10 சதவீத இடஒதுக்கீடு : கம்யூனிசத்தின் மீது எறியப்படும் கல்

0
571

10 % இட ஒதுக்கீடு விவகாரத்தில் கம்யூனிசத்தின் மீது தொடர்ந்து கல் எரியப்பட்டு வருகின்றது. உண்மையில் பாசிசத்தின் முதற் படியாகப் பார்க்கப்படும் இந்த சட்டத்தை, இந்தியாவில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட கம்யூனிஸ்ட் கட்சி என்று கூறிக்கொள்ளும் சிபிஎம் ஆதரித்துள்ளது. அதிக தொழிற்சங்க உறுப்பினர்களைக் கொண்ட பாட்டாளிகளின் கட்சியாக உள்ள சிபிஎம் எப்படி இந்த மசோதாவை ஆதரிக்கிறது? கம்யூனிசம் இதைத்தான் சொல்கிறதா? என்ற கேள்வி எழுப்பப்பட்டே வருகிறது.

அத்தனை விதமான ஏற்றத் தாழ்வுகளையும் களைந்து பொதுவுடைமை சமுகத்தை படைப்பதே உலகின் எந்த ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படைக் கொள்கையாக இருக்கும். அதற்கு ஒவ்வொரு கம்யூனிஸ்ட் கட்சியும் அது சார்ந்த நிலத்தின் சமூக, பொருளாதார சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு அந்நாட்டில் அல்லது குறிப்பிட்ட அந்நிலப்பகுதியில் மக்களின் முதன்மை முரண்பாட்டை வைத்து சமூக புரட்சிக்கான தங்களது கட்சியின் பாதையை வகுத்து கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையைத் தயாரிக்கும். இந்தியாவின் சமூக பொருளாதாரத்தை ஆராய்ந்துள்ள சிபிஎம் இந்தியாவில் சாதி என்பது பண்பாடு மட்டுமே, அதனால் பொருளாதார சுழற்சியில் எந்த மாற்றமும் ஏற்படாது என முடிவுக்கு வந்து அதன்படி மட்டுமே செயல் படுகின்றனர். ’ஓ! அதனால் தான் சிபிஎம் இதை செய்ததா?’  என்று கேட்க வேண்டாம். அது சோசலிஷப் பாதையில் மக்களைப் பண்படுத்திடும் கொள்கைப் பிடிப்புள்ள கம்யூனிஸ்ட் கட்சியாக இருந்திருந்தால் அதன் அறிக்கைப்படி வேலை செய்யும். ஆனால் அது வெறும் இன்னொரு ஒட்டரசியல் கட்சியாக இயங்கி வருகிறது, அவ்வளவுதானே! ஆக, அது எப்படி அறிக்கையின்படி எல்லாம் நடக்கும்?

அப்படி என்றால் சிபிஎம் ஏன் இதை ஆதரிக்கின்றது?

ஓட்டரசியல் என்பது சமரசத்தின் கூடாரம். சமரசத்தில் என்று சொல்லப்படுவது ஒன்று, இரண்டு அல்ல ஒட்டு மொத்த கொள்கையின் சமரசம். இன்று ஓட்டரசியலில் மிகவும் வெற்றிகரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் பாஜக கூட அதன் இந்துத்துவத்தின் ஆதார பொருளாதார கொள்கையான சுதேசிக் கொள்கைக்கு எதிராகவே இயங்கி வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை திராவிடம் என்று பெயரளவில் மட்டுமே உள்ள அதிமுக சாதியையும், மதத்தையும் தூக்கிப் பிடிக்கத்தானே செய்கின்றது? திமுகவை எடுத்துக்கொண்டால் பொருளாதார ரீதியான சமத்துவ சமூக நிலைப்பாட்டை உடைக்க வகை செய்யும் உணவுப் பாதுகாப்பு சட்டம் முதல் அந்நிய நேரடி முதலீடு வரை பல சட்டங்களை ஆதரிக்கவில்லையா? அதுவும் எதற்காக அமைச்சர் பதவியைப் பெறத்தானே? அப்படித்தான் சிபிஎம் இதைச் செய்தது. இந்த விவரங்கள் எதுவும் சிபிஎம் செய்ததை நியாயப்படுத்த அல்ல, மற்ற ஓட்டரசியல் கட்சிகள் எப்படியோ அப்படியே சிபிஎம். திராவிடத்தை எப்படி திமுகவில்  தேடக்கூடாதோ, அப்படித்தான் சிபிஎம் கட்சியைக் கொண்டு பொதுவுடமை சித்தாந்தத்தை  அளவிட முடியாது. பதவிக்காக எதையும் செய்யத் தயங்காத சிபிஎம் கட்சியின் தலைவர்களைக் கொண்டு அதன் உருவாக்கமே அப்படியான ஒன்றாகத்தான் இருந்தது. சிபிஐ- ல் இருந்து சிபிஎம் உருவாக்கப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் அரசியல் ரீதியாகச் சொல்லப்பட்டாலும், ஓட்டரசியலில் தனக்குப் போட்டியாக விளங்கும் கட்சியுடன் சேர்ந்து பயணித்தால் தங்களின் அதிகாரத் தேவையும், பதவி ஆசையும் எப்படித் தீர்க்கப்படும் என்று எண்ணிய ஜோதி பாசு, நம்பூதிரிபார்ட் வகையராக்கள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை எதிர்த்துத் தனிக் கட்சி தொடங்கினர். அதுவே இன்றைய சிபிஎம். தனிக்கட்சி தொடங்கிய. மிகப் பெரிய தத்துவ விவாதத்தின் மூலம் பிரிந்து வந்த கட்சியை எப்படி நீங்கள் பதவி ஆசை எனப் பேசலாம் என்று கூட பல போலி கதிர்கள் கத்தலாம். ஆனால்  இன்று காவியின் பெயரால் குஜராத்தில்  மோடி நடத்திய அத்துனை வெறியாட்டத்தையும்  சிவப்பு துண்டை போர்த்திக்கொண்டு ஜோதி பாசுவின் குண்டர் படையும் செய்தது.  1967ல் மேற்கு வங்கத்தில் ஓட்டரசியலில் அவர்கள் பெற்ற முதல் வெற்றியின்போது இருந்தே சிபிஎம் கட்சி தனது முற்போக்கு முகமூடியை பல முறை தாமாகவே கிழித்துக் கொண்டது. சுரண்டலில் ஈடுபட்ட முதலாளிகளை எதிர்த்துப் போராடிய நக்சல்பாரி கிராமத்தில் போராடிய மக்களைச் சுட்டுக் கொன்றபோது உள்துறை அமைச்சராக இருந்தவர் அப்போதைய சிபிஎம் கட்சியின் பிதாமகரான ஜோதிபாசுதான். அவர்தான் பிரதமராக தனக்கு வாய்ப்பு வந்தபோது அதைக் கட்சி தடுத்தது என்ற ஒரே காரணத்திற்காக கட்சியின் மீதே விமர்சனம் வைத்த மூத்த கம்யூனிஸ்ட்காரர். இப்படி பதவி மோகத்தில் திரிந்த கட்சிதான் சிபிஎம். தாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை வங்க தேசத்து அகதிகளை மேற்கு வங்கத்திலேயே குடியமர்த்த வேண்டும் என்று கோரிவந்த சிபிஎம். ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களை குடியமர்த்த தடை செய்தது மட்டுமல்லாமல் மார்ச்ஜபி என்னும் இடத்தில் தொடர்ந்து மக்களை பட்டினியில் ஆழ்த்தி சூட்டு கொன்றது மட்டுமின்றி பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததும் அந்த மனிதருள் மானிக்கம் போனக்காரர்களின் பங்காளன் ஜோதிபாசுதான். அதிகார போதையில் இவர்கள் ஆடிய ஆட்டம் சாதாரனமானது அல்லவே. கடைசியாக சிபிஎம் தனது ஆட்சியை வங்கத்தில் இழந்ததும் கூட, லால் கர் மற்றும் சிங்கூரில் முதலாளிகளுக்குத் துணை போனதுதானே காரணம். கேரளத்தில் மட்டும் இவர்கள் விதிவிலக்கா என்ன? சகாவு வர்கீசை கொன்றது அச்சுதானந்தன் (சிபிஐ ) என்றால் குப்பு தேவராஜ் காவிரி என தொடங்கி ஜலீல் வரை அனைவரையும் கொன்றது இந்த சிவப்புத் துண்டு போர்த்திய நரிகள் தானே!

இவ்வாறு சிபிஎம் கட்சியின் ஒவ்வொரு அரசியல் நிலைப்பாடுகள் குறித்தும் ஆராய்ந்தால் அது ஓட்டரசியலில் உழலும் மற்றொரு கிருமியே என்பது தெளிவாகப் புரியும்.

சாதியத் தீண்டாமையை முதன்மையாகக் கொண்ட பல தலைவர்களை தொடர்ந்து வளர்த்துவிடும் திராவிட கட்சிகள் போக்கே இதற்கு சிறந்த ஒப்பீடு. 1967 காலகட்டத்தில் கீழ் வெண்மணி கலவரத்தின்போதும்,  மாஞ்சோலை போராட்டத்தில் தாமிரபரணியில் போராட்டகாரர்கள் கொல்லப்பட்டபோதும் திமுகவின் போக்கு எப்படி அவர்களின் கொள்கைக்கே எதிராக அமைந்ததோ, அப்படித்தான் தங்களுக்கு அதிக வாக்கு வங்கியைக் கொண்ட கேரளா மற்றும் வங்காளத்தில் வலது சாரிகளின் வளர்ச்சியைக் கண்டு பயத்தில் அவர்களுக்கே சாவல் விடும் அளவிற்கு தத்துவமாவது, தக்காளி சட்னியாவது என அனைத்தையும் தூக்கிக் குப்பையில் போட்டு இகழ்ந்துவிட்டு முழு இந்துத்துவ வாதிகளாகவே மாறிவிடுகின்றனர் சிபிஎம் தலைவர்களும்.

சரி ஒட்டரசியல் கணக்கில் அப்படிப்பட்ட பிழைப்புவாதிகளாகவே இருந்துவிட்டுப் போனாலும் பரவாயில்லை, அதையாவது உருப்படியாகச் செயல்படுத்த வேண்டும் அல்லவா? அதற்கும் இவர்களுக்குத் திராணி இல்லை. தமிழகத்தில் சமூக நீதி என்ற அடிப்படையில் ஏற்கனவே முன்னேறிய பல வகுப்பினரைப் பிற்படுத்தப்பட்டவர்கள் என வரையறுத்து  காலம் முடிந்துவிட்ட நிலையில் இன்றும் வந்து 10 % இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாகக் குரல் கொடுப்பது எல்லாம் மிகப்பெரிய வேடிக்கை. கேட்டால் தலைமையின் முடிவு என்பார்கள்.  பாவம்! அந்த அப்பாவித் தோழர்கள் அறிக்கையின்படி கட்டளைகள் மேல் இருந்து கீழ் வருவது அல்ல கம்யூனிஸ்ட் கட்சி, கீழ் இருந்து மேலாகக் கட்டளைகளைப் பிறப்பிப்பதே கம்யூனிஸ்ட் கட்சி என்பதையே மறந்துவிட்டவர்கள். இந்த அடிப்படையை எப்போது இவர்கள் புரிந்து கொள்கிறார்களோ அப்போது இவர்களின் பாதை மாறும் அல்லது உண்மையாகவே பொதுவுடைமை வேட்கையோடு இன்னும் சிபிஎம் கட்சியில் போராட்டக் களத்தில் நிற்கும் அந்தக் கடைக்கோடி தொழிற்சங்கவாதிகளும், கட்சியின் முழுநேர உறுப்பினர்களும் பொலிட் பீரொவில் உள்ள முதலாளித்துவ ஜால்ராக்களைத் தூக்கி எறிவார்கள்.

வர்க்கமா? வர்ணமா? கம்யூனிசம் என்ன சொல்கிறது?

இந்தக் கேள்வியை முன்வைப்பவர்கள் அடிப்படையை முழுதாகப் புரிந்து கொள்ளாதவர்கள் அல்லது வரட்டுத் தனமாக கம்யூனிசத்தைப் பார்ப்பவர்களாகவே உள்ளனர். எப்படி இதைப் பார்க்க வேண்டும்? கம்யூனிசத் தத்துவத்தின் பார்வையில் முரண்பாடுகளைக் கண்டறிந்து, அதைக் களைந்து முன்னேறுவதே ஆகும், முரண்பாடுகள் எல்லா இடத்திலும் ஒன்றாகவே இருப்பதில்லை. அது சமூகத்திற்குச் சமூகம் மாறுகிறது.  அப்படிப் பார்த்தால் தமிழகத்தில் முதன்மை முரண்பாடு சாதி, வடக்கில் அது சாதியும், மதமும். இதைப் புரிந்துக் கொள்ளாமலும், இந்த சமூக முரண்பாடுகளைக் களைவதற்கான கொள்கை முடிவுகளை சீர் செய்யாமல் பாஜகவின் ஒரே தேசம் ஓரே கொள்கை போக்கில்தான் சிபிஎம் கட்சியும் பேசுகின்றது. இதுவே இவர்கள் போலிகள், ஓட்டரசியலுக்காக கொள்கையையும் விற்கத் தயங்காதவர்கள் என்பதை நமக்கு உணர்த்தப் போதுமானது.