ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது

0
614

தூத்துக்குடியில் செயல்படும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இன்று (22.05.18) அந்த போராட்டம் 100வது நாளை அடைந்துள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை சந்தித்து ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மனு அளிப்பதற்காக மக்கள் பேரணியாக ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி வந்தனர். அப்போது அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயன்றனர். இதைத்தொடர்ந்து காவல்துறையினருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் தள்ளு முள்ளு ஏற்பட்டு கலவரம் வெடித்தது.
இந்த நிகழ்வை படம்பிடித்துக்கொண்டிருந்த ஒளிப்பதிவாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களை காவல்துறையினர் தாக்கியுள்ளனர். ஒளிப்பதிவு மற்றும் புகைப்படக் கருவிகளும் நொறுக்கப்பட்டுள்ளன. தாக்குதலிலிருந்து தப்பிப்பதற்காக பத்திரிகையாளர்கள் அப்பகுதியிலிருந்து தப்பித்து ஓடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அத்துடன், பொதுமக்களுடன் வந்த சில நபர்களும் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

போர், கலவரம் போன்ற உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள இடங்களிலும் உயிரை பணயம் வைத்து தங்கள் கடமையை செய்பவர்கள் பத்திரிகையாளர்கள். அத்தகைய அரும்பெரும் பணியின் காரணமாக, நிகழ்ந்த கொடுமைகள், அரசின் அத்துமீறல்கள் மற்றும் சமூக விரோதிகளின் அராஜகங்கள் போன்றவை பொதுமக்களுக்கு சென்றடைந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியும், நிவாரணமும் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. இன்று தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் தடியடி, கண்ணீர்ப் புகைகுண்டு வீச்சு என்பதோடு மட்டுமல்லாமல் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தற்போது வரை 7 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அத்துடன் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆகவே, தங்களின் வாழ்வாதாரத்திற்காக மக்கள் நடத்திய இந்த போராட்டத்தில் நடைபெற்றுள்ள இந்த நிகழ்வுகளை பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு செல்வதற்காக தங்கள் கடமையை ஆற்றி வந்த பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய காவல்துறையினரும் இந்த அத்துமீறலில் ஈடுபட்டுள்ளதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆகவே, அத்துமீறலில் ஈடுபட்ட காவல்துறையினரை கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கும் வகையில், பணியில் உள்ள நீதிபதி தலைமையில் உடனடியாக விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.
தாக்குதலுக்குள்ளான பத்திரிகையாளர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.
சேதப்படுத்தப்பட்ட பத்திரிகையாளர்களின் உடைமைகளை கணக்கிட்டு அதற்கான இழப்பீட்டுத் தொகையையும் தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
இதுபோன்ற நிகழ்வுகளில், பத்திரிகையாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் எத்தகைய உறவு பேணப்பட வேண்டும் என்பது குறித்து காவல்துறையின் அனைத்து மட்டங்களிலும் சென்று சேரும் வகையில் ஒரு சுற்றறிக்கையை அனுப்ப தமிழக டிஜிபிக்கு முதலமைச்சர் உத்தரவிட வேண்டும்.
நமது கோரிக்கைகளை வென்றெடுக்க அனைத்து பத்திரிகையாளர்கள் அமைப்பும் ஒருங்கிணைய வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகின்றது.