மதுரை, தினத்தந்தி பத்திரிகையின் புகைப்படக்கலைஞர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கின்றது.

0
883
23 ஜனவரி 2016
மதுரை, தினத்தந்தி பத்திரிகையின் புகைப்படக்கலைஞர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கின்றது.
      மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் ஆன்மீக நிகழ்ச்சியை படம் பிடிப்பதற்காக, மதுரை தினத்தந்தி பத்திரிகையை சேர்ந்த புகைப்படக்கலைஞர் சரவணன் சென்றுள்ளார். இன்று (23.01.2016) அவர் பணியின் நிமித்தமாக படம் எடுத்துக்கொண்டிருந்தபோது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை ஆய்வாளர் சேதுமாதவன் என்பவரால் தாக்கப்பட்டுள்ளார். மேலும், ஆய்வாளர் சேதுமாதவன், சரவணனை தரக்குறைவாக பேசியதுடன், அவருடைய உடைமைகளை பறித்துக்கொண்டதாகவும் கூறப்படுகின்றது.
      தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், காவல்துறையும், பத்திரிகையாளர்களும், பொது நிகழ்வுகளில் அடிக்கடி சந்திக்க வேண்டிய தேவையுள்ளது. இந்த நேரத்தில், மதுரையில் நடந்துள்ள இந்த சம்பவம், பத்திரிகையாளர் மத்தியில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. புகைப்படக்கலைஞர் சரவணனை தாக்கிய காவல்துறை ஆய்வாளர் மீது, மதுரை மாவட்ட காவல்துறை, உரிய நடவடிக்கை எடுப்பதன் மூலம் மட்டுமே, இந்த தேர்தல் காலத்தில், பத்திரிகையாளர்களும், காவல்துறையினரும் கட்டுப்பாடுடனும், சுமூகமாகவும் பணியாற்றும் சூழலை உறுதிப்படுத்த முடியும்.
     ஆகவே, தினத்தந்தி புகைப்படக்கலைஞர் சரவணணை தாக்கிய காவல்துறை ஆய்வாளர் சேதுமாதவனின் செயலை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிப்பதுடன், அவர் மீது, மதுரை மாவட்ட காவல்துறை, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றது.
      இந்தவேளையில், நம்முடைய நீண்டநாள் கோரிக்கையான, பணியில் இருக்கும் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் சிறப்பு சட்டத்தை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை அனைத்து பத்திரிகையாளர்களும் ஒருங்கைணைந்து வலியுறத்த வேண்டும் என, மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கின்றது.