ராம்குமாருக்காவும் கண்ணீர் சிந்துங்கள்…

0
830

சுவாதி கழுத்தறுபட்டு இறந்த அந்த கணத்திலிருந்து வருத்தப்படும், அவளுக்காக கைகளை உயர்த்தியபடி பெருங்கோபப்படுபவர்களே நிதானமாய் யோசித்துபாருங்கள்
மூன்றே மாதங்களுக்கு முன் வாழ்க்கையை நிர்மாணித்துக் கொள்ளும் பெருங்கனவுகளை இதயம் முழுக்க சுமந்துகொண்டு சென்னை வந்தவனை
ஒட்டுமொத்த சமூகமும் கழுத்தறுக்க தன்னையே கழுத்தறுத்துக் கொண்ட கொலைகாரனாய் இரண்டாம் முறை ஆம்புலன்ஸ் சுமந்து வந்து கொண்டிருக்கும் இந்த கணத்திலாவது கொஞ்சம் நிதானமாய் யோசியுங்கள்.
நிறைய வேண்டாம், சுவாதி கொல்லப்பட்ட தினத்திலிருந்தேனும் நம் நடவடிக்கைகள் என்னவென்று யோசித்துப் பாருங்கள்.

கொலையை தடுக்காமல் நின்றார்களென அங்கிருந்த முன்பின் தெரியாதவர்களை “பொட்டப் பசங்க” என வசைபாடினோம்.
“இவன எல்லாம் என்கவுண்டர் பண்ணனும்” என்று கோபப்பட்டோம்.
சமூக வலைதளங்களில் தற்காலிக புரட்சியாளர்களாய் குருதி கொதிக்க சீறிப் பாய்ந்தோம்.
“கண்ட நேரத்துல வெளில போகாதனு இதுக்குத்தான் சொல்றோம்” என நம் வீட்டுப் பெண்களின் சிறைகளை வலுப்படுத்தினோம்.
“உயர்சாதி” சாயம் பூசினோம்.
“அவ ஒழுக்கமா இருந்தா, ஏன்யா வெட்டப்போறான்” என்று எக்காளமிட்டோம்.
திரைப்படங்களே எல்லாத்துக்கும் காரணம் என்றுவிட்டு,
சம்பந்தமே இல்லாமல் “அடிடா அவளா” “அவ ஒரு அயிட்டம், தேவ**டா” போன்ற வசனங்களை கைதட்டி ரசித்து எப்போதும் போலவே கடந்து சென்றோம்.
ஊடகங்களை குறைகூறினோம்.
காவல்துறையை கையாளாகதவர்கள் என்றோம்.

இப்போது பிடிப்பட்ட பின்பும்
ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட சமூகத்தையும் வார்த்தையால் தீக்கிரையாக்கி
தற்கொலை முயற்சிப் படத்தை நண்பர்களுக்கு பகிர்ந்து
ராசியான எண் வைத்து ஜோதிடம் பார்த்து
குடும்ப புகைப்படத்தை பொதுவெளியில் உலவிட்டு
என்ன காரணமாக இருக்குமென தொலைக்காட்சிகளில் விவாதம் நடத்தி
“தூக்கு தண்டனைக் கிடைக்க வேண்டுமென” வேண்டிக் கொண்டிருக்கிறோம்.

உண்மையில் ஒரு கணம், ஒரே ஒரு கணம் உங்கள் அடிமன ஆழத்திலிருக்கும்
வார்த்தைகளை பிடுங்கி வெளியே எறியுங்கள்
அவை உரக்கச் சொல்லும்
‘அவன் அவளை வெட்டிய விசையில்
நம் ஒவ்வொருவரின் உந்துதலும் உண்டென்று’;
‘நாம் அழித்த அறமே, கூர்மையான அரமாய் மாறி மானுடத்தின் கழுத்தறுக்கத் துவங்கியிருக்கிறதென்று’;
இப்போதாவது உணருங்கள்
கொஞ்சமே கொஞ்சமேனும் உணருங்கள்.
அவன் பாதையை செப்பனிட்டு வைத்தது நாம் தானென்பதை வசதியாகவும், வக்கனையாகவும் ஒளித்து வைக்கும்
வழக்கமான வக்கற்ற சாமர்த்தியம்
தள்ளி
வெட்டியதும், வெட்டுப்படுவதுமாய் நம்மை நாமேயழித்துக் கொள்வதையும் கைகட்டியபடியே கடந்து விடும் முகமூடியை ஒருமுறையேனும்
கழற்றி எறிந்து
நாம் ஒவ்வொருவரும் ஒரு ராம்குமார் என்பதற்காய் இப்போதேனும் வெட்கத்தில்
கொஞ்சம் கண்ணீர் சிந்துங்கள்.

-செல்வா
03.07.2016