2014ஆம் ஆண்டு செய்த தவறை உணர்வோம்! பத்திரிகையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை ஒருங்கிணைந்து எதிர்கொள்வோம்!

0
394

2014 ஆம் ஆண்டு, நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர், இந்தியாவின் முன்னணி ஊடக நிறுவனங்களில், முக்கிய பொறுப்புகளில் இருந்து சில பத்திரிகையாளர்கள், எந்த வித நியாயமான காரணமுமின்றி பணிநீக்கம் செய்யப்பட்டனர் அல்லது பணியிலிருந்து விலகிக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டனர். இந்த சமயத்தில்தான் தமிழகத்தில், சன் தொலைகாட்சியில் ‘நேருக்கு நேர்’ என்ற விவாத நிகழ்ச்சியை நடத்திவந்த பத்திரிகையாளர் வீரபாண்டியன் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். தேசிய அளவில் பத்திரிகையாளர்கள் இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்டதை, எல்லோரும் தனித்தனி நிகழ்வாகவே பார்த்தனர். ஆனால், அது ஒரு திட்டமிட்ட செயல் என்பதை அப்போது யாரும் புரிந்துகொள்ளவில்லை.

2014ஆம் ஆண்டில் நடந்தது போலவே, பத்திரிகையாளர்களை குறிவைத்து, தற்போது ஒரு திட்டமிட்ட நடவடிக்கை அரங்கேற்றப்பட்டு வருவதை நம்மால் உணர முடிகிறது. இதன் ஒரு பகுதியாகத்தான் கடந்த சில நாட்களாக சில பத்திரிகையாளர்கள் சமூக வளைதளங்களில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். இந்த தாக்குதலை நடத்துபவர்கள், பத்திரிகையாளர்களின் குடும்பங்களை பொது வெளியில் அடையாளம் காட்டி மிரட்டுகின்றனர். அவர்கள் பணியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று அவர்கள் சார்ந்த நிறுவனங்களை மறைமுகமாக மிரட்டுகின்றனர். இதற்காக பல பொய்யான தரவுகளை சிறிதும் அச்சமின்றி வெளியிடுகின்றனர். பத்திரிகையாளர்களை மத ரீதியான தாக்குதலுக்கு உள்ளாக்கும் வகையில், ஆபத்தான, உண்மைக்குப் புறம்பான தகவல்களை வேண்டுமென்றே பரப்பி வருகின்றனர். பெண் பத்திரிகையாளர்களை பொது வெளியில் மிகவும் கீழ்த்தரமாக சித்தரிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இவற்றிற்கெல்லாம் ஒருபடி மேலே சென்று, படுகொலை செய்யப்பட்ட சில பத்திரிகையாளர்களை சுட்டிக்காட்டி வெளிப்படையாக கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.

இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்கள் தனித்தனி நபர்களாக இருந்தால், அவர்களின் அந்தந்த செயல்களுக்கு தகுந்தாற்போல் எதிர்வினையாற்றலாம் அல்லது அவதூறுகளை கண்டுகொள்ளாமல் நமது வேலையை பார்த்துவிட்டு செல்லலாம். ஆனால், இவர்கள் அனைவரும் ஒரு திட்டத்தின் அடிப்படையில் தங்களுக்குள் ஒரு ஒருங்கிணைவை ஏற்படுத்திக்கொண்டு செயல்படுவதை பார்க்க முடிகிறது. ஆகவே, இந்த அச்சுறுத்தல்களை தனித்தனியாக எதிர்கொள்வதோ அல்லது கண்டுகொள்ளாமல் விட்டு, விட்டு நகர்வதோ சரியான வழிமுறையாக இருக்காது. குறிப்பிட்ட சில பத்திரிகையாளர்களை பணியிலிருந்து விரட்டியடிக்க வேண்டும் என்று ஒருங்கிணைந்து செயல்படும் இவர்களை, ஒருங்கிணைந்து எதிர்கொள்வதன் மூலம் மட்டுமே அவர்களின் திட்டத்தை முறியடிக்க முடியும்.

2014ஆம் ஆண்டில் நாம் ஒருங்கிணைய தவறியதால், பல முக்கியமான பத்திரிகையாளர்கள் வேலையிழந்தனர். சிலர் துறையை விட்டே வெளியேற்றப்பட்டனர். ஆகவே, அந்த தவறை உணர்ந்து, தற்போது ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை ஒருங்கிணைந்து எதிர்கொள்ள வேண்டும். அனைத்து பத்திரிகையாளர்கள் அமைப்புகள், மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் ஜனநாயக சக்திகளும் இந்த முன்னெடுப்பில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

– மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம்