விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்ட பத்திரிகையாளர் நூருல் ஜஹபரை, முத்துப்பேட்டை காவல்துறையினர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகின்றது

0
2680

மாலை முரசு தொலைக்காட்சியில் துணை ஆசிரியராக பணியாற்றிவரும் நூருல் ஜஹபர் ரமலான் விடுமுறையில் தன்னுடைய சொந்த ஊரான அதிராமபட்டிணத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில், முத்துப்பேட்டையில் பாஜக சார்பாக நடக்கவுள்ள உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொள்ளும் எச்.ராஜா குறித்த கருத்தை அவருடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “போராட்டம் நடத்தும் அனைவரையும் சமூக விரோதிகள், பயங்கரவாதிகள் என விமர்சித்து வந்த பாஜகவினரே போராட்டம் நடத்துவது பலருக்கு நகைப்பை ஏற்படுத்தியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். பாஜகவின் இந்த போராட்ட அழைப்பு கலவரத்தை தூண்டும் வகையில் அமைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் கருதுவதாக அந்த பதிவில் நூருல் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இன்று (17.06.2018) காலை, அதிராமபட்டினத்தில் உள்ள நூருல் இல்லத்திற்கு முத்துப்பேட்டை காவல்நிலையத்தை சேர்ந்த நான்கு காவலர்கள் வந்துள்ளனர். வீட்டில் இருந்த அவருடைய தந்தை ஜாபர் அலியிடம், முகநூலில் நூருல் பதிந்துள்ள கருத்துகள் குறித்து தெரிவித்துள்ளனர். அந்த பதிவை அவர் உடனடியாக நீக்கி விட்டால் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளனர். இதற்கு சம்மதம் தெரிவித்த ஜபார், அருகில் உள்ள மைதானத்தில் நூருல் விளையாடிக் கொண்டிருப்பதாக கூறி, காவல்துறையினரை அங்கு அழைத்துச் சென்றுள்ளார். பதிவை நீக்கிவிட்டால், விட்டு விடுதாக கூறிய காவலர்கள், நூருல்லை கண்டதும், அவரை ஜீப்பில் ஏற்றி முத்துப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். முத்துப்பேட்டையில் தற்போது ஒரு நிகழ்ச்சி நடைபெற்று வருவதாகவும், அந்த நிகழ்வுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில், திருவாருர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இருப்பதாகவும், அவர் காவல்நிலையத்திற்கு வந்து விசாரணை நடத்திய பிறகே நூருல்லை விடுவிப்பதா? இல்லையா? என்று முடிவெடுப்போம் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.

தற்போது தமிழகத்தில் நடைபெற்றுவரும் பல்வேறு போராட்டங்கள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தொடங்கி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். சில நபர்கள் போராட்டம் முழுவதும் தவறு என்ற அளவிற்கு கூட கருத்து தெரிவித்துள்ளனர். அவ்வாறு கருத்து தெரிவிப்பது இந்திய அரசியல் சாசனத்தில் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ள உரிமை. ஒருவேளை அந்த கருத்துகள் அநாகரீகமாக, கீழ்த்தரமாக தனிநபர் தாக்குதலாக, எந்த வித ஆதாரமும் இல்லாமல் தனிநபரையோ அல்லது ஒரு அமைப்பையோ கொச்சை படுத்தும் வகையில் அமையும் பட்சத்தில், அந்த கருத்துகளை தெரிவித்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம். உதாரணத்திற்கு, சமீபத்தில், பத்திரிகையாளர்கள் குறித்து நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்த கருத்தை எடுத்துக்கொள்ளலாம். அவர் தெரிவித்த கருத்துகள் மிகவும் கீழ்த்தரமானவை என்பதை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளன. அவருக்கு முன்பிணை வழங்க முடியாது என்றும் மறுப்பு தெரிவித்துள்ளன. அவரை ஏன் கைது செய்யவில்லை என்றும் காவல்துறையிடம் கேள்வி எழுப்பியுள்ளன. ஆனால், இதுவரை எஸ்.வி.சேகர் கைது செய்யப்படவில்லை. இதில் உட்சபட்ச அநீதியாக, யார் அவரை கைது செய்ய வேண்டுமோ, அவர்களே அவருக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர். அதாவது, எஸ்.வி.சேகருக்கு காவலர் ஒருவர் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ளார். பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிராக மிகவும் கீழ்த்தரமாக எழுதிய எஸ்.வி.சேகரின் பதிவையும், நூருல் எழுதிய பதிவையும் ஒப்பிட்டு பார்க்கும் பட்சத்தில், நூருல் கைது செய்யப்பட வேண்டிய நபரா? என்ற கேள்வி எழுகிறது.
ஆகவே, காவல்துறையின் இந்த ஒருதலைபட்சமான நடவடிக்கையை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கண்டிக்கிறது.

நடைபெறவுள்ள போராட்டம் குறித்து தன்னுடைய கருத்தை பதிவு செய்த பத்திரிகையாளரை காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்றுள்ளதை, கருத்து சுதந்திர ஒடுக்குமுறையாகவே மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கருதுகிறது.
ஆகவே, விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்ட பத்திரிகையாளர் நூருல் ஜஹபரை, காவல்துறையினர் எந்த வித முன்நிபந்தனையும் இல்லாமல் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகின்றது.

நூருல்லை விடுதலை செய்ய அனைத்து பத்திரிகையாளர் அமைப்புகளும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் அழைப்பு விடுக்கிறது.