உலகை குலுக்கிய பத்து நாட்கள்
ஒரு சமூகத்தின் ஆட்சி கட்டமைப்பை மாற்றியமைப்பது என்பது எளிதான காரியமல்ல. அது ஒரு அசாதாரணசெயல். பெரும்பான்மை மக்களுக்கு அந்நியப்பட்டுப்போன ஆட்சி அதிகாரத்தை, மக்கள் ஒன்று கூடி தூக்கியெறிந்த நிகழ்வின் பதிவுதான், அமெரிக்க ஊடகவியலாளர் ஜான் ரீடின் “உலகை குலுக்கிய பத்து நாட்கள்” புத்தகம்.
1905 அக்டோபரில், ரஷ்யாவின் சுரண்டப்பட்ட உழைக்கும் வர்க்கம் புரட்சியில் ஈடுபட்டது. ஆனால் அந்த புரட்சி ஜார் அரசினால் நசுக்கபட்டது. பின்னர் 1917ம் ஆண்டு பிப்பிரவரியில் நடைபெற்ற புரட்சியின் விளைவாக முடியரசு கலைக்கப்பட்டு முதலாளிகளை உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கம் கேரன்ஸ்கி என்பவரது தலைமையில் அமைக்கப்பட்டது.
மக்களின் புரட்சியின் விளைவாக உருவான இடைக்கால அரசு, நாளுக்கு நாள் முதலாளிகளின் அடிவருடி அரசாவே மாறிப்போனது. அது மட்டுமின்றி, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளின் கட்டாயத்தின் பேரில் ரஷ்ய மக்கள் உலக போரில் தேவையின்றி ஈடுபடுத்தப்பட்டனர். தொடர் போரினால் அவதிப்பட்டு வந்த வீரர்கள், விவசாயிகள் என அனைவரையும் மீண்டும் ஒன்று திரட்டிய போல்ஷிவிக் கட்சி, மக்களின் எழுச்சியின் மூலம் ஆட்சியை கைப்பற்றியது. “ஸ்மோல்னி” எனப்படும் ரஷ்யாவின் நாடாளுமன்ற அவையில் குழுமிய அனைத்து கட்சியினர் முன்னிலையிலும் போல்ஷ்விக் கட்சியினர், ஆட்சியை கைப்பற்றியதாக அறிவித்தனர்.
ஆட்சி மாறியும் சமூகத்தின் காட்சி மாறவில்லை. நம் நாட்டிலேயே புதிய அரசாங்கம் வந்தவுடன் செயல்படுவதில் பல பிரச்சனைள் ஏற்படுவது வழக்கம். அதேபோல், ரஷ்யாவில் ஆட்சி கட்டமைப்பையே மாற்றியமைத்த போல்ஷிவிக் கட்சியின் அரசுக்கு நெருக்கடி என்பது நினைத்து கூட பார்க்கமுடியாத அளவிற்கு இருந்தது. அரசு அதிகாரிகளின் வேலைநிறுத்தம், ரயில்வே அதிகாரிகளின் வேலைநிறுத்தம் என, அரசே முடக்கப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்து. அப்போது போல்ஷிவிக் கட்சி, காட்டு தர்பார் போன்று மோசமான ஆட்சி நடத்துவதாக மார்க்சிம் கார்கி உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அந்த நேரத்தில் நாடாளுமன்ற கூட்டத்தில் பேசிய லெனினின், டிராக்ஸ்கி ஆகியோர், “முதலாளி வர்கத்தின் மீதான மென்மையான போக்கு என்பது உழைக்கும் வர்கத்திற்கு செய்யும் துரோகம், எனவே பாட்டாளி வர்க சர்வாதிகாரம் தொடரும்” என்று தெரிவித்தார்.
உலகமே கொடுங்கோன்மை என எதிர்த்த இந்த பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை, ஜான் ரீட் “நீதியை நிலைநாட்டும் போர்” என பிரகடனப்படுத்தியதும், போரில் உயிர்நீத்த புரட்சியாளர்களுக்கு மாஸ்கோவில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வை காட்சிபடுத்தும்போதும், நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்துகின்றார்.
அமெரிக்காவை சேர்ந்த ஜான் ரீட், தான் வாழ்ந்த சூழ்நிலைக்கு முற்றிலும் எதிரான ஆட்சி கட்டமைப்பின் உருவாக்கத்தை, இயல்பு மாறாமல் பதிவு செய்துள்ளார். மார்க்சியம் என்பது வெறும் ஐரோப்பிய தத்துவம் என்னும் தெளிவற்றவர்களின் எண்ணத்தை உடைத்தெரிந்துள்ளது இந்த புத்தகம்.
நிகழ்வை பதிவு செய்வது அல்ல ஊடகவியலாளரின் வேலை, நிகழ்வின் காரணம் மற்றும் விளைவுகளை உண்மையின் சார்பு நிலையிலிருந்து எடுத்துரைப்பதே. இந்த கூற்றிற்கு ஏடுத்துக்காட்டாக ஜான் ரீட் விளங்குகின்றார் என்பது அவரது முடிவுரையில் கூறிப்பிட்டுள்ள “அனைத்து மக்களும் அரசியல் தெளிவுபெறாமல் புரட்சி சாத்தியமல்ல என்றால், இன்னும் ஐநூறு ஆண்டுகள் கடந்தும் புரட்சி சாத்தியமல்ல..” என்கின்ற வார்த்தைகள் புலப்படுத்துகின்றது. ரஷ்ய உழைக்கும் வர்கத்தில் பெரும்பான்மையினோர் அரசியல் தெளிவுபெறாமல் இருந்திருக்கலாம், ஆனால் அனைவரும் அரசியல் மயப்பட்டிருந்தனர் என்பதே உண்மை.
வரலாறு என்பது வெறும் பதிவு அல்ல, சமூக வளர்ச்சியை நோக்கி மனிதனை இட்டு செல்ல பயன்படும் குறிப்பேடு. அப்படி இந்த உலத்தின் எல்லா மூலைகளிலும் புரட்சிக்காக போராடும் உழைக்கும் மக்களின் அவசியம் படிக்கவேண்டிய குறிப்பேடு இந்த “உலகை குலுக்கிய பத்து நாட்கள்” புத்தகம்.