கோயம்புத்தூர் விமான நிலையத்தில் இன்று (01.02.2023) பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது “மாநிலத் தலைவராக இல்லை என்றால் பாஜகவில் தொடர்ந்து செயல்பட வாய்ப்பிருக்கிறதா?” என்ற கேள்வியை பெண் பத்திரிகையாளர் ஒருவர் முன்வைத்தார். உடனே அந்த பெண் பத்திரிகையாளரை, தனக்கு அருகில் வந்து நிற்கும் படி அழைத்ததன் மூலம் தரம் கெட்ட, கீழ்த்தரமான, மூன்றாம்தர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் அண்ணாமலை.
இந்த கேள்வி எந்த வகையிலும் அறம் தவறிய கேள்வியோ, ஒரு தனி நபரின் அந்தரங்க வாழ்க்கை குறித்த கேள்வியோ, ஒரு அரசியல் கட்சித் தலைவரின் குடும்ப விவகாரம் தொடர்பான கேள்வியோ, கேட்கவே கூடாத அல்லது கேட்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லாத கேள்வியோ கிடையாது.
அண்ணாமலை பாஜகவின் தலைவர் பொறுப்பை ஏற்றுக்கொண்டது தொடங்கியே அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு தொடங்கி, கட்சியின் மூத்த தலைவர்களையும், கூட்டணி கட்சித் தலைவர்களையும் மதிக்காமல் செயல்படுகிறார் என்றும், கொடூரமான குற்றப் பின்னணியைக் கொண்டவர்களை கட்சியில் சேர்க்கிறார் என்றும், பெண்களை பயன்படுத்தி கட்சியில் தனது பொறுப்பை காப்பாற்றிக்கொள்கிறார் என்பதுவரையிலான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன. இதைத்தொடர்ந்து அண்ணாமலை மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்படலாம் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் அவ்வப்போது உலவி வந்துள்ளது.
இந்நிலையில், அறிஞர் அண்ணா குறித்து அண்ணாமலை அளந்துவிட்ட பொய், அதிமுகவை கோபப்படுத்தியதும், அதைத் தொடர்ந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறியதையும் நாம் அறிவோம். ஆகவே, அண்ணாமலையின் இந்த நடவடிக்கையால், அவர் மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்படலாம் என்ற செய்தி மீண்டும் அரசியல் வட்டாரத்தில் உலாவரத் தொடங்கியுள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் தனது நடைபயணத்திற்கு இடையில் அண்ணாமலை டெல்லி புறப்பட்டுள்ளார்.
ஆகவே, இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது ஒருவேளை பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டால் கட்சியில் நீடிப்பீர்களா என்ற கேள்வியை அண்ணாமலையிடம் கேட்பது எந்த வகையிலும் நெறிதவறிய அல்லது தொடர்பற்ற கேள்வியாக கருத முடியாது. ஆகவே, அந்த பெண் பத்திரிகையாளர் எழுப்பிய கேள்வியில் எந்த தவறும் இல்லை. அது மிக மிக சரியான ஒரு கேள்வியே.
அண்ணாமலையை பொறுத்தவரை, பத்திரிகையாளர்கள் எழுப்பும் நியாயமான கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் வசமாக சிக்கிக்கொள்ளும் பட்சத்தில் அதை எவ்வாறு சமாளிப்பது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல், கேள்வி கேட்ட பத்திரிகையாளரை நோக்கி “நீங்கள் எந்த பத்திரிகையை சேர்ந்தவர்? உங்கள் பெயர் என்ன? சன் டிவியா? கலைஞர் டிவியா? உங்களுக்கு கேள்வி கேட்க தெரியவில்லை” என்பது போன்ற தரம்கெட்ட செயலில் ஈடுபட்டு தப்பிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
தமிழ்நாடு அரசியல் களம் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை பார்த்துள்ளது. ஆனால், பத்திரிகையாளர்கள் எழுப்பும் கேள்விக்கு கூட பதில் சொல்லத் தெரியாமல், இப்படி மூன்றாம் தர நடவடிக்கையில் ஈடுபட்ட எந்த ஒரு தலைவரையும் தமிழ்நாடு இதற்கு முன் சந்தித்ததில்லை. பாஜக கட்சி அலுவலகத்திற்கு நேரடியாக சென்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் சார்பாக “உங்களைப் போல் ஒரு அரசியல்வாதியை நாங்கள் இதுவரை பார்த்ததில்லை” என்று அண்ணாமலையிடம் நேரடியாகவே தெரிவித்துள்ளோம். ஆனாலும், அண்ணாமலை திருந்தவில்லை.
அதே சமயத்தில், பத்திரிகையாளர்களிடம் தொடர்ந்து கீழ்த்தரமாக நடந்துகொள்ளும் அண்ணாமலையை ஊடக மற்றும் பத்திரிகை நிறுவனங்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இதற்கிடையில், தன்னுடைய இயலாமையையும், கையாலாகாத்தனத்தையும் மறைக்க, பத்திரிகையாளர்களை மிரட்டுகிறோம் என்ற பெயரில் அண்ணாமலை செய்யும் இந்த கோமாளித்தனத்தை இந்திய பிரஸ் கவுன்சிலின் கவனத்திற்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் எடுத்துச் சென்றுள்ளது. அந்த புகாருக்கு பதில் அளித்துள்ள அண்ணாமலை பிரஸ் கவுன்சிலின் வரம்பு கூட தெரியாமலும், பிரஸ் கவுன்சிலின் மாண்புமிகு தலைவரை தவறாக வழிநடத்தும் வகையிலும் அவரையே மிரட்டும் தொனியிலும் ஒரு பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார். அண்ணாமலையின் இந்த கேவலமான நடவடிக்கையை இதற்கான பதில் மனுவில் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் இந்திய பிரஸ் கவுன்சிலின் மாண்புமிகு தலைவரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
அந்தவகையில், ஏற்கனவே அண்ணாமலைக்கு எதிராக விசாரணையில் உள்ள இந்த புகாருடன், இன்று(01.10.23) அண்ணாமலை பெண் பத்திரிகையளாரை மிரட்டும் வகையிலும், பொதுவெளியில் அவருடைய கண்ணியத்தை குறைக்கும் வகையிலும் நடந்துகொண்டுள்ளதை இந்திய பிரஸ் கவுன்சிலின் கவனத்திற்கு எடுத்துச் சென்று பத்திரிகையாளர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வோம் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் உறுதியளிக்கிறது.
ஊடக நிறுவனங்களுக்காக களத்திற்கு சென்று அண்ணாமலை போன்ற நபர்களிடம் கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்களை பாதுகாக்க வேண்டியது நிறுவனங்களின் கடமை. ஆனால், தன்னுடைய கடமையிலிருந்து தமிழ்நாட்டு ஊடகங்கள் தொடர்ந்த தவறி வருவதால் அண்ணாமலை இன்று (01.10.23) ஒரு பெண் பத்திரிகையாளரிடம் தறக்குறைவாக நடக்கும் அளவிற்கு சென்றுள்ளார்.
ஆகவே, தமிழ்நாட்டின் ஊடக நிறுவனங்கள் இனியும் மௌனம் காக்காமல் அண்ணாமலைக்கு பாடம் புகட்டும் வகையில், இதுபோன்ற தரம் தாழ்ந்த செயல்களை அவர் நிறுத்திக்கொள்ளும் வரை அவருடைய பத்திரிகையாளர் சந்திப்பை புறக்கணிக்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
பாஜக மாநிலத் தலைவர் என்ற பொறுப்பில் இருந்துகொண்டு அண்ணாமலை இதுபோன்று கீழ்த்தரமாக நடந்துகொள்வது, பாரதிய ஜனதா கட்சியின் நன் மதிப்பையே பாதிக்கின்றது என்ற வகையில், அக்கட்சியில் உள்ள தலைவர்கள், குறிப்பாக பெண் தலைவர்கள் அண்ணாமலையின் நடவடிக்கையை கண்டிக்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
களத்திற்கு செல்லும் செய்தியாளர்கள், அண்ணாமலை இனியும் இதுபோன்று நடந்துகொண்டால், ஒரு நொடியும் பொறுக்காமல் அந்த இடத்திலேயே அவருக்கு சரியான பாடத்தை புகட்ட வேண்டும் என்றும், அதற்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் அனைத்து வகையிலும் உறுதுணையாக இருக்கும் என்றும் உறுதியளிக்கிறது.
தமிழ்நாட்டிற்கென்று ஒரு அரசியல் பாரம்பரியம் உள்ளது. அந்த நாகரிக அரசியல் களத்தில் அருவெறுப்பாக நடந்துகொள்ளும் அண்ணாமலை போன்றவர்களை பிற அரசியல் கட்சித் தலைவர்களும், ஜனநாயக சக்திகளும் கண்டிக்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.
பத்திரிகையாளர்களை ஏலம் விட்டது, குரங்குகள் என்று கூறியது தொடங்கி தற்போது பெண் பத்திரிகையாளரை பொதுவெளியில் கண்ணியக் குறைவாக நடத்தியுள்ள அண்ணாமலையின் இந்த மூன்றாம் தர நடவடிக்கையை அனைத்து பத்திரிகையளார் அமைப்புகளும் எதிர்ப்பதற்கும், இந்த அநாகரிக செயலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் அழைப்பு விடுக்கிறது.