மக்கள் செய்தி மையத்தை சேர்ந்த அன்பழகன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, முன்வைக்கப்படும் பல்வேறு கருத்துகள் குறித்து மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் விளக்கம்.

0
550

மக்கள் செய்தி மையம் என்ற இணையதளத்தை நடத்தி வருபவரும், உள்ளாட்சி அரசியல் என்ற இதழின் ஆசிரியரும், சென்னை பத்திரிகையாளர் சங்கம் என்ற அமைப்பின் தலைவரும், கடந்த 17 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாத சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொருளாளர் என்று தன்னை அழைத்துக்கொள்பவருமான அன்பழகன், கடந்த 26.04.17 அன்று காலை, சுமார் 8:30 மணியளவில், சென்னை பூந்தமல்லியில் உள்ள அவருடைய இல்லத்தின் அருகே, கோயம்புத்தூர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அன்றைய தினம் தன்னுடைய வீட்டிற்கு அருகேயுள்ள அவருடைய உறவினர் வீட்டிற்கு சென்ற அன்பழகனை இடையில் வழிமறித்து கோயம்புத்தூர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட தகவலை அவருடைய உறவினர்கள் யாருக்கும் காவல்துறையினர் தெரிவிக்கவில்லை. வெளியே சென்று வெகு நேரமாகியும் அன்பழகன் வீடு திரும்பாததால், அவருடைய செல்போனுக்கு அவருடைய மகன் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால், செல்போன் அணைத்து வைக்கப்பட்டதை தொடர்ந்து அன்பழகனின் உறவினர்கள் அருகில் உள்ள காவல்நிலையத்தை தொடர்பு கொண்டுள்ளனர். அவர்களுக்கும் இந்த கைது நடவடிக்கை பற்றிய தகவல் தெரியாததால், அந்த காவல்நிலையத்தில் அன்பழகன் காணாமல் போனதாக புகார் பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு அலைக்கழிப்புகளுக்குப் பிறகு, கோயம்புத்தூர் மாநகராட்சியில் பணியாற்றும் துணைப் பொறியாளர் பார்த்திபன் என்பவர், அன்பழகன் தனக்கு எதிராக செய்தி வெளியிடாமல் இருக்க 2 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக கொடுத்த புகாரின் அடிப்படையில், அன்பழகனை கோயம்புத்தூர் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஒரு நபரை கைது செய்யும்போது காவல்துறையினர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குற்றவியல் நடைமுறை சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக உச்சநீதிமன்றமும் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதில் குறிப்பாக, கைது செய்யப்படும் நபரிடம் அவர் எதற்காக கைது செய்யப்படுகிறார் என்பது தெரிவிக்கப்பட வேண்டும். கைது செய்யப்படும் நபர் தன்னை தற்காத்துக் கொள்ளும் வகையில் சட்ட உதவியை பெறுவதில் காவல்துறையினர் தடை ஏற்படுத்தக் கூடாது. கைது செய்யப்படும் நபரை தாக்க கூடாது, அவர் விரும்பினாலொழிய அவரை பேசுவதற்கு வற்புறுத்தக் கூடாது என பல வழிகாட்டுதல்கள் உள்ளன. ஆனால், அன்பழகன் கைது நடவடிக்கையின்போது இந்த வழிகாட்டுதல் அனைத்தும் மீறப்பட்டுள்ளன. அன்பழகன் மட்டுமின்றி, காவல்துறை யாரை இதுபோல் கைது செய்திருந்தாலும் அது அப்பட்டமான மனித உரிமை மீறலே தவிர வேறில்லை.

ஆகவே, ஏன் கைது செய்தார்கள்? எதற்கு கைது செய்தார்கள்? அவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு நியாயமானதா? என்ற கேள்விகளுக்குள் செல்வதற்கு முன், அவர் கைது செய்யப்பட்ட விதம், அதில் நடைபெற்றுள்ள விதிமுறை மீறல் ஆகியவற்றை பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி சட்டத்தையும், ஜனநாயகத்தையும் மதிப்பவர்கள் அனைவரும் கண்டிக்க வேண்டும் என்பதில் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் உறுதியாகவுள்ளது. இதன் காரணமாகவே, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட அன்றைய தினம், சில பத்திரிகையாளர்கள் ஒன்றிணைந்து காவல்துறை தலைவரை சந்தித்த நிகழ்வு மற்றும் அதற்கு இரண்டு தினங்கள் கழித்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் காவல்துறை கைது செய்தபோது மேற்கொண்ட சட்டமீறலை கண்டித்து நடைபெற்ற கண்டன கூட்டத்திலும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கலந்துகொண்டது.

அன்பழகன் என்ற தனிநபர் யாராக இருந்தாலும், அவர் நடவடிக்கை எப்படியாக இருந்தாலும், அவர் மீது எப்படிப்பட்ட குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டாலும், தார்மீக அடிப்படையில் பார்க்கப்போனால் அவர் உண்மையிலேயே பத்திரிகையாளரா? இல்லையா? என்ற கேள்விகள் முன்வைக்கப்பட்டாலும், அவர் பத்திரிகையாளர் என்ற பெயரில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அவரை கைது செய்த காவல்துறையும் அதை மறுக்கவில்லை. ஆகவே, ஒரு பத்திரிகையாளரை கைது செய்யும்போது கூட, சட்டத்தை காவல்துறை பின்பற்றவில்லை. யாராக இருந்தால் என்ன? நாங்கள் யாரை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் சட்டத்திற்கு புறம்பாக கைது செய்வோம் என்ற எண்ணத்தில் காவல்துறையினர் செயல்பட்டுள்ளனர் என்பதை நாம் கவனிக்க வேண்டும். இன்று, காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக நாம் குரல் கொடுக்காவிட்டால் நாளை எந்த ஒரு பத்திரிகையாளரும் இதேபோன்று கைது செய்யப்படலாம். இதன் அடிப்படையிலேயே அன்பழகன் கைது செய்யப்பட்ட விதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் மாற்றதிற்கான ஊடகவியலாளர்கள் மையம் தன்னை இணைத்துக்கொண்டது.

இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டாலும், சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு நியாயமாக தேர்தல் நடைபெறாமல், இழுத்தடிப்பு செய்பவர்களில் அன்பழகன் மிக முக்கியமானவர் என்பதில் எங்களுக்கு எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. அத்துடன், சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு நியாயமாக தேர்தலை நடத்துவதற்கும், பல ஆண்டுகளாக கூட்டப்படாத பொதுக்குழுவை கூட்டுவதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கும் அனைத்து பத்திரிகையாளர்களை ஒருங்கிணைத்து மாற்றத்திற்கான ஊடகவியலார்கள் மையம் நடத்திய பல்வேறு போராட்டங்களின்போது, அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பத்திரிகையாளர்களுக்கு எதிராக, இதே அன்பழகன் அவதூறு பரப்பியதையும், அவர்களை மிரட்டும் வகையில் அவர்கள் பணியாற்றிய நிறுவனங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியதையும் நாங்கள் இன்றளவும் மறக்கவுமில்லை மறுக்கவுமில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். புதிய உறுப்பினர்களை இணைத்து, சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு நியாயமாக தேர்தலை நடத்த வேண்டும் என்ற முடிவிலிருந்து பின்வாங்காமல், இன்றளவும் அதற்கான பல்வேறு முன்னெடுப்புகளை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் மேற்கொண்டு வருவதையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். அன்பழகனை கைது செய்யும்போது நடைபெற்ற சட்ட மீறலை கண்டித்து நடந்த கண்டனக் கூட்டத்தில், பத்திரிகையாளர்கள் அமைப்புகள் அனைத்திலும் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்ற கருத்து, மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தால் அழுத்தமாக முன்வைக்கப்பட்டதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

தவறு செய்யும் பத்திரிகையாளர் யாராக இருந்தாலும் அவர் மீது மேற்கொள்ளப்படும் “சட்டப்பூர்வமான” நடவடிக்கைக்கு எப்போதும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் இடையூறாக நிற்காது என்று கூறும் அதேவேளையில், பத்திரிகையாளர்களுக்கு எதிரான சட்டத்திற்கு புறம்பான எந்த ஒரு நடவடிக்கையையும் எதிர்க்க தயங்காது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.