வெளிச்சம் தொலைகாட்சியின் கரூர் மாவட்ட செய்தியாளர் கண்ணன் மீது நடந்த தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். சாதிய வன்மத்துடன் பேசியதுடன், தொடர்ந்து பத்திரிகையாளர்களை மிரட்டிவரும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

0
185

வெளிச்சம் தொலைகாட்சியின் கரூர் மாவட்ட செய்தியாளராக 2 ஆண்டுகளுக்கு மேலாக கண்ணன் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவர் வசிக்கும் பகுதிக்கு அருகில், சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஒரு திருமண நிகழ்வு நடைபெற்றுவருவது குறித்து கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜனிடம் தொலைபேசியில் தகவல் அளித்துள்ளார்.

அடுத்த சில நிமிடங்களில் ஒரு கும்பல் அவருடைய வீட்டின் மீது பயங்கரமான ஆயுதங்களால் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் கண்ணனும் அவருடைய உறவினர்களும் கடுமையாக காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் நடந்துகொண்டிருக்கும்போதே, தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அங்கு வந்துள்ளார். வாகனத்தை விட்டு இறங்கிய அமைச்சர் விஜயபாஸ்கர், கண்ணனைப் பார்த்து சாதி பெயரால் திட்டியுள்ளார். அப்போது, அமைச்சருடன் வந்த சிலரும் கண்ணனை கடுமையாக தாக்கியுள்ளனர்.

கண்ணன் புகார் அளித்த அந்த திருமண நிகழ்வில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டுள்ளார். கண்ணன் கொடுத்த புகாரை காவல்துறை கண்காணிப்பாளர் பாண்டியராஜன் தெரிவித்ததன் பேரிலேயே அமைச்சர் விஜயபாஸ்கர் கண்ணனுடைய வீட்டிற்கு சென்றிருக்க முடியும்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கரூரில் தன்னிடம் கேள்வி எழுப்பிய புதிய தலைமுறை செய்தியாளரை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்க முற்பட்டுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூகவலை தளங்களில் பரவியது.

அமைச்சர் பொறுப்பு வகிக்கும் ஒருவரே தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு எதிராக இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது கரூர் மாவட்ட பத்திரிகையாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே, சாதிப் பெயர் கூறி திட்டியது மற்றும் தனது ஆதரவாளர்களை ஏவி விட்டு பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்திய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சட்டப்படி நடவடிக்க எடுக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.