பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசிவரும் பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் -க்கு கண்டனம்.
ஜனநாயகத்தின் நான்காவது தூணை கட்டிக்காப்பாற்றும் மிக முக்கியமான பொறுப்பை வகிக்கக்கூடியவர்கள் பத்திரிகையாளர்கள். அந்த வகையில் அவர்கள் நடுநிலையோடு செயல்படுவதுடன், துறைசார்ந்து திறன் படைத்தவர்களாகவும் இருக்க வேண்டியது அவசியம் என்ற கருத்து சரியானதே. ஆனால், பத்திரிகையாளர்கள் மேற்கூறிய தகுதிகளை பெறுவதற்கு, அவர்கள் சார்ந்த நிறுவனம், மிக முக்கியமான பொறுப்பை வகிப்பதை யாரும் புரிந்துகொள்வதில்லை.
நிறுவனம், சார்புத் தன்மை இல்லாமல் இருக்கும் பட்சத்தில் மட்டுமே, அதில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள், நடுநிலையோடு செயல்பட முடியும். அதேபோல், பத்திரிகையாளர்கள் தங்களுடைய திறனை தாங்களே வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பது ஒருபுறம் இருந்தாலும், அவர்களின் திறன் வளர்ப்பிற்கு, நிறுவனங்களின் பங்கும் மிக மிக அவசியம்.
தமிழகத்தை பொறுத்தவரை, ஏறக்குறைய அனைத்து பத்திரிகை நிறுவனங்களும், செய்தித் தொலைக்காட்சிகளும் அரசியல் கட்சிகளின் பின்புலத்துடன் நடத்தப்படுவதை நாம் அனைவரும் அறிவோம். நடுநிலையோடு செயல்படுகின்றோம் என்று கூறிக்கொள்ளும், ஒரு சில ஊடக நிறுவனங்களும் கூட, அவர்கள் ஈடுபட்டுள்ள மற்ற தொழில்களின் நலனைக் கருதி, பக்க சார்புடன் செயல்படுவதும் அனைவரும் அறிந்ததே. அத்துடன் ஒரு சில ஆங்கில ஊடகங்களைத்தவிர, மற்ற எந்த நிறுவனமும் பத்திரிக்கையாளர்களின் திறன் வளர்ப்பு பயிற்சிக்காக ஒரு பைசா கூட செலவிடுவதில்லை. இப்படிப்பட்ட நிறுவனங்களில் பணிபுரியும் பத்திரிகையாளர்கள், நடுநிலையோடும் செயல்பட நினைத்தாலும் கூட, அது நடைமுறையில் சாத்தியமற்றது.
இந்நிலையில், பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ், இன்றைய தினம் (19.02.16) ஈரோட்டில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, ஆட்சேபனை தெரிவித்ததுடன், அவரை தரக்குறைவாகவும் பேசியுள்ளார். சமீபகாலத்தில், ராமதாஸ் தொடர்ந்து செய்தியாளர்களை தரக்குறைவாக பேசிவருகின்றார். குறிப்பாக பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், அவர்களை எதிர் கேள்வி கேட்பதுடன், பத்திரிகையாளர்களை தொடர்ந்து ஏளனம் செய்துவருகின்றார்.
பத்திரிகையாளர்களை ஏளனம் செய்யும் ராமதாஸ், பாமகவின் பின்புலத்தில் இயங்கும் தொலைக்காட்சியில் பணிபுரியும் ஒரு செய்தியாளர், நடுநிலையுடன் வழங்கும் அனைத்து செய்திகளையும் அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்புவதற்கு அனுமதிப்பாரா? அந்த குறிப்பிட்ட தொலைக்காட்சி, செய்தியாளர்களின் திறன் வளர்ப்பு பயிற்சிகளுக்கு, எவ்வளவு செலவு செய்கின்றது என்பதை அவரால் கூறமுடியுமா? இந்த கேள்விகளுக்கு அவர் பத்திரிகையாளர்களிடம் பதில் அளிக்க முடியுமா? தன் தொலைக்காட்சியில் பணிபுரியும் செய்தியாளர்களுக்கு முழு சுதந்திரத்தை அளித்துவிட்டு, பத்திரிகையாளர்களின் நடுநிலைமை குறித்து, அவர் கேள்வி எழுப்பட்டும். அதற்கு தலைவணங்கி பதில் அளிக்க நாங்கள் தயார். பத்திரிகையாளர்களின் கயைறுநிலைக்கு காரண கர்த்தாக்களில் ஒருவராக இருந்துகொண்டு, பத்திரிகையாளர்களை ராமதாஸ் ஏளனம் செய்வது, அவர் தன்னையே ஏளனம் செய்துகொள்வதற்கு சமமாகும்.
ஆகவே, பத்திரிகையாளர்களிடம் தொடர்ச்சியாக தரக்குறைவாக நடந்து வரும் ராமதாஸை, மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையம் வன்மையாக கண்டிப்பதுடன், இதுபோன்ற நடவடிக்கையை அவர் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றது.
அதேவேளையில், அரசியல் தலையீடு இல்லாமல், பத்திரிகையாளர்கள் நடுநிலையுடன், தங்கள் முழு திறனையும் வெளிப்படுத்துவதற்கு ஏதுவான, கூட்டுறவு ஊடக நிறுவனங்களை எதிர்காலத்தில் தொடங்குவதற்கு, அனைத்து பத்திரிகையாளர்களும் ஒருங்கிணைந்து முயற்சியெடுக்க வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையம் கேட்டுக்கொள்கின்றது.