பெண் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசிவரும் கிஷோர் கே சாமி மீது உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட வேண்டும்.

0
512

அவதூறே முகம் சுழித்து வழக்கு போடும் அளவிற்கு முழுக்க முழுக்க பொய்களையும், வதந்திகளையும், அவதூறுகளையும் பேசுவது, பதிவிடுவதுதான் கிஷோர் கே சாமி என்ற நபருடைய வழக்கம். அரசியல் விமர்சகர் என்கிற போர்வையில் பத்திரிகையாளர்களை, குறிப்பாக பெண் பத்திரிகையாளர்கள் மீது மிகவும் ஆபாசமான, கண்ணியக் குறைவான செய்திகளை சமூக வலைதளங்களில் பதிவிடுவதும் இவருடைய தினப்பணி. இன்று நேற்றல்ல, தொடர்ந்து இதையே கடமையாக செய்து வரும் இந்த நபர் மீது, பலமுறை பெண் ஊடகவியலாளர்கள் தரப்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

முன்பு ஒருமுறை, சென்னை காவல் ஆணையராக ஜார்ஜ் இருந்த சமயம் மூத்த பெண் ஊடகவியலாளர் ஒருவர் குறித்து மிகமிக தரம் தாழ்ந்த வகையில் சமூக வலைதளங்களில் இந்த கிஷோர் கே. சாமி பதிவிட்டதை அடுத்து, அந்த ஊடகவியலாளர் காவல் ஆணையரிடம் நேரில் சென்று புகாரளித்தார். நம் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையமும் அவருக்கு உறுதுணையாக இருந்தது. பல ஆண்டுகள் கடந்தும் அதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. பிறகு இன்னொரு பெண் ஊடகவியலாளர் கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்ட கிஷோர் கே. சாமி, உடனே ஜாமீனில் வெளி வந்தார். அதன்பிறகும் அவதூறு பதிவுகள், பேச்சுகள் குறைந்தபாடில்லை. அவர் மீதான புகார்களுக்கும் குறைவில்லை. ஆனால் அந்த அவதூறு நபர் மீது இதுவரை ஏனோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மேலும், இந்த கிஷோர் கே. சாமி என்ற நபர் எந்த அளவிற்கு அவதூறு செய்திகளின் வழியே, சமூக பதற்றத்தை உண்டு செய்ய நினைப்பவர் என்பதற்கு அண்மையில் இவர் போட்ட பதிவு ஒன்றே போதுமானது. கந்த சஷ்டி கவசம் சர்ச்சைப் பதிவு குறித்த ஒரு படத்தை தனது ட்விட்டரில் பதிவிட்ட இந்த கிஷோர் கே. சாமி, அதில் உள்ள ஒருவரை சுட்டிக்காட்டி, நம் அமைப்பைச் சேர்ந்த ஊடகவியலாளர் அசீப்தான் இவரா என்று விஷமமாக பதிவிட்டிருந்தார். அதாவது, ’இந்து சமய கடவுள் குறித்த ஒரு விமர்சனப் பதிவை இட்டது, பிறப்பால் இசுலாமியரான இவர்தான்’ (ஊடகவியலாளர் அசீப்)  என்று, திட்டமிடப்பட்ட ஒரு பதற்றத்தை, மோதலை ஏற்படுத்துவதுதான் இந்த நபருடைய பதிவின் உயரிய நோக்கம். இதுதொடர்பாக அசீப் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். ஆனால், அதன் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில்தான், மற்றொரு தொலைக்காட்சி பெண் ஊடகவியலாளர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், அவதூறு நபரான கிஷோர் கே. சாமி மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில், விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட அவர் சில மணி நேரத்தில் விடுவிக்கப்பட்டுள்ளது பத்திரிகையாளர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறையை பொறுப்பில் வைத்திருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர், பெண் பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசுவது, பத்திரிகையாளர்களை மிரட்டுவதை தொழிலாக கொண்டுள்ள கிஷோர் கே சாமி மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும என்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், இம்மாதிரியான நபர்கள் இனிமேலும் தலைதூக்காமல் இருக்க, பத்திரிகையாளர்களை முடக்க நினைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக, அனைத்து பத்திரிகையாளர்களும், சங்கங்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் அன்போடு கேட்டுக்கொள்கிறது.