முட்டாள் மாரிதாசுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் விளக்கம்.

0
1579

வணக்கம் மாரிதாஸ்,

ஜூலை 2 ஆம் தேதி நீ போட்ட வீடியோவை கண்டித்து எங்கள் ட்விட்டர் பக்கத்தில் (@CMPChange) உன்னையும் டேக் செய்து ஒரு பதிவை போட்டோம். அதன் பிறகு நீ எங்களை ப்ளாக் செய்துவிட்டாய். அடுத்ததாக ஜூலை 5ஆம் தேதி நீ போட்ட வீடியோவில் முதல் முறையாக மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தை பற்றி பேசியிருந்தாய். அதில் நீ வைத்த முட்டாள்தனமான குற்றச்சாட்டிற்கு விரிவான பதிலை அன்றை தினமே வெளியிட்டோம். அதை உனக்கு டேக் செய்ய முயன்றபோதுதான், நீ எங்களை ப்ளாக் செய்துள்ளதையே கண்டுபிடித்தோம்.

உன் வீடியோவில் மூச்சுக்கு முப்பது முறை “என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்” என்று கத்திவிட்டு, பதில் கிடைப்பதற்கான வழியை ப்ளாக் செய்தால், எப்படி அது உனக்கு கிடைக்கும்? அதேபோல் தான் ஜூலை 7ஆம் தேதி நீ வெளியிட்டுள்ள மற்றொரு வீடியோவிலும், “எனக்கு யாரும் பதில் சொல்லவில்லை” என்று பேய்க் கூச்சல் போட்டுள்ளாய். அறிவுகெட்ட உன்னை மீண்டும் அந்த அறிக்கையை போய் படி என்று கூறினால், படிக்கமாட்டாய் என்பது தெரியும். ஆகவே, மீண்டும் உனக்கு தெளிய வைக்கிறோம்.

“மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம்” பத்திரிகை துறையில் பணியாற்றுபவர்களின் பணிப்பாதுகாப்பை உறுதி செய்வதையும், திறன் வளர்ப்பு பயிற்சி அளிப்பதையும் நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்ட அமைப்பு. கடந்த 10 ஆண்டுகளில், இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் அமைப்பின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. பணிநீக்கம், சம்பளக்குறைப்பு, தொழிலாளர் நலன் மீறல் போன்ற காரணங்களால், பணியிடங்களில் பாதிக்கப்படும் பத்திரிகையாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறோம். பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்காக நிறுவனங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தியதுடன், சட்டப்பூர்வமாக வழக்குகளையும் தொடர்ந்துள்ளோம். அந்த வகையில், அண்மையில் கலைஞர் தொலைக்காட்சியில் சம்பளக்குறைப்பு நடவடிக்கை மேற்கொண்டபோது, அதை எதிர்த்து குரல் எழுப்பிய ஒரே அமைப்பு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம்தான். கலைஞர் தொலைக்காட்சிக்கு எதிராக நாங்கள் வெளியிட்ட அறிக்கை எங்கள் இணையதளத்தில் (www.cmpc.in) உள்ளது. இதுவரை நாங்கள் நடத்திய நிகழ்வுகள், வெளியிட்ட அறிக்கைகள் மற்றும் பத்திரிகையாளர்களின் படைப்புகள் என அனைத்தும் அந்த தளத்தில் உள்ளன. குறைந்தபட்சம் எங்கள் இணையதளத்தை நீ பார்த்திருந்தாலாவது, நீ கூறும் One Mind Generation Research என்ற நிறுவனம் ஆதரவளிக்கிறது என்று அரைவேக்காட்டுத்தனமாக கூறியிருக்க மாட்டாய். ஆனால், உண்மையிலேயே நீ ஒரு அரைவேக்காடு என்பதால்தான், அதை பார்க்காமலேயே அதில் உள்ள படைப்புகளுக்கு திமுகவால் நடத்தப்படும் One Mind Generation Research என்ற நிறுவனம் ஆதரவு வழங்கி வருவதாக கூறியிருக்கின்றாய். திமுகவின் தொலைக்காட்சியான கலைஞர் தொலைக்காட்சியில் சம்பளக்குறைப்பை கண்டித்து அறிக்கை வெளியிட, திமுகவால் நடத்தப்படும் நிறுவனமே எப்படி ஆதரவளிக்கும்? அறிவு என்று ஒன்றிருந்தால், இதை நீ யோசித்திருப்பாய். ஆனால், பாவம் உன்னிடம் அதை எதிர்பார்க்க முடியாது.

எங்கள் இணையதளத்தில் அமைப்பு சார்ந்த இதுபோன்ற அறிக்கைகள், நிகழ்வுகள் குறித்த பதிவுகள் மற்றும் பத்திரிகையாளர்களின் சில கலைப்படைப்புகளை தாண்டி, அரசியல் சார்ந்த எந்த படைப்புகளையும் நாங்கள் அனுமதிப்பதில்லை. அப்படியிருக்கும்போது திமுகவால் நடத்தப்படும் One Mind Generation Research நிறுவனம் எங்களை எதற்கு ஆதரிக்க வேண்டும் முட்டாளே? எங்கள் இணையதளத்தில், திமுகவை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரித்து கட்டுரையோ, பதிவோ, கதையோ, கவிதையோ ஏதாவது ஒன்றை நீ காட்டினாலும் அந்த இணையதளத்தையே நாங்கள் மூடிவிடுகிறோம். அப்படி நீ காட்டாவிட்டால், உன் யூடியூப் தளத்தை மூடிவிடுகிறாயா? சவாலை ஏற்கத்தயாரா?

உனக்கு ஒன்று தெரியுமா? நீ இப்படி ஒரு பொய் பித்தலாட்டக் குற்றச்சாட்டு வைத்த பிறகு One Mind Generation Research நிறுவனம் குறித்து விசாரித்தோம். அப்போதுதான், அந்த நிறுவனம் மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே தனது செயல்பாட்டை நிறுத்திக்கொண்டதை அறிந்தோம்.

ஆக, ப்ளாக் செய்துவிட்டு, பதில் அளிக்கவில்லை என்று அலறுவது, மூடிய நிறுவனத்தை செயல்படுவதாக கூறி பொய் பிரச்சாரம் செய்வது என, பூட்டிய வீட்டின் வாசலில் நின்று கூச்சலிட்டுக்கொண்டிருக்கும் உன் போன்ற பைத்தியங்களுக்கு பதில் சொல்வதே வெட்டி வேலைதான். இருந்தாலும், உன்னையும் அறிவாளி என்று சில அப்பாவிகள் நம்பிக்கொண்டிருக்கிறார்களே…அவர்கள் புரிந்து கொள்வதற்காகவே இவ்விளக்கத்தை அளிக்கிறோம்.

அடுத்ததாக, கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலுக்கும், மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்திற்கும் தொடர்பு இருப்பதாக கூறியுள்ளாய். இதையும் எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல், வழக்கமாக உன் பாணியிலேயே உளறியுள்ளாய். முதலில் ஆதாரம் என்பதற்கு உண்மையான அர்த்தம் என்ன என்பதை தெரிந்துகொள். இரண்டு நபர்களுக்கு இடையில் தொடர்பு உள்ளது என்றோ, இரண்டு அமைப்புகளுக்கு இடையில் தொடர்பு உள்ளது என்றோ படம் போட்டு, அம்புக்குறியிட்டு காட்டினால் மட்டும் அது ஆதாரமாகாது முட்டாளே. நீ படம் போட்டுக்காட்டியுள்ளதை நிரூபிக்கும் வகையில் அதற்கு ஆதாரங்களை தர வேண்டும். தொடர்பை உறுதிப்படுத்தும் அந்த ஆதாரம், ஏதாவது ஆவணமாக இருக்கலாம் அல்லது ஆடியோ, வீடியோவாக இருக்கலாம். ஆனால், அதுபோன்ற எந்த ஆதாரத்தையும் குறிப்பிடாமல் தொடர்பு இருக்கிறது என்று நீ கூறிவிட்டால் அது உண்மையாகிவிடுமா? உன் போன்ற முட்டாளுக்கு இது புரியாவிட்டாலும், அறிவுள்ளவர்கள் இதை புரிந்துகொள்வார்கள்.

அந்த வகையில், One Mind Generation Research நிறுவனத்திற்கும் எங்களுக்கும் தொடர்பு உள்ளது என்று எந்த ஆதாரமும் இல்லாமல் படம் காட்டியது போலத்தான், கருப்பர் கூட்டத்திற்கும் எங்களுக்கும் தொடர்புள்ளதாக படம் காட்டியுள்ளாய். நீ இவ்வாறு அடிப்படை ஆதாரம் இல்லாமல், படம் காட்டுவதை பகுத்தறிவு மற்றும் சுயசிந்தனையுள்ள யாரும் நம்ப மாட்டார்கள்.

மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் பத்திரிகை துறையில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் அமைப்பு. எந்த துறையிலாவது, தொழிற்சங்கம் அந்த துறையை சார்ந்த அனைத்து நிறுவனங்களையும் கட்டுப்படுத்த முடியுமா? இந்தியாவில் தொழிற்சங்கங்கள் அவ்வளவு பலமாக வளர்ந்திருந்தால், உன்னைப்போல் ஒரு மதியிழந்த முட்டாளுக்கெல்லாம் இப்படி பதில் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. ஆகவே, மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம்தான் பத்திரிகை நிறுவனங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்துவதாக நீ கூறும் பச்சை பொய்யை நினைத்து சிரிக்கத்தான் தோன்றுகிறது.

சாதி, மதம், பாலினம் என அனைத்தையும் கடந்து அனைவரையும் தொழிலாளர்களாக ஒருங்கிணைப்பதையே தொழிற்சங்கம் நோக்கமாக கொண்டிருக்கும். அப்படித்தான் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையமும் செயல்பட்டு வருகிறது. பத்திரிகையாளர்களின் உரிமையையும், தன்மானத்தையும் பாதுகாப்பது மற்றும் உண்மையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்பதைத்தாண்டி வேறு எந்தவித அரசியல் நடவடிக்கையிலும் இதுவரை நாங்கள் ஈடுபட்டதில்லை. அப்படியிருக்கும்போது, குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக சிலரை தூண்டிவிட்டோம் என்பது அபாண்டமான குற்றச்சாட்டு மட்டுமல்ல, யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. நீ பிதற்றிய பிற குற்றச்சாட்டுகளைப் போலவே, இந்த கொடூரமான குற்றச்சாட்டுக்கும் படம் காட்டினாயே தவிர, எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை.

ஆகவே, சில தீய நோக்கத்திற்காக, மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் மீது எந்தவித ஆதாரமும் இல்லாமல் நீ அபாண்டமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளாய் என்பது தெளிவாகிறது. அதுபோல்தான் சில பத்திரிகையாளர்கள் மீதும் நீ தொடர்ந்து குற்றம்சாட்டி வருவதுடன் அச்சுறுத்தியும் வருகிறாய். இந்த செயலை நீ தனி நபராக செய்யவில்லை என்பதையும், உனக்கு கிடைக்கும் அற்ப பலனுக்காக இதுபோன்ற அநாகரீகமான செயலில் ஈடுபட்டு வருகிறாய் என்பதையம் அறியமுடிகிறது.

ஆகவே, பத்திரிகையாளர்களின் நலனை பாதுகாப்பது, அவர்கள் தங்கள் பணியை அச்சமின்றி செய்வதை உறுதி செய்வது, அதன் மூலம் கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பது ஆகிய நோக்கங்களை அடிப்படையாக கொண்ட மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம், பிழைப்புக்காக நீ செய்யும் இந்த வகை மிரட்டல்களுக்கெல்லாம் அஞ்சாது, உன்னைப்போன்ற அறிவற்றவர்களின் அச்சுறுத்தல்களிலிருந்து பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து முன்னெடுக்கும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

இப்படிக்கு,

S.மணிகண்டன்,
தலைவர்,
மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம்.