போரும் ஊடகமும் – பாகம் 01

0
836

‘மக்களை மையமாக வைத்து பார்த்தால் இலங்கை போர் பிரதேசம் மிகவும் கொடூரமானது. உலகெங்கும் பல போர் பிரதேசங்களில் நான் பணியாற்றியுள்ளேன். ராணுவ சண்டையில் படை சிப்பாய்கள் கொல்லப்படும் நிகழ்வு வழக்கமானது. அப்படி ராணுவத்தினரும் கொல்லப்பட்டனர் புலிகளும் கொல்லப்பட்டனர். ஆனால் இலங்கை ராணுவம் புலிகளை அழித்தொழிக்க வேண்டும் என்று அப்பட்டமாக ஆயிரக்கணக்கான தமிழர்கள் திட்டமிட்ட தாக்குதலில் கொன்றொழிக்கப்பட்டனர். கொடூரமாக ஒவ்வொரு தினமும் குழந்தைகள்,பெண்கள்,ஆண்கள் என கொல்லப்பட்டனர். மருத்துவமனைகள் தாக்கப்பட்டன. தொடர்ச்சியாக குண்டுமழையும் செல் தாக்குதல்களும் நடந்தன. ஆனால் இலங்கை ராணுவம் அப்படி எதுவும் நடக்கவில்லை…நடக்கவில்லை…என பொய் சொன்னது…பொய் சொன்னது…பொய் சொன்னது. மக்கள் மேல் எந்த அக்கறையையும் இலங்கை ராணுவம் காட்டவில்லை. பல இளைஞர்கள் பாதுகாப்பு வலயத்திலிருந்து புலிகள் என பிடித்து செல்லப்பட்டனர். அப்படி சித்ரவதை முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டவர்கள் பற்றிய எந்த கணக்கும் கிடையாது. மிக பயங்கரமான நிலை அது’ என்று எடுத்துக்கூறும் பத்திரிகையாளர் ‘எந்த முரண்பாடுகளுக்கும் அரசியல் தீர்வே இறுதியானது’ என்கிறார்.

அவர் 2012 சிரியாவின் உள்நாட்டு போரின் போது வான்வழித்தாக்குதலில் கொல்லப்பட்ட மேரி கொல்வின். பல போர் களங்களை கண்ட கொல்வினை போர் பத்திரிகையாளர்கள் உலகம் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது.

’வன்னியின் மீது ஒட்டுமொத்தமாக பொருளதார தடை விதிக்கப்பட்ட காலக்கட்டம் அது. அதாவது ஏப்ரல் 2001.

அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகையாளர் மேரி கொல்வின் , புலிகள் நிர்வகிக்கும் பகுதிக்குள் ரகசியமாக நுழைகிறார்.’வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் எவரும் நுழையக் கூடாது புலித்தலைவர்களின் கருத்துகள் வெளிவரக்கூடாது என்ற தடையையும் இலங்கை அரசாங்கம் விதித்திருந்தது.

உணவுத்தட்டுப்பாடு, மின்சாரம் – தொலைத்தொடர்பு இணைப்பு இல்லை, மருந்து குறைபாடு, எரிபொருள் கிடையாது,தண்ணீர் பிரச்னை இதனிடையே வன்னி கிராமங்களுக்குள் சென்று வந்தேன்.

எனது பணியை முடித்து விட்டு உள்ளூர் தமிழர்களின் உதவியுடன் மன்னாரை அடைந்து அங்கிருந்து வவுனியாவை அடைவதாக திட்டம்’ என தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இருந்து அவர் எல்லையைக் கடக்கையில் ராணுவத்தின் தோட்டா அவரின் கண்களை துளைத்தன. ‘பத்திரிகையாளர்! பத்திரிகையாளர்! அமெரிக்கன்’ என்ற பின்பும் இலங்கை ராணுவம் கடுமையான பிடியை கொல்வின் மேல் கையாண்டது.

அந்த உயிருக்கு போராடும் தருணத்திலும் கொல்வினை ஒரு பெண் கரும்புலியாக எண்ணி ‘எங்கு பயிற்சி எடுத்தாய்?உன்னோடு எத்தனை பேர்? உன் வாகனம் எங்கே’ எனக் கேட்டுள்ளார் ஒரு ராணுவ அதிகாரி. இலங்கை அரசாங்கம் மேரி கொல்வின் வன்னியில் நுழைந்ததற்கு ரகசிய திட்டம் இருப்பதாகவே தெரிவித்தது. ஆனால் கொல்வின் தனது எழுத்துகளில் ’எனக்கு பத்திரிகையாளர் என்ற பணியை தவிர வேறு எந்த ரகசிய திட்டமும் இல்லை’  என தெரிவித்துள்ளார். ஆனால் இந்த தாக்குதலுக்கு எந்தவித மன்னிப்பையும் இலங்கை அரசு கேட்கவில்லை, இதில் தான்தனது ஒரு கண்ணை இழந்தார் கொல்வின். அவரின் வலது கண்ணில் உள்ள கரும்பட்டை அடையாளம் இப்படி ஏற்பட்டதே.

தனது ஒற்றைப் பார்வையை இழந்த பிறகும் தொடர்ந்து அவர் வெவ்வேறு போர் அபாய சூழல்களில் பணியாற்றிக் கொண்டே இருந்தார்.  அப்படி பிப்ரவரி 2012 யில் சிரியாவில் பணியாற்றிக் கொண்டிருந்த பொழுதே வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார். கொல்வின் மற்ற போர் பத்திரிகையாளர்கள் போலன்றி ‘போர், மக்கள் வாழ்வை சீர்குலைக்கும் நாசத்தனம்’ என்ற மனிதாபிமான பார்வையோடும் வல்லரசு நாடுகளின் பார்வையிலிருந்து வேறுபட்டுமே தனது ஊடக பணியை ஒரு பெரும் வாழ்வாகவே தொடர்ந்தார்.

’தமிழீழச் சமூகம் என்ற மேற்பரப்பை நாம் சற்று சுரண்டிப்பார்த்தால் அதன் கீழ் பிரதேசவாதம்; மதம்; சாதி;வட்டாரவழக்கு உரசல்கள்; ஊர்களுக்கு இடையிலான அடிபிடிகள் எனப்பலவற்றைக் காணலாம். ஆனால் சிங்களப் பேரினவாதம் இவற்றையெல்லாம் கணக்கிலெடுக்காது தமிழ் மக்களை ஒட்டுமொத்தமாக வலுவிழக்கச் செய்து தமிழர் தாயகம் அனைத்தும் சிங்கள பெளத்தத்தின் வரலாற்று உரிமைக்கு உட்பட்ட இடங்கள் என்ற கருத்தை நிலைநாட்ட அயராது உழைத்து வருகிறது’ என 2004 ஆண்டு எழுதிய ‘காலத்தின் தேவை அரசியல் வேலை’ என்ற தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் தராக்கி சிவராம்.

சர்வதேச அளவில் தமிழர் பிரச்னைகளையும் இலங்கை அரசியல் சூழலையும் எழுதக்கூடிய மிகச்சிறந்த பத்திரிகையாளராக தராக்கி இருந்தார். அப்படி ஒருவரை கொழும்பில் கடத்தப்பட்டு இலங்கை நாடாளமன்ற உயர் பாதுகாப்பு வலயத்திலேயே வீசியது சிங்கள அரச பயங்கரவாதம். அவரின் எழுத்துக்களுக்காகவே அவர் கொல்லப்பட்டார், அத்தனை அச்சுறுத்தல்களுக்கு இடையேயும் சாதாரணமாகவே தனது செய்திகளுக்காக வலம் வந்ததை கொலை செய்ய உபயோகப்படுத்திக் கொண்டது வெள்ளை வேன் பயங்கரவாதம்.

இலங்கை சண்டே லீடர் ஆசிரியரான லசந்தா தனது வாழ்வின்  இறுதி கட்டுரையில் மார்ட்டின் நீமொல்லரின் வரிகள் குறிப்பிடப்பட்டிருந்த்து.

முதலில் அவர்கள் சோசலிஸ்டுகளை தேடி வந்தார்கள் ! அவர்களுக்காக நான் எதுவும் பேசவில்லை !! ஏனெனில் நான் சோசலிஸ்ட் அல்ல !!!
பின்னர் அவர்கள் தொழிற்சங்கவாதிகளை தேடி வந்தார்கள் ! அவர்களுக்காக நான் எதுவும் பேசவில்லை !! ஏனெனில் நான் தொழிற்சங்கவாதி அல்ல !!!
பின்னர் அவர்கள் யூதர்களை தேடி வந்தார்கள் ! நான் அவர்களுக்காக எதுவும் பேசவில்லை !!

ஏனெனில் நான் யூதனும் அல்ல.  இறுதியாக அவர்கள் என்னை தேடி வந்தார்கள் ! அப்பொழுது எனக்காக பேச எவருமே இல்லை…

இலங்கையின் அன்றைய உயிர்பாதுகாப்பற்ற நிலையை குறிப்பிட்ட வரிகளோடு அவரின் ஊடக பயணம் கொலையால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

இப்படி நாளும் அச்சுறுத்தல்களோடு ஊடக பயணத்தை தொடர்ந்த தொடர்ந்து கொண்டிருக்கும் ஊடகவியலாளர்களின் அனுபவங்களையும் செய்தி சேகரிப்புகளையும் சற்று திரும்பி பார்ப்போம்…