு பலியாகியுள்ளார்.
புதியதலைமுறை தொலைகாட்சியின் டிஜிட்டல் பிரிவில் பணியாற்றி வந்த முத்துகிருஷ்ணன், தென்காசி மாவட்டத்தின் புளியங்குடி என்ற கிராமத்தை சேர்ந்தவர். 24 வயதான முத்துக் கிருஷ்ணன் இதற்கு முன்னர் விகடன் நிறுவனத்தில் மாணவர் பத்திரிகையாளராகவும் பணியாற்றியுள்ளார்.
நேற்று (22.10.22) மதியப் பணியில் இருந்த முத்துக்கிருஷ்ணன், இரவு சுமார் 10.30 மணியளவில், ஈக்காடுதாங்கலில் உள்ள புதியதலைமுறை தொலைகாட்சி அலுவலகத்திலிருந்து பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது, காசி திரையரங்கம் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தபோது அங்கே வெட்டப்பட்டு, ஆபத்தான நிலையில் விடப்பட்டிருந்த மழைநீர் வடிகால் குழியில் தவறி விழுந்துள்ளார். உடனே மயக்கமடைந்துள்ள முத்துக்கிருஷ்ணனுக்கு, உடலின் உட்புறத்தில் பலத்த காயம் ஏற்பட்டு அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சுமார் அரை மணிநேரத்திற்கும் மேல் கேட்பாரற்று குழியில் விழுந்து கிடந்த முத்துக்கிருஷ்ணனை காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் மீட்டுள்ளார். அதைத்தொடர்ந்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முத்துக்கிருஷ்ணன் பின்னர் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இன்று (23.10.22) மதியம் முத்துக்கிருஷ்ணன் மரணமடைந்துள்ளார்.
சென்னை முழுவதும் வெட்டப்பட்டுள்ள மழைநீர் வடிகால் குழிகள் சரியாக மூடப்படாமலும், கம்பிகள் நீட்டியபடியும் ஆபத்தான வகையில் இருப்பதை பத்திரிகைகளும், ஊடகங்களும் தொடர்ந்து சுட்டிக்காட் வந்தன. இந்நிலையில், பத்திரிகையாளர் ஒருவரே அந்தக் குழியில் விழுந்து பலியாகியிருப்பது பெரும் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முத்துக்கிருஷ்ணன் மரணத்திற்கு அரசு மற்றும் அரசு அதிகாரிகளின் அலட்சியமே காரணம். ஆகவே, கடமை தவறியவர்கள் மீது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பதுடன், உயிரிழந்த முத்துக்கிருஷ்ணன் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.
இனியும் இதுபோன்றதொரு உயிர்பலி ஏற்படாமல் தவிர்க்கும் வகையில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.