CMPC
POLITICS / அரசியல்

பொன்முட்டையிடும் வாத்தும், அறுக்கத்துடிக்கும் அரசும்

பொன்முட்டையிடும் வாத்தை தன் பேராசையாலே வயிற்றை அறுத்து கொன்ற பேராசைக்காரனின் கதையை கேள்விப்பட்டிருப்போம். வெகுசில பெரும் கார்ப்பரேட் முதலாளிகளின் பேராசையாலே இக்கதையை நிகழ்காலத்தில் இயக்கி நடித்துக் கொண்டிருக்கிறது இந்திய அரசு.இதில் தேசியப் பாலை காய்ச்சும் காங்கிரஸ் அரசிற்கோ, வகுப்புவாத விஷத்தை கக்கும் பாஜக அரசிற்கோஎந்த ஒரு வேறுபாடும் இல்லை. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் முதலாளிகளிடம் ஒப்படைக்கத்துடிக்கும் இந்த புள்ளியில் மட்டும் அவ்வளவு ஒற்றுமை உணர்வுடன் செயல்பட என்ன காரணம்? தத்தம் அரசுகளை நிறுவும் முதலாளிகளின் நலனைக் காட்டிலும் வேறென்ன பெரிய கொள்கை வெங்காயங்கள் இருந்துவிடப்போகிறது? ஆம், இந்தியாவில் ஒவ்வொரு புதிய அரசுக்கும்  தலைமை ஏற்பது பெரு முதலாளி வர்க்கமே!

இரண்டாம் உலகப்போரில் தனது பொருளாதாரம் முற்றிலுமாக அழிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வேறுவழியில்லாமல் தனது காலனிய நாடுகளுக்குச் சுதந்திரம் வழங்கியது இங்கிலாந்து அரசு. சுதந்திர இந்தியாவில் முதலாளித்துவ பொருளாதார வளர்ச்சிக்கு மின்சாரம், உருக்கு, நிலக்கரி, எண்ணெய், எரிவாயு போன்றவற்றின் உற்பத்தி அடிப்படையானது. இத்துறைகளில் தங்களால் மூலதனமிட(Investment) இயலாது என்பதால் அரசே மேற்கண்ட துறைகளில் பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் உற்பத்திக்கு திட்டமிட இந்திய பெருமுதலாளிகள் வலியுறுத்தினார்கள்.இதுதான் 1940 களில் பிர்லா திட்டம் முன்வைத்த ஆலோசனையும் கூட.எனவே நாட்டின் பிரதான வருவாய் ஈட்டும் தொழில்களை நாட்டுடைமையாக்கும் பணியில்அரசு ஈடுபட்டது. அப்படி முதலாளிகளின் வளர்ச்சிக்காக கட்டப்பட்டவைதாம் பொதுத்துறை நிறுவனங்கள்.

தற்பொழுது அந்த பொதுத்துறை நிறுவனங்களையே விழுங்கும் அளவிற்கு லாபம் சம்பாதித்த கார்ப்பரேட் முதலாளிகள், கேந்திர  தொழில்கள் பொதுத் துறையில் இருப்பது சந்தையில் தங்களுக்குச் சவாலாக இருப்பதை உணர்ந்து அவற்றை தன் வசப்படுத்தத் துடிக்கின்றன. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்றுவிட வேண்டும் என ஏகாதிபத்தியம் இந்திய அரசை நிர்பந்தப்படுத்துகிறது.கடந்த 25 ஆண்டு கால நவ தாராளமய பொருளாதார கொள்கையை மத்தியில் ஆண்ட இரண்டு கட்சிகளும் தங்கு தடையின்றி கடைப் பிடித்தன. கடந்த மூன்றாண்டு காலமாக பாஜக தலைமையிலான அரசு வேக வேகமாக தாராளமய பொருளாதாரக் கொள்கையை அமலாக்கி வருகிறது. பொருளாதார கொள்கையில் பாஜகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

2017 ஆம் ஆண்டு கணக்கீட்டின் படி இந்தியா வின் ஒரு சதவீத செல்வந்தர்கள் நாட்டின் ஒட்டுமொத்த சொத்துக்களில் 58.4 சதவீதத்தை உடைமையாக்கிக்கொண்டுள்ளனர். (2014 -2017 காலகட்டத்தில் சுமார் 10 சதவீத சொத்துக்கள் பணக்காரர்களின் கைக்கு மாற்றப்பட்டுள்ளன) 2000-ம் ஆண்டில் இந்த அளவு 36.8 சதவிகிதமாக இருந்தது. நாட்டின் செல்வச் செழிப்பில் தற்போது காலகட்டத்தில் இந்தியாவில் உள்ள 70 சதவீதம் பேரின் சொத்துக்கள் வெறும் 7 சதவீதம் மட்டுமே. இதே 70 சதவீத இந்தியர்களின் பங்கு 2010ம் ஆண்டில் இதை விட இரண்டு மடங்காக அதாவது 14 சதவீதமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒன்றுமேயில்லாத ஏழைகளின் கைகளில் இருந்து சொத்துக்கள் உறிஞ்சப்படுகின்றன. பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாக, ஏழைகள் மேலும் ஏழைகளானார்கள் என்பதை மத்திய அரசு மேற்கொண்ட சமூக, பொருளாதார ஆய்வறிக்கையில் இருந்து புரிந்து கொள்ளலாம்.பொதுத்துறை நிறுவனங்களை தனியார் முதலாளிகளுக்கு விற்று ஒட்டுமொத்த ஏழை எளிய மக்களுக்கும்  உயிருடன் சாவு மணி அடிக்க ஆயுத்தமாகிறது அரசு.

எந்த ஒரு தனியார் நிறுவனமும் மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் தொழில் தொடங்குவதில்லை. லாபம் ஈட்டவே தொடங்குகின்றன. அந்த லாப நோக்கில் மக்களின் அத்தியாவசியங்களை அணுகுவதினால் ஏற்படும் அபாயங்களை கண்கூடாக பார்க்கின்றோம்.உதாரணத்திற்கு,கல்வித்துறையை எடுத்துக்கொள்வோம்.தனியார்மயம் கல்வியை கடைச் சரக்காக மாற்றிவிட்டது.பிறந்த குழந்தைக்கு தொட்டில் வாங்கிய கையோடு பள்ளியில் முன்பதிவு செய்யும் அளவிற்கு வளர்ந்துவிட்டது.நம் முந்தைய தலைமுறையில் ஒரு தனி நபர் தன் மொத்த படிப்புக்கும் செலவழித்த பணத்தைவிட, இன்றைய சூழலில் ஒரு குழந்தை தன் பள்ளிப்பருவத்தின் முதல் வருடத்தை முடிப்பதற்கு அதிக பணம் தேவைப்படுகிறது.இது எதை குறிக்கிறது?

அன்றைய ஐந்தாண்டுத் திட்டங்களாயினும் சரி, இன்றைய நிதி அயோகின் பரிந்துரைகளாயினும் சரி, அரசின் கொள்கை முடிவுகளில் இருந்து நலத் திட்ட உதவிகள் வரை அனைத்தையும் செயல்படுத்தும் இமாலய பொறுப்பை சுமந்துகொண்டிருப்பவை பொதுத்துறை வங்கிகளே.. உதாரணமாகபிரதம மந்திரி  ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட கட்டணமற்ற வங்கிக்கணக்குகள் மொத்தஎண்ணிக்கை  29.52 கோடி. அதில் பொதுத்துறை வங்கிகளின் பங்கு 23.79 கோடியாகும். தனியார் வங்கிகள் வெறும் ௦.96 கோடி கணக்குகளை மட்டுமே தொடங்கின. ஏனெனில் தனியார் வங்கிகள் வெறும்  இலாப நோக்குடன் மட்டுமே செயல்படுகின்றன. பொதுத்துறை வங்கிகள் சேவை நோக்குடன் செயல்படுபவை. அதற்காக அவை நஷ்டத்தில் இயங்குகின்றன என்று கருத வேண்டாம். 2016-17 நிதியாண்டில் ஸ்டேட் வாங்கி அல்லாத மற்ற பொதுத்துறை வங்கிகளின் செயல்பாட்டு லாபம்ரூ 1,01,976.53கோடி ஆகும்.  இத்தகைய பொன்முட்டையிடும் பொதுத்துறை வங்கிகளை  தனியார்மயமாக்கும் வேலைகளை மத்திய அரசு செவ்வனே செய்து வருகிறது.

பொதுத்துறை வங்கிகளின் பிரதான பிரச்சனை வாராக் கடன்கள். ஒரு கடன் 90 நாட்களுக்கு மேல் எந்த வருவாயையும் ஈட்டவில்லையெனில் அது வாராக் கடன் எனப்படும். ஒட்டுமொத்த பொதுத்துறை (ஸ்டேட் வங்கிஅல்லாத) வங்கிகளின்மூலதனம்(capital) ரூ 21,402.06 கோடி. அதில் அரசாங்கத்தின் பங்கு கிட்டத்தட்ட ரூ 15000 கோடி. ஆனால் மொத்த வாராக்கடன் எவ்வளவு தெரியுமா? மனதை திடப்படுத்திக் கொள்ளுங்கள். பொதுத்துறை(ஸ்டேட் வங்கிஅல்லாத) வங்கிகளின்மொத்த வாராக் கடன் வெறும் ரூ 5,07,308.99 கோடி மட்டுமே. வாராக் கடனின் அளவு மொத்த மூலதனத்தை விட கிட்டத்தட்ட 23 மடங்கு(அதாவது 2300%).மூலதனம் சில ஆயிரம் கோடிகள்தான் என்றிருக்க, வாராக் கடன் எப்படி ஐந்து லட்சம் கோடியாக முடியும்?அதுமட்டுமின்றி கடந்த ஐந்து ஆண்டுகளில் தள்ளுபடி செய்யப்பட்ட பொதுத்துறை வங்கிகளின்  கடன் மட்டும் 2,49,927 கோடி ரூபாய். அது யாருடைய பணம்?அவ்வளவும் ஏழை எளிய மக்கள் வங்கிகளில் சேமித்த பணம்.

மக்கள் அனைவரும் ஒட்டுமொத்த சேமிப்பையும் திரும்ப பெற்றால், மொத்த தொகையில் ஐந்து லட்சம் கோடியை திருப்பி தர இயலாமல் வங்கிகள் திவாலாகிவிடும். சரி யாருக்குதான் இவ்வளவு கடன் கொடுத்து உதவியிருக்கின்றன வங்கிகள் என்று பார்த்தால்மொத்த வாராக் கடனில் 84% கார்ப்பரேட் நிறுவனக் கடன்களே. அதாவது சுமார் 4.26,140 கோடி ரூபாய்.எந்த ஒரு பெரு நிறுவனத்திற்கும் வங்கிகள் தானாக பெரும் கடன்களை இயக்குனர் குழு ஒப்புதலின்றி வழங்கிட இயலாது. எனவே அரசுக்கு தெரியாமலோ, அரசின் அதிகாரக் குறுக்கீடு இன்றியோ பெரிய கடன்கள் கொடுக்கப்பட வாய்ப்பில்லை. அப்படி கொடுத்த கடன்களை திருப்பி வசூல் செய்ய எந்த நடவடிக்கைகளையும் எடுக்கக் கையாலாகாத இந்த அரசு, கடன் வாங்கிப் படித்து, வேலையின்மையால் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் இருக்கும் இளைஞர்களையும், இயற்கை முதல் சக மனிதர்கள் வரை அனைவராலும் வஞ்சிக்கப்படும் விவசாயிகளையும் மிரட்டுவது அபத்தம். இதைவிட ஸ்டேட் வங்கியில் வாராக் கடன்களாக மாறிய கல்விக் கடன்களை ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கே அடி மாட்டு விலையில் விற்றதுதான்ஏகாதிபத்தியத்தின் உச்சம்.

அதெப்படி பொதுத்துறை வங்கிகள் தனியார்மயம் ஆக்கப்படும். அதெல்லாம் ஒரு மிகை வாதம் என்று சிலர் வாதிடுவர். முன்னணி பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் பரோடா வை எடுத்துக்கொள்வோம். பேங்க் ஆப் பரோடா வின் மொத்த மூலதனம்ரூ 462.09 கோடி. அதில் அரசின் பங்குரூ 277 கோடி(அதாவது 59.24%). இதில் வெறும்ரூ 42 கோடியை குறைத்தால் போதும். இந்த வங்கியில் அரசின் பங்கு 51 சதவிகித்தை விட குறைந்துவிடும். அப்பொழுது பேங்க் ஆப் பரோடா தனியார் வங்கிஆகிவிடும்.கிட்டத்தட்ட எல்லா வங்கிகளுக்கும் இதே நிலைதான்.

இத்தகைய நெருக்கடியான சூழலிலும் பொதுத்துறை வங்கிகள் நல்ல லாபம் ஈட்டிக்கொண்டுதான்(2016-17- ரூ 1,01,976.53 கோடி)  இருக்கின்றன. ஆனால், ஈட்டும் லாபத்தின் பெரும்பகுதி, வாராக் கடன்களுக்கு ஒதுக்கிவைப்பதால்(provision) குறைந்த லாபத்திலோ அல்லது நஷ்டத்தில் இயங்குவது போன்ற மாயை தோற்றுவிக்கப்படுகிறது.இந்த நிலையை சமாளிக்க அரசு, வங்கிகளின்  செலவைக் குறைப்பதற்காக கிளைகள் எண்ணிக்கையை குறைப்பதும், ஊழியர்களின் செலவைக் குறைக்க ஒப்பந்த தொழிலாளர் முறையை ஊக்குவிப்பதும் என பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. எதற்கு 20 வங்கிகள் என, ஒரு பக்கம் இணைப்பு வேளைகளில் மும்முரம் காட்டும் அரசு, மறுபுறம் சிறு தனியார் வங்கி மற்றும் பேமெண்ட் வங்கி என கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு புதிதாக வங்கிகள்தொடங்கஉரிமம் வழங்கிக்கொண்டிருப்பதுதான் வேடிக்கை.தனியார் மயமானால் சிறப்பான சேவை கிடைக்குமே என்று பிதற்றும் பலருக்கு, அந்த சேவைக்காக தங்கள் சேமிப்புகளையே இழக்க நேரிடும் என்று தெரிய வாய்ப்பில்லைதான்.

தனியார் வங்கிகளில் கடன் வாங்கி தவணைக் கட்ட தவறினால் என்ன நடக்கும் என்பதை டிராக்டர் கடன் வாங்கிய விவசாயியை காவல்துறை உதவியுடன் தாக்கும் காட்சிகளை ஊடகங்கள் வாயிலாக பார்த்திருப்போம். இன்னும் இது போன்ற பல அடக்குமுறைகள்ஏன் பல தற்கொலைச் சம்பவங்களும் வெளியில் வராமல் மூடி மறைக்கப்படுகின்றன. 1998 தோஹா மாநாட்டில் கையெழுத்திட்ட ஒப்பந்தம் இன்று நம் பிள்ளைகளின் மருத்துவக் கனவை தகர்க்கும் நீட் தேர்வாய் வந்துநிற்பது போல,உலக வர்த்தக சபையில் போட்ட ஒப்பந்தத்தால் இன்று பொது விநியோகத் திட்டத்தின் விழுந்திருக்கும் மண்போல,இன்று பெரு முதலாளிகளின் நலனிற்காக போடப்படும் ஒவ்வொரு ஒப்பந்தமும் நாளை நம் கழுத்தை இறுக்கும் தூக்குக் கயிறாய் மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தோழமையுடன்,

ப.லோகநாதன்

 

Related posts

ராம்குமாருக்காவும் கண்ணீர் சிந்துங்கள்…

admin

கடன்கார நாடும்… கைவிரிக்கும் கார்ப்பரேட்களும்…

CMPC EDITOR

அன்புள்ள ரஜினி – ஆங்கிலத்தில்: அருண் ராம், தமிழில்

CMPC EDITOR