CMPC
STATEMENTS / அறிக்கைகள்

ரஜினி என்ற ஆபத்து வருகிறது. பத்திரிகையாளர்கள் உஷார்.

தமிழக அரசியல் வரலாற்றில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, காமராஜர், ஜீவானந்தம் உட்பட பல ஆளுமைகளுடன் பணியாற்றிய அனுபவத்தை பெற்றவர்கள் தமிழக பத்திரிகையாளர்கள். பத்திரிகையாளர்களுடன் நல் உறவைப் பேணுவதில் இவர்கள் தனி கவனம் செலுத்தினர். கேள்வி கேட்பது, பத்திரிகையாளர்களின் தொழில் சார்ந்த நடவடிக்கை என்பதை அறிந்தவர்கள். பத்திரிகையாளர்களின் கேள்வி அவர்களின் தனிப்பட்ட கேள்வியல்ல, சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடையே எழும் கேள்விகளை அவர்களின் பிரதிநிதிகளாய் பிரதிபலிப்பவர்களே பத்திரிகையாளர்கள் என்ற உண்மையை அறிந்தவர்கள். அதனால்தான் அவர்கள் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டதற்கு கோபப்பட்டதில்லை. அவர்களை கீழ்த்தரமாக பேசியதில்லை. இது அவர்களின் அரசியல் முதிர்ச்சியை காட்டுகிறது.

ஆனால், சமீபகாலமாக அரசியல்வாதிகளிடம் இந்த அரசியல் முதிர்ச்சி குறைந்து வருவதை காண முடிகிறது. இதுபோன்ற நபர்கள் எல்லா காலத்திலும் இருந்துவந்தாலும், தற்போது இவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கேள்வி கேட்பது எந்த அளவிற்கு பத்திரிகையாளர்களின் உரிமையோ அதேபோல், அந்த கேள்விக்கு பதில் அளிக்காமல் இருப்பதும் அரசியல்வாதிகளின் உரிமையே. ஒருவேளை ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு பதில் அளிக்க விரும்பாவிட்டால் அவர்கள் அதை வெளிப்படையாக சொல்லிவிடலாம். அதன் பிறகும் அதே கேள்வியை யாரும் கேட்கமாட்டார்கள். ஆனால், அவ்வாறு செய்யாமல், கேள்வி கேட்கும் பத்திரிகையாளரை “நீ யார்?, எந்த பத்திரிகை?” என்று மறைமுகமாக மிரட்டி அவரை வாயடைக்க செய்வதை நாம் பார்த்திருப்போம். ஒரு குறிப்பிட்ட ஊடகம் அல்லது பத்திரிகையின் பெயரைச் சொல்லி “நீ அந்த ஊடகம் தானே? இப்படித்தான் கேட்பாய்” என்று பத்திரிகையாளர்களை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தி அவர்களை வாயடைக்கச் செய்பவர்களும் உண்டு. இன்னும் ஒருபடி மேலே போய் கேள்வி கேட்ட பத்திரிகையாளரை “நீ ஆண்டி இந்தியன்” என்று கூறிய அசகாய சூரர்களையும் பார்த்து வருகிறோம். கேள்வி கேட்ட பத்திரிகையாளரை நோக்கி,“தூக்கி அடிச்சுடுவேன்” என்று சர்வசாதாரணமாக பேசிவிட்டு நகர்ந்து சென்ற அரசியல்வாதிகளையும் நாம் கடந்து வந்துள்ளோம்.

இந்த அரசியல்வாதிகள் வழியில் தற்போது ரஜினிகாந்த் இணைந்துள்ளார். நேற்று (31.05.18), தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயம்பட்டவர்களை சந்தித்துவிட்டு திரும்பிய ரஜினிகாந்த், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, போராடிய பொதுமக்களுடன் சில விஷக்கிருமிகள், சமூக விரோதிகள் ஊடுருவியதே துப்பாக்கிச் சூட்டிற்கு காரணம் என்று கூறினார். காவல்துறையினரின் அத்துமீறல் குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது, மக்கள் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதே எல்லாவற்றிக்கும் காரணம் என்று கூறினார். இவ்வாறாக துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தும் வகையில் ரஜினி தொடர்ந்து பேசிவந்தார்.

துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அதற்கு காரணமானவர்கள் தண்டிகக்கப்பட வேண்டும் என்று தமிழகம் மட்டுமல்லாமல் நாடுமுழுவதும் பல்வேறு தரப்பினரும் கூறிவருகின்றனர். இதை அறிந்த பத்திரிகையாளர்கள் பாதிக்கப்பட்ட மக்களின் குரலாய் ரஜினியிடம் தங்கள் கேள்விகளை முன்வைத்தனர். அவ்வாறு தன் கடமையை செய்த ஒரு பத்திரிகையாளரை மிரட்டும் வகையில், ரஜினிகாந்த் அவரை நோக்கி விரலை நீட்டி “ஏய்” என்று உரத்த குரலில் கத்தி விட்டு மீண்டும் மற்றவர்களை நோக்கி உரத்த குரலில் “வேறேதும் கேள்வி இருக்கிறதா?” என்று கேட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

ரஜினிகாந்த்தின் இந்த நடவடிக்கை அவருடைய அரசியல் முதிர்ச்சியற்ற தன்மை என்றுமட்டும் குறுக்கி பார்த்துவிட முடியாது. ஏனென்றால், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு, பொதுமக்களின் போராட்டமே காரணம் என்பதை பதிவு செய்வதில் மிகவும் தெளிவாக இருந்த ரஜினி, பத்திரிகையாளர்களிடம் இவ்வளவு கேவலமாக நடந்து கொண்டதை தற்செயலான நிகழ்வாக கருத முடியாது. கேள்வி கேட்பவரை நோக்கி “ஏய்” என்று மிரட்டும் வகையில் ஒருமையில் பேசியது ரஜினியின் அரஜாக தன்மையையே காட்டுகிறது.

ஏற்கனவே, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா போன்றோர் பல்வேறு தருணங்களில் பத்திரிகையாளர்களிடம் கீழ்த்தரமாக நடந்து கொண்டுள்ளனர். அந்த வரிசையில் தற்போது ரஜினியும் இணைந்துள்ளார். வெகு சீக்கிரத்தில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாக அவர் கூறிவரும் நிலையில், அவரை தினந்தோறும் சந்தித்து, கேள்வி கேட்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதை நாம் அறிவோம்.

ஆகவே, எதிர்காலத்தில் பத்திரிகையாளர்களுக்கும் ரஜினிகாந்த்திற்கும் சுமூகமான உறவு இருக்க வேண்டும் என்றால், அவர் தன்னுடைய செயலுக்கு பத்திரிகையாளர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகின்றது.

பத்திரிகையாளர்களிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை அறியாவிட்டால், அறிந்தவரிடம் கேட்டு இனி பத்திரிகையாளர்களிடம் நாகரீகமாக நடந்துகொள்ள வேண்டும் என்று ரஜினிகாந்த்தை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கிறது.

பத்திரிகையாளர்களை துச்சமாக மதிக்கும் அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்ட அனைத்து பத்திரிகையாளர்களும் ஒருங்கிணைந்து குரல்கொடுக்க வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கிறது.

Photo courtesy: NDTV

 

 

 

 

 

Related posts

ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் அரசியல் கட்சிகள்! அதிகாரப்போட்டிக்கிடையில் சிக்கித்தவிக்கும் பத்திரிகையாளர்கள்!

CMPC EDITOR

பெண் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசிவரும் கிஷோர் கே சாமி மீது உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட வேண்டும்.

CMPC EDITOR

கார்டூனிஸ்ட் பாலா மற்றும் சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது

CMPC EDITOR