மரியாதைக்குரிய தோழர் தொல்.திருமாவளவனுக்கு

0
722

வார்த்தைகளில் நிதானம், பழகுவதில் கண்ணியம் என்ற தங்களின் பண்பே இதுவரை திருமாவின் அடையாளமாக இருந்துவந்துள்ளது. ஆனால் ஊடகவியலாளர்களின் மீதான உங்களின் பார்வை என்ன என்பதை, கடந்த 30ம் தேதி மதுரை பொதுக்கூட்டதில் நீங்கள் பேசிய பேச்சு எங்களுக்கு உணர்த்தியுள்ளது. ஆம், அதுவும் உங்கள் அண்ணன் ‘தருமர்’ விஜயகாந்த் துப்பியதில் என்ன தப்பு என்பது போல் பேசிய நீங்கள், அவர் ஊடகங்களை சந்திக்காமல் இருப்பது துணிச்சல் என்கிற ரீதியிலேயே உங்கள் பேச்சு அமைந்திருந்தது.

விஜயகாந்த் துப்பியது பத்திரிக்கையாளர்களை மட்டும் அல்ல, ஊடக அதிபரான தன்னையும்தான் என்பதை அவருக்கு புரியவையுங்கள். ஊடகங்கள் ஆளும் வர்க்கத்தின் ஊதுகுழலாக மட்டுமே செயல்பட வேண்டும் என்பதை வழிமொழியும் திருமா அவர்களே, நீங்கள் எந்த வகையில் மாற்றத்தை நோக்கி பேசுகின்றீர்கள்?? “விஜயகாந்திடம் கேட்ட கேள்வியை ஜெயாவிடம் கேட்க முடியுமா?” என்பது உங்கள் கேள்வி. விஜயகாந்திற்கு எதிராக, கேப்டன் தொலைக்காட்சியில் உள்ள தோழர்கள் கேள்வி கேட்க அனுமதிக்கப்படுவார்களா? அல்லது நீங்கள் ஆரம்பிக்க உள்ள ‘வெளிச்சம்’ தொலைக்காட்சியில்தான் உங்களுக்கு எதிரான கேள்விகளை அனுமதிப்பீர்களா? அனுமதிக்க மாட்டீர்கள். ஏனென்றால், ஊடகங்கள் அரசியல்வாதிகளின் குரலாக மட்டுமே இருக்க வேண்டும் என்ற விஜயகாந்த் போன்றவர்களின் செய்தி தொடர்பாளர் போல நீங்கள் மாறிவிட்டீர்கள். நீங்கள் பேசும் கருத்து சுதந்திரம் இதுதானா? திமுக அதிமுகவிற்கு மாற்று என்று பேசும் நீங்கள், ஊடகவியலாளர்களிடம் நடந்துகொள்வதில் ஏன் மாற்றத்தை நடைமுறைபடுத்துவதில்லை?

பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக மற்ற அரசியல்கட்சி தலைவர்களும் பேசிக்கொண்டிருக்கும் போது, இந்த திருமாவளவனை மட்டும் குறிவைப்பது ஏன்? தலித் பிரதிநிதி என்பதாலா? என்ற கேள்வியை நீங்கள் எழுப்புவீர்கள். உண்மையை சொல்ல வேண்டும் என்றால், தவறான பாதையில் செல்பவர்களை தடுக்க வேண்டிய கடமை எங்களுக்கு உண்டு என்ற அளவிலேயே இதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை குரலாய் ஒலித்த திருமாவின் குரல், இன்று கூட்டணி தர்மம் என்ற பெயரில் விஜயகாந்த்தின் குரலாய் ஒலிக்கிறதே என்பது என் போன்ற ஊடகவியலாளனின் பெரும் கவலையாய் உள்ளது.

இப்படிக்கு,
உங்களை கவனித்து வரும் ஊடகவியலாளன்