மக்கள் செய்தி மையம் என்ற மஞ்சள் பத்திரிகை வெளிட்டுள்ள அறிக்கைக்கு “சென்னை பத்திரிகையாளர் மன்றம் தேர்தல் நடவடிக்கைக் குழுவின்” விளக்கம்

0
856

“சென்னை பத்திரிகையாளர் மன்றம் தேர்தல் நடவடிக்கைக் குழு” சார்பாக, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று (20.03.16) நடைபெற்ற கூட்டம் குறித்து பல்வேறு அவதூறு பரப்புரைகள் ஊடகங்களின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு குறிப்பிட்ட ஊடக நிறுவனத்தின் நிர்வாகிகளால் “சென்னை பத்திரிகையாளர் மன்றம் தேர்தல் நடவடிக்கை குழு” இயக்கப்பட்டுவருவதாகவும் அவதூறு பரப்பப்பட்டு வருகின்றது. தேர்தல் நடவடிக்கை குழு உருவாக்கப்பட்டது தொடங்கி, இன்று (20.03.16) நடந்த கூட்டம் வரை, அனைத்துக் கூட்டங்களிலும் மூத்த பத்திரிகையாளர்கள் மயிலை பாலு மற்றும் தீக்கதிர் குமரேசன் கலந்துகொள்கின்றனர். அப்படி உண்மையிலேயே இந்தக் குழு, குறிப்பிட்ட சில நபர்களால் வழிநடத்தப்படும் பட்சத்தில், அவர்கள் இந்த குழுவில் நீடித்திருப்பார்களா?
மக்கள் செய்தி மையம் என்ற மஞ்சள் பத்திரிகை சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், பத்திரிகையாளர் மன்றத்தில் உள்ளே புகுந்து சில பத்திரிகையாளர்கள் கலகம் விளைவித்ததாக கூறப்பட்டுள்ளது. முதலில், அவ்வாறு நடந்திருக்கும் பட்சத்தில், அதை பத்திரிகையாளர் மன்றம்தானே கண்டித்திருக்க வேண்டும்? இங்கு மக்கள் செய்தி மையம் எங்கிருந்து வந்தது? அந்த அறிக்கையில், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் CCTV கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது. அந்த புகைப்படத்தை மக்கள் செய்தி மையத்திற்கு எதன் அடிப்படையில் கொடுக்கப்பட்டது? அப்படியென்றால், மக்கள் செய்தி மையம், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் துணை அமைப்பா? இது உண்மையென்றால், மக்கள் செய்தி மையத்தின் நடவடிக்கைகளுக்கெல்லாம் சென்னை பத்திரிகையாளர் மன்றம் பொறுப்பேற்க முடியுமா? மக்கள் செய்தி மையம் என்ற மஞ்சள் பத்திரிகையின் அவதூறு பரப்புரைகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், இன்று நடைபெற்ற நிகழ்வை விளக்குகின்றோம்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் நூற்றுக்கணக்கான உறுப்பினர்களிடம், முறையாக கையெழுத்தை பெற்று, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களின் கையொப்பத்தையும் பெற்ற பிறகே, இந்த கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஏற்கனவே உறுப்பினராக உள்ளவர்கள், நியாயமாக தேர்தலை நடத்த வேண்டும் மற்றும் சக பத்திரிகையாளர்களின் விண்ணப்பங்கள் ஏன் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை விளக்க வேண்டும் என்ற கோரிக்கைகளின் அடிப்படையிலேயே இன்று நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டனர். அதேபோல், தங்களுடைய விண்ணப்பங்கள் ஏன் நிராகரிக்கப்பட்டன என்பதற்கான விளக்தை அறியும் வகையில் மற்ற உறுப்பினரல்லாத, உண்மையான பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர். தேர்தலை சந்திக்காமல், புறவாயிலின் வழியாக நுழைந்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தை கடந்த 16 ஆண்டுகளாக ஆக்கிரமித்துள்ள கூட்டம், உறுப்பினர்கள் அல்லாத பத்திரிகையாளர்கள் சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்குள் நுழையக் கூடாது என்று கூறுவதை மானமுள்ள எந்த பத்திரிகையாளனும் ஏற்றுக்கொள்ள மாட்டான். அத்துடன், உறுப்பினர்கள் அல்லாத பத்திரிகையாளர்கள், மன்றத்திற்குள் நுழையக்கூடாது என்று எந்த விதியும் இல்லை என்பதையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்டுகின்றோம்.
ஏற்கனவே அறிவித்தபடி, காலை 11 மணியளவில் பத்திரிகையாளர் மன்றத்திற்கு வரத்தொடங்கினர். மன்றத்தின் வாயிலில் நான்கு காவல்துறையினர் பாதுகாப்பிற்கு நின்று கொண்டிருந்தனர். கூட்டத்தை நடத்துவதற்கான நாற்காலிகளை மேல் தளத்திற்கு அனைவரும் எடுத்துச் சென்று கொண்டிருந்தோம். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த வேந்தர் தொலைக்காட்சியின் செய்தியாளர் முருகேசன், அங்கு வந்த பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேச ஆரம்பித்தார். இதைத்தொடர்ந்து அவர் தன்னுடைய பேச்சை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பத்திரிகையாளர்கள் கேட்டுக்கொண்டனர். உடனே அவருக்கு ஆதரவாக, சில நபர்கள் பத்திரிகையாளர்களிடம் வாக்குவாதம் செய்யத் தொடங்கினர். சில நிமிடங்கள் நீடித்த வாக்கு வாதத்திற்கு பிறகு அனைவரும் முதல் தளத்திற்கு சென்று கூட்டத்தை தொடங்கினோம். அந்த வாக்குவாதம் நடக்கும்போது, மூத்த பத்திரிகையாளர் பாலு அவர்களும் அங்கிருந்தார். அவரின் தலையீட்டிற்குப் பிறகே, வாக்குவாதம் நிறுத்தப்பட்டு, கூட்டம் தொடங்கியது. வாக்குவதத்தில் ஈடுபட்ட முருகேசன் மற்றும் அவருடன் இருந்தவர்களும், முழுமையாக கூட்டத்தில் பங்கேற்றனர். அவர்களுக்கும் பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவர்களும் தங்கள் கருத்தை பதிவு செய்தனர். இறுதியில் முடிவு குறித்து வாக்கெடுப்பு நடந்தபோது, அவர்களும் அந்த நடவடிக்கையில் கலந்து கொண்டனர்.
உண்மையில் பிரச்சனை ஏற்பட்டிருக்கும் பட்சத்தில், வெளியில் காவலுக்கு நின்ற காவல்துறையினரை அவர்கள் ஏன் உதவிக்கு அழைக்கவில்லை? ஆகவே, பத்திரிகையாளர்கள் மன்றத்தில் புகுந்து கலவரத்தில் ஈடுபட்டதாக மஞ்சள் பத்திரிகையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது தீவிர உள்நோக்கம் கொண்டதாகவே நாங்கள் பார்க்கின்றோம். அடுத்ததாக அந்த மஞ்சள் பத்திரிகையின் அறிக்கையில், கூட்டத்தில் கலந்து கொண்ட பத்திரிகையாளர்களில் சிலர், தாங்கள் ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்களால் இயக்கப்படுவதாக, தாங்களாகவே ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டுள்ளது. உண்மையில் அவ்வாறாகவே இருப்பதாக வைத்துக்கொண்டாலும், எவராவது அந்த விஷயத்தை எல்லோர் மத்தியிலும் வெளிப்படையாக தெரிவிப்பார்களா? தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன? இதிலிருந்தே அறிக்கைவிட்ட நபரின் மனநிலை நன்கு தெரியவருகின்றது. மூத்த பத்திரிகையாளர்கள் குமரேசன், மயிலை பாலு ஆகிய இருவரும் கூட்டம் முழுவதும் இருந்தார்கள் என்ற வகையில், அவர்களிடம் அவ்வாறு பேசப்பட்டதா என்பதை யார் வேண்டுமானாலும் கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ளலாம்.
அடுத்ததாக, கொடுக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில், 80 சதவீத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதன் காரணம் என்ன என்பதை தெரியப்படுத்த வேண்டும் என்பதையும் வலியுறுத்தியே இன்றைய கூட்டம் நடத்தப்பட்டது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், மஞ்சள் பத்திரிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் யாரோ ஒன்றிரண்டு நபர்களின் பெயர்களை குறிப்பிட்டு, அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதன் காரணத்தை தெரிவித்திருப்பது, விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதன் பின்னனியில் உள்ள மிகப்பெரிய பித்தலாட்டத்தை பூசி மொழுகும் தந்திரமாகவே நாங்கள் பார்க்கின்றோம். பத்திரிகையாளர் மன்றத்திற்கு தேர்தலை நடத்த வேண்டும் என்று, கடந்த ஆண்டு முதல் முறையாக முயற்சி மேற்கொண்டபோதே, மக்கள் செய்தி மையம் என்ற மஞ்சள் பத்திரிகை அவதூறு பரப்ப ஆரம்பித்து விட்டது. அந்த முயற்சியில் ஈடுபட்ட இளம் பத்திரிகையாளர்கள், அமைச்சர்களிடம் கையூட்டு பெற்றதாக, ஒரு கீழ்த்தரமான அறிக்கையை அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பிவைத்ததை நாம் அனைவரும் அறிவோம். அந்த கீழ்த்தரமான செயலை நாம் அன்றே தட்டிக்கேட்காததன் விளைவாகத்தான் இன்று இவ்வளவு பெரிய அவதூறை அந்த மஞ்சள் பத்திரிகை தைரியமாக வெளியிட்டுள்ளது.
ஆகவே, உறுப்பினர் அல்லாத பத்திரிகையாளர்கள், பத்திரிகையாளர் மன்றத்திற்குள் நுழைந்தார்கள் என்பதை குற்றச்சாட்டாக கூறுவதிலிருந்தே, பத்திரிகையாளர்கள் மன்றம் எவ்வாறு நடத்தப்படுகின்றது என்பதை உண்மையான பத்திரிகையாளர்கள் புரிந்துகொள்வார்கள். தமிழக அரசு, அனைத்து பத்திரிகையாளர்களின் நலனுக்காக வழங்கிய நிலத்தில், அனைத்து பத்திரிகையாளர்களின் நலனை கருதி, எஸ்.ஆர்.எம். நிறுவனம் கட்டித்தந்த கட்டிடத்தை, தங்களுடைய தனி சொத்தைப்போல் பாவித்து, 16 ஆண்டுகளாக தேர்தல் நடத்தாமல், ஒரு கும்பல் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை தட்டிக்கேட்ட பத்திரிகையாளர்களுக்கு எதிராக பரப்பப்படும் இந்த அவதூறுகள், நேர்மையான அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் எதிரான அவதூறாகவே பார்க்கவேண்டும்.
பத்திரிகையாளர்களின் நலனை பாதுகாக்க வேண்டிய நம்முடைய பத்திரிகையாளர் மன்றத்தை, வெளிநாட்டில் இருப்பவர்களும், பத்திரிகை துறையை விட்டே வெளியேறியவர்களும், மஞ்சள் பத்திரிகை நடத்தி அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் மிரட்டி பணம் பறிக்கும் கும்பலும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை, இனியும் எத்தனை நாள் சகித்துக்கொண்டிருக்கப்போகின்றோம்? நியாயம்கேட்டு மன்றத்திற்கு சென்ற உண்மையான பத்திரிகையாளர்களுக்கு எதிராக, இவ்வளவு கீழ்த்தரமான அவதூறு பரப்பப்படுவதை உண்மையான பத்திரிகையாளர்கள் ஒருபோதும் பார்த்துக்கொண்டிருக்கமாட்டார்கள். அநீதி வெகுநாள் நீடிக்காது. நீதி ஒருநாள் நிச்சயம் வெல்லும். அதுவரை எந்த அவதூறுக்கும், மிரட்டலுக்கும் அஞ்சாமல் போராட்டம் தொடரும். இந்த போராட்டத்தில் உண்மையான பத்திரிகையாளர்கள் தங்களை நிச்சயம் இணைத்துக்கொள்வார்கள்.