தமிழகத்தில் கருத்து சுதந்திரத்தின் நிலைகுறித்து, மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கை

0
419

தமிழகத்தில் கருத்து சுதந்திரத்தின் நிலைகுறித்து, மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கை

கருத்து சுதந்திரம் ஒரு அறிமுகம்

       ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று அழைக்கப்படும் ஊடகத்துறை, சுதந்திரமானதாகவும், எந்த வித பக்கசார்பும் இல்லாததாக இருப்பது, அது செயல்படும் அந்த குறிப்பிட்ட நாட்டின் ஜனநாயகத்தை அளக்கும் முக்கிய அளவுகோளாக அமைகின்றது.

 

இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 19 (1) வழங்கியுள்ள கருத்துரிமையே, பத்திரிகை சுதந்திரத்தை உறுதிப்படுத்துகின்றது.  இருந்தபோதும் இந்தியாவில், ஊடகங்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட, அவசரநிலை காலத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அவசரநிலை நடைமுறையில் இருந்த, அந்த காலத்திலும் கூட, அரசின் அடக்குமுறைகளை எதிர்த்து ஊடகத்துறையினர் பல்வேறு வகையில் தங்கள் எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர். அனைத்து ஜனநாயக சக்திகளுடன் கைகோர்த்து, கருத்து சுதந்திரத்தை மீட்டெடுப்பதற்கான பேராட்டங்களில் தங்களை ஈடுபத்திக்கொண்டனர்.

 

ஜனநாயக சக்திகளின் தொடர்பேராட்டங்களின் காரணமாக, கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நெறித்த ஆட்சியாளர்கள், மக்கள் மன்றத்திலிருந்து தூக்கியெறியப்பட்டனர். இது கடந்த கால வரலாறு.

 

அவசரநிலை மட்டுமல்லாமல், பல்வேறு காலங்களில் அரசியல், சாதி, மதம் மற்றும் இன ரீதியான காரணங்களை முன்வைத்து, பத்திரிகை சுதந்திரத்தை முடக்கும் நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெற்று வந்துள்ளன. இந்தநிலை தற்போதும் தொடரவே செய்கின்றது.

 

இது ஒருபுறமிருக்க, சமீப காலங்களில், சமூக வளைதளங்களில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் தனிநபர்கள், கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகம் அரங்கேறின. அதுவும், அதிகாரம் படைத்தவர்கள் மீது வைக்கப்பட்ட ஆக்கபூர்வமான விமர்சனங்களும் கூட, வேண்டுமென்றே தவறாக அர்த்தப்படுத்தப்பட்டு, அந்த கருத்துக்களை வெளியிட்ட தனிநபர்கள் கைது செய்யப்பட்டனர். தகவல் தொழில்நுட்ப சட்டத்தின், பிரிவு 66 (அ) வின் அடிப்படையில், பெரும்பாலான கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த கைது நடவடிக்கைக்கு, இளம் பெண்கள், கல்லூரி பேராசிரியர்கள், கேளிச்சித்திர கலைஞர்கள் என யாரும் தப்பவில்லை.

 

இந்த நிலையில், அதிகாரம் படைத்தவர்களால், தவறாக பயன்படுத்தப்பட்டு வந்த, தகவல் தொழில்நுட்ப சட்டத்தின், பிரிவு 66 (அ) வை, ரத்து செய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம், கருத்து சுதந்திரத்தை நிலைநாட்டும் வகையிலான ஒரு தீர்ப்பை தற்போது வழங்கியுள்ளது. அதாவது, அந்த குறிப்பிட்ட சட்டப்பிரிவை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவுபிறப்பித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு, ஊடகத்துறையினராலும், கருத்து சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாலும், மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

 

இந்நிலையில், தமிழகத்தை பொறுத்தவரை கருத்துரிமைக்கு எதிரான நடவடிக்கைகள் சமீபகாலங்களில் பெருகிவருவதை பார்க்கமுடிகின்றது. அதுவும், தமிழக மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட பிற்போக்கு கருத்துகளை முன்னிறுத்தி இந்த கருத்து சுதந்திர ஒடுக்குமுறைகள் முன்னெடுக்கப்படுவது பத்திரிகையாளர்களுக்கும், ஜனநாயக சக்திகளுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தங்கள் பணி செய்யும் களங்களில் பத்திரிகையாளர்கள் தாக்குதலுக்குள்ளாகும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

 

தமிழகத்தில் கருத்துரிமையின் நிலை எழுத்தாளர்களுக்கு எதிரான மிரட்டல்கள்

 

மாதொரு பாகன் என்ற நாவல் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சை சமீபத்தில் தமிழகத்தில் கருத்துரிமைக்கு எதிராக நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்கதலாக குறிப்பிடலாம்.  திருச்செங்கோட்டை சேர்ந்த பெருமாள் முருகன் என்ற எழுத்தாளர் மாதொரு பாகன் என்ற நாவலை 2011 ஆம் ஆண்டு வெளியிட்டார். சமீபத்தில் அந்த நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியானது. அது தொடங்கி, அந்த நவாலில் குறிப்பிட்ட சாதியினர் தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக, சில சாதிய அமைப்புகள் குற்றச்சாட்டுகளை வைத்தனர். அந்த சாதிய அமைப்பைச் சேர்ந்தவர்கள், பெருமாள் முருகன் மீது தாக்குதல் நடத்தவும் முற்பட்டனர். இறுதியாக, மாவட்ட நிர்வாகம், காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில், சாதிய அமைப்புகளுக்கும், பெருமாள் முருகனுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, பெருமாள் முருகன் வெளியிட்ட அறிக்கை, கருத்து சுதந்திரத்தின் மீது தீரா காதலை கொண்டவர்களை மட்டுமல்லாமல், அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

 

பெருமாள் முருகன் என்று எழுத்தாளன் இறந்துவிட்டான் என்று பெருமாள் முருகனே தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது, அந்த படைப்பாளி எப்படிப்பட்டு நெருக்கடிக்கும், அச்சுறுத்தலுக்கும் ஆளாக்கப்பட்டான் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம். இதை தொடர்ந்து, பெருமாள் முருகனுக்கு அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைந்து ஆதரவை தெரிவித்தனர். கட்டப்பஞ்சாயத்து நடத்திய மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மீதும், காவல்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். ஆனால், எந்தகோரிக்கையும் நிறைவேறவில்லை. இறுதியாக, பெருமாள் முருகன், தனது பணியிடத்தை மாற்றம் செய்து கொண்டு, சென்னையில் தற்போது வசித்து வருகின்றார்.

 

இதேபோல், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த புலியூர் முருகேசன் என்ற எழுத்தாளரின் பாலச்சந்திரன் என்றொரு பெயரும் எனக்குண்டு என்ற நாவலுக்கு, சாதிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. தங்கள் சாதியை தறக்குறைவாக புலியூர் முருகேசன் தனது நாவலில் குறிப்பிட்டிருப்பதாக கூறி, அவர் மீது தாக்குதலையும் நடத்தினர். அத்துடன் நிற்காமல், புலியூர் முருகேசன் மீது காவல்துறை வழக்கு பதிவும் செய்தது.

 

ஊடக நிறுவனம் மீது தாக்குதல்

 

தமிழகத்தை பொறுத்தவரை, மூடநம்பிக்கைகளுக்கும், மத மற்றும் சாதிய சடங்குகளுக்கு எதிராகவும் சமூக வெளியில் மிகச் சாதாரணமாக கருத்துக்கள் முன்வைக்கப்படும்.  பெரியார் தொடங்கிய, சுயமரியாதை இயக்கமும், அதன் வழித்தோன்றல்களான, திராவிட இயக்கங்களும், தமிழகம் முழுவதும் சமூக கலாச்சார தளத்தில் ஏற்படுத்திய தாக்கமே இதற்கு காரணம்.

 

இந்நிலையில், சமீபத்தில் புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சி நடத்தவிருந்த, விவாத நிகழ்ச்சியில்,  பெண்களுக்கு தாலி பெருமை சேர்க்கின்றதா? அல்லது சிறுமை சேர்க்கின்றதா? என்ற தலைப்பை தேர்ந்தெடுத்தனர். இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாவதற்கான முன்னோட்டம் வெளியானதை தொடர்ந்து, வலதுசாரி அமைப்பை சேர்ந்த குண்டர்கள், புதிய தலைமுறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த பேராட்டத்தை ஒளிப்பதிவு செய்த, ஒளிப்பதிவாளரை அந்த குண்டர்கள் தாக்கியதுடன், அவருடைய ஒளிப்திவு கருவியையும் சேதப்படுத்தினர்.

 

இந்த நிகழ்வுகள் அனைத்தும், பாதுகாப்பிற்காக அங்கு நின்று கொண்டிருந்த காவல்துறையினரின் கண்முன்னே நடந்தது என்பது மிகப்பெரிய அவலம். இதில் கவனிக்க வேண்டிய விஷயம், அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பை நிறுத்திக்கொள்வதாக புதிய தலைமுறை அறிவித்த பிறகும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

 

இத்துடன் இந்த சம்பவம் முடிந்துவிடவில்லை. அடுத்த சில நாட்களில். அதிகாலை சுமார் மூன்று மணியளவில், புதிய தலைமுறை அலுவலகத்தின் மீது சில அடையாளம் தெரியாத நபர்கள் டிபன் பாக்ஸ் வெடி குண்டை வீசிச்சென்றனர். அதிர்ஷ்ட வசமாக, அந்த வெடி குண்டு, மிக மிக சக்தி குறைந்தது என்பதால், எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று, வலதுசாதி இந்து அமைப்பை சேர்ந்த ஒருவன், மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தான். அதைத்தொடர்ந்து சென்னையில் சிலரை காவல்துறையினர் கைது செய்தனர். இருந்தபோதும், புதிய தலைமுறை மீதான அச்சுறுத்தல்கள் குறையவில்லை. அந்த நிறுவனத்தில் பணியாற்றும் செய்தியாளர்கள் சிலரை குறிவைத்து, சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவதூறுகள் பரப்பப்பட்டு வருகின்றன. அதேபோல், இந்த செயலை கண்டித்த, செய்தியாளர்கள் மீது அவதூறுகள் பரப்பப்பட்டு வருகின்றன.

 

ஒரு ஊடக நிறுவத்தின் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் தொடர்பாக அரசு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமான விளக்கம் எதுவும் இதுவரை அளிக்கப்படவில்லை.

 

ஊடகங்கள் மீது அரசு தொடரும் அவதூறு வழக்குகள்

 

அரசு சிறப்பாக செயல்படும்போது அது குறித்து செய்தி வெளியிடும் ஊடங்களுக்கு, அரசு அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் தவறுகளை சுட்டிக்காட்டும் கடமை மிக முக்கியமானது. ஆனால், தமிழகத்தில் ஊடகங்கள் இந்த கடமையை செய்வது மிகக்கடிமாகவே உள்ளது.

 

தமிழகத்தில் திமுக, அதிமுக என எந்த கட்சி ஆட்சியிலிருந்தாலும், அவர்கள் ஆட்சிகாலத்தில், ஊடங்களுக்கு எதிராக தொடரப்படும் அவதூறு வழக்குகளுக்கு மட்டும் குறைவிருக்காது. இந்த அவதூறு வழக்குகள் தொடர்வதன் மூலம், அந்த குறிப்பிட்ட செய்தியை சேகரித்த செய்தியாளர், ஆசிரியர், வெளியீட்டாளர் என அனைவரும், நீதிமன்றத்திற்கு அலைக்கழிக்கப்படுவதன் மூலம் எதிர்காலத்தில், அந்த ஊடக நிறுவனம் அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிடாமல் தடுப்பதே இதன் நோக்கம் என்று எண்ணத்தோன்றுகின்றது. ஏனெனில், இதுநாள் வரை ஊடகங்களுக்கு எதிராக தமிழகத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் எதிலும், எந்த ஊடகவிலாளர்களும் பெரிய தண்டணை எதையும் பெற்றது கிடையாது.

 

இதில் அதிமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அவதூறு வழக்கு தொடர்வதில் மிக விசித்திரமான முறை கையாளப்பட்டது. அதாவது, ஒரு ஊடகம் வெளியிட்டதாக கருதப்படும் அவதூறு செய்திக்கு எதிராக, அரசு தரப்பில் வழக்கு தொடரப்படும்போது, அது அச்சு ஊடகமாக இருக்கம் பட்சத்தில், அந்த செய்தியை சேகரித்த செய்தியாளர், செய்தி ஆசிரியர், வெளியீட்டாளர், உரிமையாளர் எதிர் தரப்பினராக சேர்க்கப்படுவார்கள். அது காட்சி ஊடகமாக இருக்கும்பட்சத்தில், செய்தியாளர், செய்தி ஆசிரியர் மற்றும் உரிமையாளர் வழக்கில் எதிர் தரப்பினராக சேர்க்கப்படுவார்கள். ஆனால், அதிமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்தின் பிரதான எதிர்கட்சியான, தேமுதிக ஆதரவு தொலைக்காட்சி கேப்டன் டி.வி செய்தி ஊடகத்திற்கு எதிராக பல வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகளில், முன் எப்போதும் இல்லாமல், அந்த குறிப்பிட்ட செய்தியை வாசித்த செய்தி வாசிப்பாளர்களும் எதிர் தரப்பினராக சேர்க்கப்பட்ட மிகக் கேவலமான நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

 

இதன் மூலம், ஒரு ஊடகம் வெளியிடும் செய்திக்கு, அதற்கு சம்பந்தமே இல்லாத நபர்கள் உட்பட, கடைநிலை பணியாளர்கள் வரை அதற்கு காரணம் என்று நிறுவவிரும்புகிறதோ என்று எண்ணத்தோன்றுகின்றது. இந்த எண்ணத்தின் மூலம் ஒட்டுமொத்த ஊடகப்பணியாளர்களை அவதூறு வழக்கு என்ற ஆயுதம் கொண்டு அச்சுறுத்தப்பார்க்கின்றதோ என்றும் எண்ணத்தோன்றுகின்றது. இதுவே, அரசின் உண்மையான எண்ணம் என்றாகும்பட்சத்தில், இது பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான அரசு தொடுக்கம் அப்பட்டமான தாக்குதல் என்றே பார்க்க வேண்டும்.

 

பணியின் போது செய்தியாளர்கள் மற்றும் செய்திப்பணியாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள்

 

செய்தி சேகரிக்கச் செல்லும் இடத்தில், குண்டர்களாலும், அரசியல்வாதிகளாலும், பாதுகாப்பு பணியாளர்களாலும், காவல்துறையினராலும், செய்தியாளர்கள் மட்டுமின்றி, புகைப்பட கலைஞர்கள், ஒளிப்பதிவாளர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள், ஓட்டுனர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் தாக்குதலுக்குள்ளான சம்பவங்கள் தமிழகத்தில் சமீப காலங்களில் பல நிகழ்ந்துள்ளன. அதில் சில முக்கிய நிகழ்வுகளை பார்ப்போம்….

 

நிகழ்வு 1:

கேப்டன் டிவி செய்தியாளர்கள் குழு தங்கள் பணியின் நிமித்தமாக சென்று கொண்டிருந்தபோது, கோயம்பேடு அருகே, அவர்களுக்கும் அதிமுகவை சேர்ந்தவர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து, கேப்டன் டிவி பெண் செய்தியாளர் உட்பட, வாகன ஓட்டுனர், ஒளிப்பதிவாளர்  என அனைவரும் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக கோயம்பேடு காவல் நிலையத்தில் செய்தியாளர்கள் சார்பாக புகார் அளிக்கப்பட்டது. ஆனால், காவல்துறை ஆய்வாளர் புகாரை ஏற்றுக்கொள்ள மறுக்கவே, அங்கு அனைத்து பத்திரிகையாளர்களும், தாக்குதலுக்குள்ளான பத்திரிகையாளர்களுக்கு ஆதரவாக குவியத்தொடங்கினர். அன்றைய தினம் காலையில் அளிக்கப்பட்ட புகார் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாத காவல்துறையினர், அனைத்து பத்திரிகயைளர்களும் கூடிய பிறகு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய ஒப்புக்கொண்டனர். அதாவது புகார் கொடுத்த சுமார் 12 மணி நேரம் கழித்து ஒப்புக்கொண்டனர்.

 

பெண் செய்தியாளர் உட்பட, செய்திக்குழுவை கடுமையாக தாக்கிய அந்த நபர்கள் மீது, மிக மிக சாதாரண பிரிவின் கீழ் புகார் பதிவு செய் முற்பட்டது காவல்துறை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பத்திரிகையாளர்கள், குறைந்தபட்சம், பிணையில் வெளிவராத பிரிவில் அவர்கள் மீது வழக்கு பதிவ செய்ய வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை காவல்துறை ஏற்றுக்கெள்ளவில்லை. எனவே, தங்களின் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தியும், காவல்துறை நடவடிக்கை எடுக்காததால்,  அங்கு கூடியிருந்த பத்திரிகையாளர்கள் சாலைமறியலில் ஈடுபட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டனர். அவ்வாறு, சாலை மறியலில் ஈடுபட்ட பெண் பத்திரிகையாளர்கள் உட்பட சுமார் நூறு பத்திரிகையாளர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, இரவோடு, இரவாக திருமண மண்டபத்தில் கொண்டு சென்று அடைக்கப்பட்டனர். இதில் கொடுமையான விஷயம், பெண் பத்திரிகையாளர்களையும், ஆண்களுடன் சேர்த்து ஒரே இடத்தில் இரவு முழுவதும் அடைத்து வைத்திருந்தனர்.

 

இவ்வளவு நடந்த பிறகும், செய்தியாளர்களை தாக்கிய அதிமுக பிரமுகர்கள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. ஒரு நாள் இரவு முழுவதும் தடுத்து வைக்கப்பட்ட செய்தியாளர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை.

 

நிகழ்வு 2:

சென்னையில், முதுநிலை மருத்துவர்கள் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த போராட்டம் குறித்த செய்திகளை அனைத்து ஊடகங்களும் தொடர்ந்து வெளியிட்டு வந்தன. இந்த சூழ்நிலையில், அந்த குறிப்பிட்ட நாளில், சென்னையில் உள்ள பல்நோக்கு சிறப்பு அரசு மருத்துவமனையில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களுக்கும், சுகாதாரத்துறை அமைச்சருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றது. உடனடியாக, செய்தியாளர்கள், செய்திசேகரிக்கும் நோக்கத்தில் அங்கு கூடினர். அப்போது, அங்கு வந்த, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை ஒளிப்பதிவாளர்கள் படம் பிடிக்கத்தொடங்கினர். இந்த நிகழ்வு ஒரு மிகச்சாதாரணமானது. காட்சி ஊடகத்திற்கு இது தேவையானது. ஆகவே, ஒளிப்பதிவாளர்கள் தங்களுடைய பணியை செய்தார்கள் என்றே கூறலாம்.

 

அவ்வாறு, ஒளிப்பதிவு செய்துகொண்டிருந்த ஒளிப்பதிவாளர் ஒருவரை, சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் மிகவும் தரக்குறைவான முறையில், திட்டினார். எதுவும் அறியாத பொதுமக்கள் கூட பத்திரிகையாளர்களிடம் இவ்வாறு நடந்துகொள்ள மாட்டார்கள். ஆனால், ஒரு முக்கிய பொறுப்பில் இருக்கும் அமைச்சர் இவ்வாறு நடந்துகொண்டது பத்திரிகையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

உடனே, அங்கு கூடியிருந்த பத்திரிகையாளர்கள் அனைவரும்,  அமைச்சர் விஜயபாஸ்கர் தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். ஆனால், கடைசிவரை அவர் தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை. பத்திரிகையாளர்கள் தங்கள் கோரிக்கையை கைவிட்டுவிட்டு திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது.

 

நிகழ்வு 3:

 

நக்கீரன் புலனாய்வு வார இதழில் வெளியான தொடரில், அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் கடந்த கால வாழ்க்கையில் நடைபெற்றதாக ஒரு சம்பவம் குறிப்பிடப்பட்டது.  உண்மையில், இந்த சம்பவம் முதலமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உண்மைக்கு புறம்பானதாக அரசு கருதியிருந்தால், இதுபோன்ற நேரங்களில் வழக்கமாக பின்பற்றப்படும் முறையில், நக்கீரன் மீது அரசு அவதூறு வழக்கு தொடர்ந்திருக்கலாம். ஆனால், அவ்வாறு நடைபெறவில்லை.

 

நூற்றுக்கணக்கில் அதிமுக தொண்டர்கள், நக்கீரன் அலுவலக வாயிலில் திரண்டனர். அலுவலகத்தின் மிகப்பெரிய வாயில் கதவு முடப்பட்டிருந்ததால், அவர்களால் உள்ளே செல்ல முடியவில்லை. ஒருவேளை அந்த கதவு எளிதில் திறக்கும் வகையில் அமைந்திருந்தால், அன்றைய தினம் நக்கீரன் அலுவலகத்திற்குள் புகுந்த அங்குள்ளவர்களை அதிமுகவினர் நிச்சயம் தாக்கியிருப்பார்கள். அதில் உயிர் சேதமும் ஏற்பட்டிருக்கலாம். அந்த மிகப்பெரிய கதவு அன்றை தினம் நக்கீரன் அலுவலக பணியாளர்களை காப்பாற்றியது என்றே கூறலாம். அன்றை தினம் முழுவதும், காவல்துறையின் கண்முன்னே, அதிமுக தொண்டர்கள், நக்கீரன் அலுவலக வாயிலில் கூடிநின்று பல்வேறு வகையில் அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

 

ஒரு பத்திரிகை அலுவலகத்தை முற்றுகையிட்டு, பத்திரிகயைளர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்ட அதிமுகவினர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்யவில்லை.

 

நிகழ்வு 4:

 

திமுக பொருளாளர் ஸ்டாலின், கட்சியிலிருந்து விலகுவதாக, தலைமையிடம் விலகல் கடிதம் கொடுத்ததாக தகவல் பரவியது. கடிதம் கொடுத்தது உண்மைதான் என்பது அந்த கட்சியின் முக்கிய தலைவராலும் உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, செய்தியாளர்கள் ஸ்டாலின் அவர்களின் இல்லத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்றனர். அப்போது அங்கு கூடியிருந்த திமுக தொண்டர்கள், செய்தியாளர்களை கடுமையான வார்த்தைகளில் திட்டியதுடன், தாக்கவும் செய்தனர். இதில் சில ஒளிப்பதிவு கருவிகளும் சேதமுற்றன.

 

இதுதொடர்பாக, காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு, சிலர் கைது செய்யப்பட்டனர்.

நிகழ்வு 5:

 

2014 ஆம் ஆணடு நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைகள் நடைபெற்று வந்த நேரத்தில், அதிமுக சார்பாக காஞ்சிபுரத்தில் தேர்தல் பரப்புரைக்கு அதிமுக சார்பாக ஏற்பாடு செய்திருந்தது. அந்த கூட்டத்திற்கு அதிமுக வின் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் உட்பட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இதனால், அந்த நிகழ்வை செய்தி சேகரிக்க செய்தியாளர்கள் சென்றிருந்தனர். அப்போது அதிமுக நிர்வாகிகளுக்கிடையில், கருத்து வேறுபாடு காரணமாக சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது. இதை படம்பிடித்துக்கொண்டிருந்த கலைஞர் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளைரை, அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் தாக்கினார். அவருடைய ஒளிப்பதிவு கருவியும் சேதப்படுத்தப்பட்டது.

 

இந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டும், அவர்கள் அதை பெற்றுக்கொள்ளவில்லை. இன்று வரை அந்த சம்பவம் தொடர்பாக மைத்ரேயன் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை.

 

இதுபோன்று, பத்திரிகையாளர்கள் மீது அரசியல்வாதிகள், காவல்துறையினர் மற்றும் குண்டர்கள் தாக்குதல் நடத்திய பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. குறிப்பாக, மணல் திருட்டு மற்றும் கனிம கொள்ளைகளில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து பத்திரிகையாளர்களுக்கு தொடர் மிரட்டல்கள் வந்தவண்ணம் உள்ளன.

 

பத்திரிகையாளர்களை மிரட்டும் அரசியல் கட்சிகள்

 

ஒரு பத்திரிகையாளன் தான் வழங்கும் செய்தியில் சார்பு தன்மை இல்லாமல் செயல்பட வேண்டும் என்பது மிக முக்கியமானது. ஆனால், குறிப்பிட்ட சில விஷயங்களில் பத்திரிகையாளருக்கு சொந்த கருத்து இருப்பதும், அந்த கருத்து சார்ந்து அவர் தன் சொந்த வாழ்க்கையில் செயல்பட்டாலும் அதை தவறென்று கூற முடியாது.

 

இந்நிலையில், சன் செய்தி தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சி நடத்தும் வீரபாண்டியன், ஒரு அமைப்பின் சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு தன்னுடைய சொந்த கருத்தை பதிவு செய்துள்ளார். இதைத்தொடர்ந்து, வீரபாண்டியனை வேலையை விட்டு நீக்காவிட்டால், அவர் நடத்தும் விவாத நிகழ்ச்சியல் தங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் பங்கேற்கமாட்டார்கள் என ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்கள், சன் செய்தி தொலைக்காட்சி நிர்வாகத்திடம் கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து வீரபாண்டியன் அந்த நிகழ்ச்சியை நடத்த முடியாத ஒரு நிலை உருவானது.

 

இதேபோல், அரசியல் கட்சி தலைவர்கள் நடத்தும் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, அவர்களிடம் சில நியாயமான கேள்விகளை பத்திரிகையாளர்கள் முன்வைக்கும்போது, அந்த கேள்வி அந்த தலைவருக்கு பிடிக்காத பட்சத்தில், அந்த குறிப்பிட்ட பத்திரிகையாளர் சார்ந்த நிறுவத்தை தொடர்பு கொண்டு, அந்த பத்திரிகையாளர் குறித்து குறைகூறும் தலைவர்களும் இருக்கவே செய்கின்றனர். இது தன்னுடைய பணியை நியாயமாக செய்த ஒரு பத்திரிகையாளரை, மறைமுகமாக மிரட்டும் செயலேயன்றி வேறேதும் இல்லை. இதுபோன்ற பல நிகழ்வுகள் நடந்துள்ளன. நடந்தும் வருகின்றன.

 

வெளிமாநிலத்தில், தமிழகத்தை சேர்ந்த பத்திரிகையாளர்கள் மீது நடைபெற்ற தாக்குதல்

 

இலங்கையின் முன்னாள் அதிபர் ராஜபக்ஷே திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்தார். இந்த நிகழ்வு குறித்து செய்தி சேகரிப்பதற்காக தமிழகத்தை காட்சி மற்றும் அச்சு ஊடகத்தை சேர்ந்த பத்திரிகையாளர்கள் திருப்பதி சென்றனர். அங்கு, ஆந்திர காவல்துறையினர், செய்தியாளர்களை மிகவும் கீழ்த்தரமாக நடத்தியதுடன், அவர்கள் செய்தி சேகரிப்பதற்கு எந்தவித ஒத்துழைப்பையும் வழங்கவில்லை.

இந்நிலையில், ராஜபக்ஷேவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மதிமுகவை சேர்ந்தவர்கள் நள்ளிரவில் ஆர்ப்பட்டம் நடத்தினர். அந்த ஆர்ப்பாட்டத்தை செய்தி சேகரிக்க சென்ற தமிழகத்தை சேர்ந்த பத்திரிகையாளர்கள் காவல்துறையினரால் கடுமையாக தாக்கப்பட்டனர். ஒளிப்பதிவு கருவிகள் சேதப்படுத்தப்பட்டன. இந்த தாக்குதலில் பல செய்தியாளர்கள் தங்கள் உடமைகளை இழந்தனர். இறுதியாக, செய்தியாளர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு திருப்பதியிலிருந்து போலீஸ் வாகனத்தில் ஆந்திர காவல்துறையினரால் அழைத்துச்செல்லப்பட்டு, நள்ளிரவு நேரத்தில், நடுக்காட்டுப் பகுதியில் ஈவிரக்கமில்லாமல் இறக்கிவிடப்பட்டனர்.  இரவு முழுவதும் பனியிலும், வன விலங்குகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் தமிழக செய்தியாளர்கள் தவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இறுதியாக அவர்கள் தனியார் வாகனத்தில் திருப்பதி வந்து சேர்ந்தனர்.

 

ஆந்திர பத்திரிகையாளர்கள் சங்கத்தை சேர்ந்தவர்களின் உதவியுடன், நடந்த சம்பவம் தொடர்பாக ஆந்திர காவல்துறையில் பத்திரிகையாளர்கள் புகார் அளித்தனர். இந்த சம்பவத்தை, தமிழகத்தை சேர்ந்த பத்திரிகையாளர்கள் அனைவரும் கண்டித்ததுடன், சம்பந்தபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது. மேலும், தமிழக தலைமைச் செயலாளரை சந்தித்து, அனைத்து பத்திரிகையாளர் அமைப்புகளின் சார்பாக இதுதொடர்பாக மனுவும் அளிக்கப்பட்டது. ஆனால், இதுநாள் வரை தமிழக அரசு சார்பாக இந்த நிகழ்வு தொடர்பாக ஆந்திர அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டதாகவோ, அல்லது சம்பந்தபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைவைக்கப்பட்டதாகவோ தகவல் இல்லை.

 

பெண் பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் சமூகவிரோதிகள்

 

பத்திரிகையாளர்களை பொறுத்தவரை, அவர்கள் சேகரிக்கும் செய்திகள் அடிப்படையில் அச்சுறுத்தல்களுக்கு உள்ளவாது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது ஒன்று. இந்நிலையில், தாங்கள் சார்ந்த பத்திரிகையில் அவர்கள் எழுதிய கட்டுரைகளுக்காக, பெண் பத்திரிகையாளர்கள் சிலர், சில தனிநபர்கள் மற்றும் அமைப்புகளால் அவதூறுக்குள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

 

அந்த பத்திரிகையாளர்கள் எழுதிய கட்டுரையை குறிப்பிட்டே, அந்த சமூக விரோதிகள், அவர்களுக்கு எதிராக அவதூறு செய்திகளையும், அந்தரங்க விஷயங்களையும் சமூகவளைதளங்களில் அவர்களை அச்சுறுத்தும் வகையில்பரப்பி வருகின்றனர்.

 

இதுதொடர்பாக, பெண் பத்திரிகையாளர்கள் தனியாகவும், பத்திரிகையாளர்கள் சங்ககங்களின் மூலமாகவும் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால், பெண் பத்திரிகையாளர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இதுவரை ஒருவர் மீது கூட காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது ஆச்சர்யம் அளிக்கும் உண்மை.

 

முடிவுரை

 

அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள கருத்து சுதந்திரத்தை ஒவ்வொரு இந்திய குடிமகனும் அனுபவிப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. கருத்து சுதந்திரத்தை ஒடுக்குவதென்பது, சொல்பவர்களின் உரிமையை பறிப்பதுடன், அந்த கருத்தை கேட்க வேண்டியவர்களின் உரிமையையும் சேர்த்து ஒடுக்குவதற்கு சமம்.

 

ஆகவே, கருத்து சுதந்திரத்தை ஒடுக்க நினைக்கும் சக்திகளை ஒடுக்க வேண்டிய கடமை அரசுக்கு அதிகமாக உள்ளது. அந்த கடமையை செய்ய, அரசு தன்னுடைய நிறுவனங்களை, உடனடியாக முடுக்கி விடவேண்டிய அவசியம் உள்ளதென்பதையே, மேற்கூறிய தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.

 

அதேபோல், முற்போக்கு கருத்தியலை அடிப்படையாக வைத்து உருவான, திராவிட இயக்கங்களே கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு வருகின்றன. அந்த இயக்கங்களின் அடிப்படை தத்துவமான முற்போக்கு கருத்தியலுக்கு, தற்போது தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்திருப்பது, அந்த கட்சிகளுக்கே எதிரானது என்பதை அவை உணர வேண்டும். அதன் அடிப்படையில், அந்த முற்போக்கு கருத்தியலுக்கு எதிராக தொடரப்படும், ஒடுக்குமுறையை தடுக்க ஆவண செய்ய வேண்டும்.

 

பத்திரிகையாளர்கள் வெளிப்படுத்தும் ஒரு சிறிய செய்தியும் கூட, ஏதோ ஒரு வகையில், சமூகத்தின் மீது பலமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆகவே, பத்திரிகையாளர்கள், ஊடக அறம் சார்ந்து இயங்கி, தாங்கள் வழங்கும் செய்தியின் நம்பகத்தன்மையை உறுதி செய்து, சமூக பொறுப்புடன் நடந்துகொள்வதும் அவசியமாகின்றது.

(இந்த அறிக்கை, 29 மார்ச் 2015 அன்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்ட, கருத்து சுதந்திர ஒடுக்குமுறைக்கு எதிரான கண்டனக்கூட்டத்தில், அனைத்துக் கட்சி பிரதிநிதிகளால் வெளியிடப்பட்டது.)