‘‘மதுவினால் சுயநினைவிழந்த பெண்’ என்பதே என் பெயராகிப் போனது!’’ – பாலியல் தீண்டலுக்கு ஆளான பெண்ணின் கடிதம்…!!!

0
814

இந்த சம்பவம் ஒரு வார இதழ் இணையதளத்தில் படித்தேன். என்னை மிகவும் பாதித்த, பல கேள்விகளை என்னுள் எழுப்பியது பாதிக்கப்பட்ட பெண்ணின் குமுறல்.
அந்த சம்பவம் என்னவென்றால்..!!!
வார இறுதியில் வீட்டில் தங்கையுடன், செல்லமாகச் சண்டையிட்டுக் கொண்டிருந்த நிறைவான சனிக்கிழமை அது. அவள் தனது நண்பர்களுடன் பார்ட்டிக்குச் செல்லப் புறப்பட்டாள். நான் வீட்டில் இருந்து புத்தகங்கள் வாசிக்கலாம் என்று நினைத்தேன். தங்கை மறுநாள் ஊருக்குக் கிளம்ப இருந்ததால், அவளுடன் நேரம் செலவழிக்க ஆசைப்பட்டு, நானும் பார்ட்டிக்குக் கிளம்பினேன். என் தங்கை நான் அணிந்திருந்த நீளமான உடையைக் கிண்டலடித்தபடியே வர, இருவரும் மகிழ்ச்சியுடன் பார்ட்டி ஹாலில் நுழைந்தோம். அங்கு ஒரு கோப்பையில் இருந்த கருப்பு நிறத்து பானத்தை அருந்தினேன்.
அடுத்து எனக்கு நினைவில் இருப்பது, ஒரு மருத்துவமனையில் நான் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த தருணம்தான். கை மற்றும் தோள்களில் காய்ந்த ரத்தக்கறைகள். பேண்டேஜ்கள் ஒட்டப்பட்டு இருந்தன. என் தங்கையைக் காணவில்லை. அவளது நண்பர்களையும் காணவில்லை. ஒருவர் வந்து என்னிடம், ‘நீங்கள் தாக்கப்பட்டிருக்கிறீர்கள், அமைதியாக இருங்கள்’ என்றார். யாரோ என நினைத்து என்னிடம் பேசுகிறார் என்றே நினைத்தேன்.
சிறிது நேரம் கழித்து கழிவறைக்குச் சென்றபோது, நான் உள்ளாடை இல்லாது இருப்பதை உணர்ந்தேன். என்ன ஆயிற்று எனக்கு? என் உள்ளாடை எங்கே? சட்டென ஒரு கொடூரமான அமைதி என்னைப் பிடித்துக்கொண்ட அந்த நொடியை விவரிக்க இயலாது.
வெளியே வந்தபோது, என்னைப் பல அறைகள் கடந்து அழைத்துச் சென்றார்கள். அப்போது என் கழுத்தில், முதுகில், கேசத்தில் மண்ணும், சில, பல சிராய்ப்புகளும் இருந்ததை உணர்ந்தேன். ‘என்ன ஆயிற்று எனக்கு?’ என்ற கேள்வி, இன்னும் அடர்த்தியான அச்சத்தை உள்ளுக்குள் இறக்கியது. சிறிது நேரத்தில், என் ஆடைகள் அகற்றப்பட்டு என் உடல் பரிசோதிக்கப்படுகிறது. என் உடலின் சிராய்ப்புகளை அவர்கள் புகைப்படம் எடுக்கிறார்கள். இப்போதும் எனக்கு என்ன நடந்தது, என்ன நடக்கிறது என்பது புரியவில்லை. என் பெண் உறுப்பிலும், பல பரிசோதனைகளமேற்கொள்ளப்படுகின்றன.
சில மணி நேரம் கழித்து, நான் குளிக்க அனுமதிக்கப்படுகிறேன். முழுக்கத் தண்ணீர் வழிய நின்ற அந்த கணத்தில், என் உடலுக்கு ஏதோ நேர்ந்திருக்கிறது என்பது மட்டும் புரிகிறது. ஓர் ஆடையைப்போல, அந்த உடலை அப்படியே மருத்துவமனையில் கழற்றிவீசிவிட்டு வெளியேறவிடமாட்டோமா என்று நெஞ்சு பதறுகிறது.
வெளியே வந்தபோது, ஆறுதலான அணைப்புகள் தந்து அவர்கள் என்னிடம் கூறினார்கள். ‘‘பரிசோதனைகள் முடிந்தன. உங்களை ஒருவன் வன்புணர்ச்சிசெய்ய முற்பட்டிருக்கிறான். நீங்கள் இப்போது வீட்டுக்குச் செல்லலாம்.’’
இந்த சுருக்கமான, உயிரை உடைத்துப்போட்ட தகவலுடன் நான் எப்படி என் வாழ்க்கைக்குத் திரும்புவது?
பார்க்கிங்கில் கண்ணீரில் நமத்துப்போன முகத்துடன் நின்றிருந்த என் தங்கையைப் பார்த்தபோது, என்னைக் கிழித்த கேள்வி பற்றி மறந்து, அவள் வலியைக் குறைக்க நான் புன்னகைத்தேன். என் உடல் முழுக்க ஒளிந்திருந்த கீறல்கள், காயங்களும், என் பிறப்புறுப்பில் ஏற்பட்டுள்ள வலியும், அதைவிட அதிகமான என் மனவேதனையும் அவளுக்குத் தெரிய வேண்டாம். என் உள்ளாடை எங்கு கிடக்கிறது என்பது எனக்கே தெரியாது என்பதும், அவளுக்குத் தெரிய வேண்டாம்.
என் நண்பன் தொலைபேசியில் தொடர்புகொண்டான். முந்தைய நாள் இரவில், அவனை நான் அலைபேசியில் அழைத்ததில் ஏதோ பதற்றம் தெரிந்ததாகச் சொன்ன அவன், ‘நீ பத்திரமாக வீடு போய் சேர்ந்தாயா?’ எனக் கேட்டான். ஆனால், அது எதுவுமே எனக்கு நினைவில் இல்லை. ‘பத்திரமாக இருக்கிறேன்’ என்று மட்டும் அவனுக்குப் பதிலளித்தேன்.
நண்பனிடமோ, என் பெற்றோரிடமோ, யாரிடமோ, என்னவென்றே நான் அறியாத, எனக்கு நிகழ்ந்த அந்த துயரத்தையும், நான் அனுபவிக்கும் வேதனையையும் பற்றிப் பகிர்ந்துகொள்ளக்கூடாது என முடிவெடுத்தேன். என் மனதை சுத்தமாக்க நினைத்து நினைத்து, தோற்றுப் போனேன். உண்ண முடியவில்லை. உறக்கம் தொலைந்துபோனது. அடிக்கடி ஒரு தனிமையான இடம் தேடிச்சென்று கதறிக் கதறி அழுதேன்.
ஒருநாள், அலுவலகத்தில் அலைபேசியில் செய்திகள் படித்துக்கொண்டிருந்தேன். அந்த இரவில் எனக்கு என்ன நேர்ந்தது என்பதை, அந்தச் செய்தி எனக்குச் சொன்னது.
நான் சுயநினைவின்றி கிடந்திருக்கிறேன். கேசம் கசங்கியும், மேலாடைகள் இழுக்கப்பட்டும், கீழ் ஆடைகள் களையப்பட்டும், அந்தரங்கமான அத்துமீறலுக்கு உட்பட்டும் கிடந்திருக்கிறேன் என்று, எனக்கு நேர்ந்த கொடுமையை உலகம் தெரிந்துகொண்ட அதே கணத்தில்தான் நானும் தெரிந்துகொண்டேன். இறுதி வாக்கியம்தான், என்னை வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டு உலுக்கியது. என் சம்மதத்துடன், எனக்குப் பிடித்திருந்ததால்தான் என்னை பாலியல் தீண்டல் செய்ததாகக் கூறியிருந்தான் அவன்.
அவன்?
யார் அவன்? எனக்கு யாரென்றே தெரியாத அவன். என் வாழ்வின் சந்தோஷம், நிம்மதி அனைத்தையும் தன் கீழ்த்தரமான செய்கையால் ஓர் இரவில் பறித்துபோட்ட அவனைப் பற்றி, ‘ஒலிம்பிக்குக்கான தகுதிச் சுற்றில் பங்கேற்க திறன்பெற்ற நீச்சல் வீரன்’ என்ற குறிப்பும் அந்தச் செய்தியில் இருந்தது. நான் அனுபவித்த பாலியல் கொடுமையின் கிராஃபிக் விளக்கங்கள் தரப்பட்ட அதே செய்தியில், அவன் நீச்சல் திறன் பற்றிய குறிப்பு. அதே செய்தியின் இன்னொரு பத்தி எனக்குத் தந்தது, என்னால் மன்னிக்க முடியாத அதிர்ச்சி.
அவனைப் பொருத்தவரை, எனக்கு நிகழ்ந்ததை நான் விரும்பினேன் என்று, எனக்காகவும் அவனே பேசியிருந்தான். அதைப்படித்தபோது என் உள்ளம் கொதித்ததை, வார்த்தைகளில் சொல்ல முடியாது.
அன்றிரவு அந்தச் செய்தி தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பப்பட, என் பெற்றோரிடம் அந்தப் பெண் நான்தான் என்றும், ஆனால் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்றும், அதிலிருந்து நான் மீண்டுவிட்டதாகவும் கூறினேன்.
இந்தக் கொடூரத்தை எனக்கு இழைத்தது யாரென்று தெரிந்துவிட்டது. தகுந்த ஆதாரங்களும் இருந்ததால் அவனுக்குத் தண்டனை கிடைப்பது உறுதி, இந்த வழக்கு விரைவில் முடிந்துவிடும் என்று நம்பினேன். ஆனால், அதிகப் பணம் கொடுத்து வழக்கறிஞர்களை அவன் அமர்த்தியிருந்தான். மது அருந்தி இருந்ததால் நினைவற்று இருந்த என்னுடைய அந்த நிலையை அவர்களுக்கு சாதமாக்கிக்கிக்கொண்டு வாதாடினார்கள். அவன் வலுக்கட்டாயப்படுத்தி உடலுறவுக்கு முயற்சிக்கவில்லை, அது நானும் விரும்பி நடந்த நிகழ்வு என்று ஜோடித்தார்கள். மேலும், அவன் சூழ்நிலையின் குழப்பத்தில்தான் அதைச் செய்தான் என்பதை நிரூபிக்க பிரயத்தனப்பட்டார்கள். என் மீதும் தவறு என்பதை ஒப்புக்கொள்ள வற்புறுத்தினார்கள்.
‘உன் வயது என்ன? உன் எடை என்ன? நீ அன்றைய தினம் என்ன சாப்பிட்டாய்? அன்று குடித்திருந்தாயா? எப்போது சிறுநீர் கழித்தாய்? யாருடன் சிறுநீர் கழித்தாய்? உன் காதலனோடு ஏற்கெனவே உடலுறவு கொண்டிருக்கிறாயா? உனக்கு வேறு என்ன நினைவிருக்கிறது?’ இவையெல்லாம் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள். என் குடும்பம், என் காதல், என் அலுவல் என்று எல்லா தளங்களிலும் என்னை அவமானப்படுத்தும் கேள்விகள். என்னை ஒரு குடிகாரப் பெண்ணாகச் சித்தரித்து, வழக்கை அவனுக்குச் சாதமாக்க உருவாக்கப்பட்ட கேள்விகள்.
என்னிடமும் கேள்விகள் உள்ளன. நீ என் அனுமதியுடன், விருப்பத்துடன்தான் என்னை அணுகியதாகக் கூறியிருக்கிறாய். நான் சுயநினைவின்றி கீழே விழுந்துவிட்டதாகக் கூறியிருக்கிறாய். கீழே விழுந்த பெண்ணை, அதுவும் சுயநினைவின்றி இருக்கும் பெண்ணை தூக்கிவிட வேண்டுமே தவிர, நீ செய்ததுபோல உன் கேவலமான இச்சை தீர அவள் உடலில் விழுந்து, அவளை விழுங்க முயற்சித்திருக்கக் கூடாது.
இருவரும் குடித்திருந்ததால் இருவரும் நிதானம் இழந்திருந்தோம் என்று கூறியிருக்கிறாய். ஆம், இருவரும் குடித்திருந்தோம். குடிப்பழக்கம் தவறுதான், ஒத்துக்கொள்கிறேன். ஆனால், நான் குடித்தது மட்டுமே எனக்கு நிகழ்ந்த இந்த அநியாயத்துக்கு காரணமல்ல. நீ குடித்திருந்தது, உன் கேவலமான செய்கையில் இருந்து தப்பிப்பதற்கான சாக்கும் அல்ல. இருவரும் குடித்திருந்தாலும், உனக்கும் எனக்குமான வித்தியாசம்… நான் குடித்ததனால் உன்னை நிர்வாணமாக்க முற்படவில்லை, உன்னை அருவருக்கத்தக்க வகையில் தொடவில்லை, என் விரல்கள் உன் உடலுக்கு கீழ்த்தரமான பாலியல் துன்புறுத்தல் இழைக்கவில்லை.
மேலும், குடிப்பழக்கம் வாழ்க்கையையே சிதைத்துவிடும் என உலகுக்குக் காட்ட இப்படி நடந்துகொண்டதாக குறிப்பிட்டிருக்கிறாய். உன் வாழ்வு மட்டுமா? என் வாழ்வும் சிதைந்துபோனது. நீ உன் சாதனைகள், பட்டங்களைத் தொலைத்துவிட்டதாகக் குமுறுகிறாய். நான் உள்ளே எவ்வளவு உருக்குலைந்து கிடக்கிறேன் தெரியுமா? என் மதிப்பு, என் அந்தரங்கம், என் சக்தி, என் நேரம், என் தன்னம்பிக்கை, என் குரல்… என் பெயர் உட்பட அனைத்தையும் இழந்து நிற்கிறேன். ‘மதுவினால் சுயநினைவிழந்த பெண்’… இப்படித்தான் என்னை செய்தித்தாள்கள் குறிப்பிடுகின்றன. இந்த ஓர் ஆண்டில் இதுவே என் அடையாளமாகிப்போனது. இதிலிருந்து என்னை நான் எப்படி மீட்பது? அதே சமயம் உன்னை, ‘சாதனையாளன் என்றும், பெரிய நீச்சல் வீரன்’ என்றும் ஊடகம் குறிப்பிடுவதை, ஆற்றாமையும் கொதிப்புமாக கடந்துகொண்டிருக்கிறேன்.
அந்த இரவுக்கு முன்பு நான் வாழ்ந்த வாழ்க்கையை உன்னால் எனக்கு மீண்டும் அளிக்க இயலாது. என்னால் இரவில் வெளிச்சம் இல்லாமல் உறங்க முடியவில்லை. பல நாட்கள் என்னை யாரோ தொடுவதுபோல உணர்ந்து விழித்து எழுந்து, அந்த பயம் மீதி இரவின் தூக்கம் பறித்துக்கொள்ள, காலையில் 6 மணிக்கு வெளிச்சம் பார்த்ததும்தான் கண்கள் மூடுகிறேன். ஒரு காலத்தில் என் சுதந்திரத்தைப் பற்றி பெருமையாக பேசித் திரிந்த நான், இன்று என் நண்பன் இல்லாமல் எங்கும் செல்வதில்லை. உறங்கும்போதும் அவனுடைய பாதுகாப்பு தேவைப்படுகிறது.
நீ என் உலகத்தை எனக்கு அந்நியப்படுத்திவிட்டாய். ‘மதுவினால் சுயநினைவிழந்த பெண்’ என்பதை என் அடையாளமாக மாற்றிவிட்டாய். உன்னால் நான் உறங்காமல் தவித்த இரவுகளை திரும்பக்கொடுக்க முடியாது. ஸ்பரிசங்கள் எனக்குத் தரும் அச்சங்களை அகற்ற முடியாது. நான் அழுத, அழவிருக்கும் அழுகைக்கு பதில் சொல்ல முடியாது.
இந்த சம்பவம்தான் எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது!!!
பெண் என்றால் புனிதம்.. கற்பு என்றால் புனிதம் என்று ஆண்டாண்டுகளாக சொல்லித்திரியும் இந்த சமூகத்தில் ஏன் ஒரு பெண்ணிடம், அதுவும் சுயநினைவே இல்லாத ஒரு பெண்ணிடம் இந்த மாதிரியான செயலை செய்ய முடிகிறது? என்பது போன்ற கேள்விகள் எழத்தொடங்கியது… அதற்கு என்ன காரணம் என்றும் எனக்குள்ளேயே பதிலையும் தேடிக்கொண்டிருந்தேன்…
இங்கு பெண்ணை பெண்ணாகவும், சக மனுஷியாகவும் பார்க்காமல், அவளை புனிதமாகவும், தெய்வமாகவும் , புரிந்து கொள்ளவே முடியாத வகையில் காட்சிப்படுத்தி வைப்பதால் தான் இதுபோன்ற செயலுக்கு காரணம் என்று தோன்றுகிறது..
பாலியல் (ஆண், பெண்) குறித்தான சரியான புரிதல் இல்லாமையும் இதற்கு காரணமா? பாலியல் குறித்தான புரிதலை எப்படி? எங்கிருந்து பெறுவது? ஒரு வேலை பாலியல் கல்வியின் மூலம் இதனை சரி செய்து விடலாமா? பாலியல் கல்வியா? அய்யய்யோ அதல்லாம் கூடவே கூடாது, ஏற்கெனவே சினிமா, செய்தித்தாள், ஊடகம் மூலம் படிக்கிற பசங்க கூட உருப்புடாம போச்சி.
இதுல பாலியல் கல்வி! எப்படி உடல் உறவு கொள்வதுனு படம் போட்டு பாடம் வேற நடத்தணுமா ? கேக்கும்போதே கேவலமா இருக்கே என்று பாலியல் கல்வி குறித்தான முழு புரிதல் இல்லாமல் பொத்தாம் பொதுவாக பேசும் கும்பல் ஒருவகை.
பாலியல் கல்வி என்பது அறிவியல் பூர்வமாக அந்தந்த வயசுல ஆண், பெண் இருவருக்கும் அவர்களின் வளர்ச்சி குறித்தும், ஹார்மோன் மாற்றம் குறித்தும் இதுதாண்டா இவ்வளவேதாண்டானு சொல்வது. இக்கல்வியை அளிப்பதன் மூலம் பாலியல் மீதான ஈர்ப்பும்,தேடலும் குறையும்.
பெண் குறித்தான கேள்விகளை பெற்றோரிடமோ, பிறரிடமோ கேட்கும் போது சரியான பதிலை தராமல், கோபப்படுவதும், அடிப்பதும், சம்மந்தம் இல்லாத கேள்விய கேக்காதனும் அதட்டுவதும் தான் நடக்கிறது இந்த சமுதாயத்தில். இதன் விளைவு பெண்ணின் உடல் மீதான ஆர்வமும், அதை எப்படியாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்ற துடிப்பும் ஏற்படுகிறது. நண்பர்கள் மூலமோ, இணையதளம் வாயிலாகவோ அல்லது இந்த சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களிடத்தில் சென்றோ தவறான முறையில் கற்றுக்கொள்ள தூண்டுகிறது. இது சமுதாயத்துக்கு அவமானமாக தெரியவில்லையா???.
இன்னொரு வகையான கும்பலும் இருக்கு. பாலியல் கல்வி தந்தா போதும் இந்த நிலை மாறிடுனும்னு சொல்வாங்க..
ஆனால், பாலியல் கல்விய கொடுத்தா மட்டும் இங்கு எதுவும் மாறாது. அதுக்காக பாலியல் கல்வி வேண்டாம்னு சொல்லல, ஏன்னா இத ஒருபக்கம் செய்துகொண்டே மற்றொரு வேலையையும் செய்ய வேண்டி உள்ளது ..
இங்கு கட்டமைக்கப்பட்ட சமூகமானது மிகவும் பின்தங்கிய சமூகம். இங்குள்ள கலாச்சாரம், புனிதம் போன்ற பழைமைவாத கட்டமைப்பு மாற்றாமல், இது போன்ற சீர்திருத்தங்கள் எந்தவிதமான நன்மையும் பயக்காது என்பது உறுதி.
இந்த சமூகம் முற்றிலும் மாறுபட்ட, அனைவரும் சமமாக மதிக்கப்படும், எல்லாருக்குமான சமூகமா மாறினாதான் இந்த நிலை மாறும்…!