மறுக்கப்படும் அன்னையர்கள்

0
926

ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்!
தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்!
புலிகள் அழுவது ஏது? அட, பறவையும் அழ அறியாது!
போர்க்களம் நீ புகும்போது, முள் தைப்பது கால் அறியாது!

இந்தப் பாடல் வரிகளின் வாழும் உதாரணமாக இருக்கும் சன்னி லியோனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். A very Happy birthday to sunny Leone ❤

உலகமே அன்னையர் தின வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டிருக்கையில், என்னடா இது சன்னி லியோன் பிறந்தநாள் வாழ்த்து என்று புருவம் உயர்கிறதா?? உயரட்டும்.

பாலியல் குறித்து நாம் வெளிப்படையாக பேசவோ எழுதவோ காட்டும் தயக்கம்தான் இன்று நான்கு வயது சிறுமியை வன்புணரும் அளவிற்கு வளர்ந்து நிற்க காரணம். பாலியல் என்பது அவரவர் தனிப்பட்ட விஷயம். இதைப் பற்றி சம்பந்தமில்லாத மூன்றாம் நபர் பேசுவது அவசியமில்லை என்றெல்லாம் நினைத்ததும் உண்டு. ஆனால் இன்று பாலியல் என்பது தனிநபர் சார்ந்த விசயமல்ல.

• எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கு அரசு செலவு செய்யும் தொகை,
• கர்ப்பத்தடைகளுக்கு அரசு ஒதுக்கும் தொகை,
• அமெரிக்கப் பெண்கள் நிராகரித்த பெண்கள் கருத்தடைச் சாதனத்தை இந்தியப் பெண்களுக்கு ‘ஆஹோ ஓஹோ ‘ என்று புகழ்ந்து அறிமுகம் செய்த இந்தியச் சந்தை,
• தொடரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள்,
• குடும்பத்திற்குள் நடக்கும் பாலியல் அத்துமீறல்கள்

என நம் கண் முன்னே நிகழும் சம்பவங்கள் ஏராளம். இந்தச் சூழலில் இவை சார்ந்த செய்திகளையும் உண்மைகளையும் சமூகநலனும் அக்கறையும் கொண்ட அனைவரும் பேச வேண்டியது அவசியம்.

பாலியல் தொழில் பெண்ணுடலை மையப்படுத்தி உருவானதாகும். எந்தக் காலகட்டத்தில் எவ்வாறான சமூகமுறைமையில் உருவானது என்பது பற்றி எங்கல்ஸ் உட்பட இன்றைய பெண்ணிய மற்றும் சமூகவியல் அறிஞர்கள் பலரும் தத்தம் ஆய்வுகளின் வழியில் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். இவர்கள் அனைவரும் வந்தடைந்துள்ள பொதுவான முடிவு, பெண்ணை ஆண் அடிமை படுத்தத் தொடங்கியதுடன், பெண்ணின் பாலியல் நடவடிக்கைகளின் மீதான ஆணாதிக்க சமூகத்தின் வரையறைகள் ஏற்படுத்தப்பட்டதுடனும், ஆணின் பாலியல் நலனை முதன்மைப்படுத்தத் தொடங்கியதனதும் விளைவாகத்தான் சமூகத்தில் பெண்களின் ஒரு சாரார் தமது பாலியல் ஆற்றலை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்பதாகும்.

அண்மையில் சமூகம் அங்கீகரிக்காதப் பாலியல் உறவு சார்ந்த செய்திகள் அதிகமாகப் பத்திரிகைகளில் வருகின்றன. இவைகளுக்கான காரணங்களை உள ரீதியாகவும் புற காரணிகள் ரீதியாகவும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

தன் குழந்தைகளின் பராமரிப்பு செலவினங்களுக்காக சராசரியாக ஒரு நாளில் 8 முதல் 10 ஆண்களுடன் புணர்ந்து, பாலியல் தொழிலில் ஈடுபட்டு விவரிக்க வார்த்தையில்லா வேதனைகளை அனுபவிக்கும் அன்னைகளுக்கும்…

உடல் வடிவமிழந்த காரணத்தால் 40 வயதுக்குப் பின் பிச்சை எடுத்து வாழ வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கும் அன்னைகளுக்கும்…

NGOக்களால் பாலியல் தொழிலிருந்து மீட்கப்பட்டு, இந்த பொது சமூக நீரோட்டத்தில் கலந்திட முடியாமல் மீண்டும் பாலியல் தொழிலுக்கே வந்து அதிர்ச்சியுட்டும் அன்னைகளுக்கும்…

நம் அன்னையர் தின வாழ்த்து என்ன ஆறுதலைத் தந்துவிடப்போகிறது?

இந்த பேரிரைச்சலில் நமக்கு என்றுமே கேட்கப்போவதில்லை, மருந்துகளோடு மரணத்தை எதிர்பார்த்துக் காத்துக்கிடப்பவர்களின் கலகக்குரல்!