CMPC
STATEMENTS / அறிக்கைகள்

பத்திரிகையாளர்களிடம் தரக்குறைவாக நடந்துகொண்ட பாஜகவினர் – வன்மையான கண்டனம்

பத்திரிகையாளர்களிடம் தொடர்ந்து கீழ்த்தரமாக நடந்துகொள்ளும் பாஜகவினரை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

இன்று (13.10.22) அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு வரவேற்பு கொடுக்கும் நிகழ்ச்சி சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டதை தொடர்ந்து பத்திரிகையாளர்கள் அங்கு சென்றனர்.

பாஜக அலுவலக வாயிலில் பத்திரிகையாளர்கள் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்திருந்த பெண் ஒருவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். உடனே அவரைச் சுற்றி கூட்டம் கூடவே அங்கு என்ன நடக்கிறது என்பதை அறிவதற்காக செய்தியாளர்களும், ஒளிப்பதிவாளர்களும் சென்றுள்ளனர். உடனே அங்கிருந்த பாஜக தொண்டர்கள் செய்தியாளர்களை தடுத்து நிறுத்தி, கேமராவை தள்ளியதுடன், ஒளிப்பதிவாளர்களையும் பிடித்து தள்ளியுள்ளனர். மேலும், மிகவும் தகாத வார்த்தைகளில் பத்திரிகையாளர்களை திட்டியுள்ளனர். பெண் பத்திரிகையாளர்களும் அங்கிருந்த நிலையில், அருவெறுக்கத்தக்க வார்த்தைகளை பாஜக தொண்டர்கள் பயன்டுத்தியுள்ளனர். அத்துடன் “டீ, பிஸ்கட் சாப்பிடத் தானே இங்கே வருகிறீர்கள், அதை சாப்பிட்டுவிட்டு செல்லுங்கள்” என்று தரக்குறைவாக பேசியுள்ளனர்.

இந்த கீழ்த்தரமான நடவடிக்கையை தட்டிக்கேட்ட பத்திரிகையாளர்களை பாஜக தொண்டர்கள் தாக்கப் பாய்ந்துள்ளனர். அப்போது அங்கு வந்த பாஜக ஊடகப் பிரிவுத் தலைவர் ஸ்ரீரங்காவிடம் பத்திரிகையாளர்கள் முறையிட்டுள்ளனர். பத்திரிகையாளர்களிடம் கீழ்த்தரமாக நடந்துகொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, அராஜகத்தில் ஈடுபட்ட பாஜகவினர் அங்கிருந்து தப்பி செல்வதற்கு மறைமுகமாக உதவியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, அங்கு வந்த பாஜக மாநிலத்துணைத் தலைவர் கரு.நாகராஜனிடம் பத்திரிகையாளர்கள் புகார் அளித்துள்ளனர். அவரும் இந்த அராஜக நடவடிக்கையை கண்டிக்காமல், மழுப்பலாக பதில் அளித்துள்ளார். இறுதியாக பாஜக அலுவலகத்திற்கு வந்த அண்ணாமலையிடமும் பத்திரிகையாளர்கள் நடந்ததை விளக்கியுள்ளனர். ஆனால், நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் இருக்கும் அண்ணாமலை இதுகுறித்து நிர்வாகிகளிடம் விசாரிக்காமல், தட்டிக்கழித்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

பாஜக நடத்தும் செய்தியாளர்கள் சந்திப்பு மற்றும் பிற நிகழ்ச்சிகளில் செய்தி சேகரிக்கச் செல்லும் பத்திரிகையாளர்கள் இதுபோன்று அச்சுறுத்தப்படுவதும், கீழ்த்தரமாக நடத்தப்படுவதும் இது முதல்முறையல்ல. பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா செல்லும் இடமெல்லாம் பத்திரிகையாளர்களை கேவலமாக பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை பணம் வாங்கிக்கொள்ளுங்கள் என்று வெளிப்படையாக செய்தியாளர் சந்திப்பில் கூறினார். சில மாதங்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்திருந்த நிகழ்வை செய்தி சேகரிக்கச் சென்ற பெண் பத்திரிகையாளரிடம் பாஜக தொண்டர்கள் மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொண்டனர். இவ்வாறு, பாஜகவின் தலைவர்கள் தொடங்கி தொண்டர்கள் வரை, பத்திரிகையாளர்ளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாகியுள்ளது.

பத்திரிகையாளர்கள் தினந்தோறும் பல அரசியல் கட்சிகளின் அலவலகங்களுக்கு செல்கின்றனர், பல கட்சி தலைவர்களின் செய்தியாளர்கள் சந்திப்பிற்கு செல்கின்றனர். ஆனால், அங்கெல்லாம் இவ்வாறு நடைபெறுவதில்லை.

ஆகவே, இன்று நடைபெற்ற அநாகரீகமான செயலுக்கு காரணமானவர்கள் மட்டுமல்லாமல் இதற்கு முன்னர் நடைபெற்ற இதுபோன்ற நிகழ்வுகளுக்கும் பொறுப்பானவர்கள் மீது பாஜக தலைமை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.

நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பில் உள்ள பாஜக தலைவர்களே பத்திரிகையாளர்களை தரக்குறைவாக நடத்தும் அநாகரீக நடவடிக்கையை உடனே மாற்றிக்கொள்ள வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.

பத்திரிகையாளர்களை தொடர்ந்து தரக்குறைவாக நடத்தும் மற்றும் அச்சுறுத்தும் பாஜகவை, அவர்கள் இந்த கீழ்த்தரமான நடவடிக்கைகளை கைவிடும் வரை, புறக்கணிக்க வேண்டும் என பத்திரிகை மற்றும் ஊடக நிறுவனங்களை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் அழுத்தமாக கேட்டுக்கொள்கிறது.

Related posts

புதிய தலைமுறை செய்தியாளர் மற்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு எதிராக கோவை மாநகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருப்பதை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது

CMPC EDITOR

கேப்டன் தொலைக்காட்சி செய்தியாளர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் நடந்தது என்ன? – விளக்க அறிக்கை

admin

மக்கள் தொலைகாட்சியில் தொழிலாளர்கள் பணிநீக்கம் – மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கண்டனம்

CMPC EDITOR