CMPC
STATEMENTS / அறிக்கைகள்

விகடனின் அக்கிரமத்திற்கு எதிராக அறச்சீற்றத்தை வெளிப்படுத்திய அனைவருக்கும் நன்றி! அநீதி இழைப்பது மட்டுமல்ல, அந்த அநீதியை கண்டு அமைதி காப்பதும் மக்களுக்கு செய்யும் துரோகமே!

விகடன் குழுமத்தில் பணியாற்றும் 170க்கும் மேற்பட்ட ஊழியர்களை நிர்வாகம் பணிநீக்கம் செய்திருக்கிறது. சாதாரணமாகவே எந்த ஒரு தொழிலாளியையும் வேலையை விட்டு நீக்க கூடாது என்று சட்டம் சொல்கிறது.  அறத்தின் அடிப்படையிலும் வேலையை விட்டு நீக்குவதென்பது மிக மோசமான செயல்.  அதுவும் இப்படி ஒரு இக்கட்டான சூழலில் கொஞ்சமும் வெட்கமற்று கீழ்த்தரமாக தொழிலாளர்களுக்கு துரோகம் செய்திருக்கிறது விகடன் குழுமம். மனிதாபிமானம் கொஞ்சமும் இல்லாமல்,  சட்டத்தை மதிக்காமல், அறத்தின் படி செயல்படாமல் விகடன் செய்திருக்கும் துரோகம் என்பது, எத்துறையாயினும் முதலாளிகளுக்கு லாபம் தான் முக்கியம், தொழிலாளர் நலன் என்பது பலி கொடுக்க வளர்க்கப்படும் ஆட்டிற்கு ஒப்பானது என்று பட்டவர்த்தனமாக காட்டியிருக்கிறது.கார்ப்பரேட் அரசியலை தோலுரிப்பதாய் சொல்லிக்கொண்டு, அரசியல்வாதிகளின் உண்மை முகத்தை வெளிப்படுத்துவதாக காட்டிக்கொண்டு, விவசாயிகளின் தோழனாய் அடையாளப்படுத்திக்கொண்டு, மாற்று சினிமாவை ஊக்குவிப்பவனாய் முன்னிறுத்திக் கொண்டதெல்லாம் வெறும் லாபத்திற்கான சால்ஜாப்பு தான், மக்களின் அறிவுப் பசியை காசாக்கும் தந்திரம் தான் என்பதை திரைகிழித்து காட்டியிருக்கிறது விகடன். மக்களின் தோழனாய் இருப்போரையும், மாற்றத்தை ஏற்படுத்த மக்களிடம் இருந்து உருவானோரையும் அங்கீகரிப்பதாய் காட்டிக் கொண்டு அவர்களையும் ஏமாற்றி  காசாக்கயிருக்கிறது, விகடன். அப்படி  எல்லாம் ஏமாற்றப்பட்டவர்கள் ஒவ்வொருவரும் விழித்துக் கொண்டிருக்கிறார்கள். அரசு, சட்டம், அறம் என்று எதுவும் நம்மை கேட்க, கண்டிக்க, தண்டிக்கப் போவதில்லை என்ற முதலாளித்துவ இருமாப்பில் விகடன் நிர்வாகம் 170க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை வேலையை விட்டு அனுப்பியிருப்பதை ஒவ்வொருவராக கண்டிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

சட்டத்திற்கு புறம்பான இந்த நடவடிக்கையை சட்ட ரீதியாக எதிர்கொள்ள இருக்கும் அதேநேரத்தில், அறத்திற்கெதிரான இந்த செயலை அறமோடு இருக்கும் ஒவ்வொருவரும் கண்டிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். சமூக மாற்றத்திற்கான பங்களிப்பை செய்தவர்கள் என விகடனால் விருதளிக்கப்பட்டவர்கள், சமூகத்தை சீரழிக்கும் விகடனின் இந்த நடவடிக்கையை கண்டிக்க விருதுகளை திருப்பி அளித்து வருகிறார்கள்.ஆவணப்பட இயக்குநர் திவ்யபாரதி, காலா படத்தின் வசனகர்த்தா மகிழ்நன், மேற்கு தொடர்ச்சி மலை படத்தின் இயக்குநர் லெனின் பாரதி,  தூய்மை பணியாளர்களின் வாழ்நிலைக்காக பாடுபடும் திருமதி மோகனா,  எழுத்தாளர் அ. மார்கஸ், எழுத்தாளர் ஷோபா ஷக்தி, எழுத்தாளர் எஸ்வி ராஜதுரை, எழுத்தாளர் ம.மதிவண்ணன், பொதுநல மாணவர் எழுச்சி இயக்கத்தை சேர்ந்த வளர்மதி, சமூக செயற்பாட்டாளர் அருள்தாஸ், இயக்குனர் லீனா மணிமேகலை, மொழிபெயர்ப்பாளர் நடேசன், உள்ளிட்ட பலரும் விகடனால் கொடுக்கப்பட்ட விருதுகளை திருப்பி அளிப்பது என்று முடிவெடுத்திருக்கிறார்கள். இன்னும் பலரும் இந்த பட்டியலில் இணையவிருக்கிறார்கள்.

விகடன் குழுமத்தால் கிடைக்கும் புகழ் வெளிச்சத்தை விடவும்,  வஞ்சிக்கப்படும் பத்திரிகை தொழிலாளர்களுக்கு ஆதரவளிப்பதே சரி என்றும், அதுவே அறம் என்றும் முடிவெடுத்திருக்கிறார்கள். தாங்களும் ஒப்பற்ற உழைக்கும் வர்க்கத்தினரே, உழைக்கும் வர்க்கத்தின் ஒன்று கூடலே இந்த மோசமான  சூழலில் இருந்து நம்மை விடுவிக்கும் என்று உணர்ந்திருக்கிறார்கள். அதற்காக அவர்கள் கொடுத்த விலை மிகப்பெரியது. கொஞ்சமும் சுயநலமற்று, தங்களுக்கு கிடைத்த, கிடைக்கவிருக்கும் அங்கீகாரங்களை தாண்டி, அவர்கள் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள் அதற்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

அரசியல் கட்சி தலைவர்கள்,சமூக இயக்கங்களின் தலைவர்கள்,  சினிமா துறையை சேர்ந்த மற்றவர்களும் இந்த நாசகர நடவடிக்கைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். விகடன் குழுமம் தொழிலாளர் உரிமையை மதித்து, அறத்தோடு செயல்பட்டு மீண்டும் அவர்களை பணியில் அமர்த்தும் வரை விகடனை புறக்கணிக்க வேண்டும்.

அநீதி இழைப்பது மட்டுமல்ல, அந்த அநீதியை கண்டு அமைதி காப்பதும் மக்களுக்கு செய்யும் துரோகமே. அறப்பிறழ்வே. இந்த கடினமான சூழலில் தொழிலாளர்களுக்கு துரோகம் செய்துவிடாமல் அநீதிகளை கண்டியுங்கள். தொழிலாளர் வாழ்வை துச்சமென மதிக்கும் அக்கிரமக்காரர்களின் நட்பும், அதனால் கிடைக்கும் அங்கீகாரங்களையும் விட தொழிலாளர் வர்க்கத்தின் நியாயம் காக்க அக்கிரமத்தை எதிர்த்து நிற்பதே மக்கள் நலன். அதன்பால் நம்பிக்கை கொண்ட அனைவரும் இந்த அநீதியை தடுத்து நிறுத்த உடனடியாக ஒன்ணைவோம் என்று அழைக்கிறது மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம்.

Related posts

முட்டாள் மாரிதாசுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் விளக்கம்.

CMPC EDITOR

பத்திரிக்கையாளர் சங்கங்களுக்கு ஒரு வேண்டுகோள்.

admin

காவல்துறையினரால் நோட்டீஸ் அனுப்பப்பட்ட அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் உறுதுணையாக இருக்கும்.

admin