CMPC
POLITICS / அரசியல்

புரட்சிக்கு ஏங்கும் காலம் – R.ப்ரியா

அநீதியை கண்டு உள்ளுக்குள் கொதித்து கொண்டிருந்த தமிழர்களை பொங்கி எழ செய்துள்ளது ஜல்லிக்கட்டு பிரச்னை. மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடிய இளைஞர்களில் 240 பேரை கைது செய்ததால் சுடர்விட்ட போராட்டம், சென்னை, கோவை என மாநிலம் முழுவதும் பரவியது. 1960களில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பிறகு இத்தனை ஆண்டுகள் அரசியல் கட்சியினரின் போராட்டங்களை மட்டுமே சந்தித்து வந்த தமிழகம் புதிய எழுச்சியை கண்டதற்கு ஆட்சியாளர்களின் பங்கும் அளப்பரியது. அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்யக்கோரி மெரினாவில் 100 பேரால் தொடங்கப்பட்ட போராட்டத்தில் நாளுக்கு நாள் லட்சக்கணக்கான இளைஞர்களும் மக்களும் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களிடம் ஜல்லிக்கட்டு கோரிக்கையை தாண்டி பல்வேறு முக்கிய கோரிக்கைகளும் இருந்தன. ஆனால், அரசாங்கத்திற்கும் ஆட்சியாளர்களுக்கும் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத ஜல்லிக்கட்டு கோரிக்கை மட்டுமே ஓங்கி ஒலித்ததால் இந்த போராட்டத்திற்கு காவல்துறை பாதுகாப்புடன் மாநில அரசும் ஆதரவு அளித்ததை உணர முடிந்தது. இது பெண்கள், குழந்தைகள் அதிக அளவில் போராட்டத்தில் பங்கேற்க பெரும் காரணமாகவும் அமைந்தது. பரந்து விரிந்த மெரினா கடற்கரையே மனித தலைகளால் மறைக்கப்பட்ட இந்த போராட்டத்திற்கு உலகத் தமிழர்களின் ஆதரவும் கிடைத்தது. எழுச்சி, புரட்சி என்றெல்லாம் மீடியாக்களும் புகழ்ந்தன. அரசு ஒரு போராட்டத்தை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரிக்குமேயானால் அது நிச்சயம் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தி விடாது என்பதை கண்கூடாகக் காண முடிந்தது. போராட்டக் களத்தில் போராட்டக்காரர்களே போக்குவரத்தை சீரமைப்பது, குப்பை கூளங்களை அகற்றுவது, மேளம் அடித்து ஆடிப் பாடுவதை பார்த்தபோது “ஒரு புரட்சி என்பது மாலை நேர விருந்தோ, ஒரு கட்டுரை எழுதுவதோ, ஓவியம் தீட்டுவதோ, பூத் தையல் வேலைப்பாடோ அல்ல… ஒரு புரட்சி நிதானமுள்ளதாகவும் பொறுமை, கருணை, பெருந்தன்மையுள்ளதாகவும் இருக்க முடியாது. புரட்சி என்பது ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தினை பலாத்காரமாக தூக்கி எறிவதாகும் ” என்ற மாவோவின் வார்த்தைகளே நிழலாடியது. போராட்டக்காரர்களின் எளிய கோரிக்கையான ஜல்லிக்கட்டு நிரந்தர சட்டத்தை நிறைவேற்ற அரசு முன்வந்தபோதிலும் அதனை போராட்டக்காரர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் அவர்களது போராட்டம் வெறும் ஜல்லிக்கட்டுக்கானது அல்ல. அதனை வெறும் ஜல்லிக்கட்டுக்குள் அடைத்த பெருமை மீடியாக்களையே சாரும். கைது செய்த மாணவர்களை விடுவிக்க கோரி தொடங்கிய இந்த போராட்டம் அவசர சட்டத்தை தாண்டி நிரந்தர தீர்வை எதிர்நோக்கியிருந்தது. நிரந்தர தீர்வு என்ற இளைஞர்களின் இந்த கோரிக்கை மாநில உரிமைகளை மீட்டெடுப்பதே தவிர வேறல்ல. மாநில உரிமைகளை மீட்டெடுப்பதன் மூலம் ஜல்லக்கட்டு மட்டுமல்ல விவசாயம், கல்வி கொள்கை, நீட் தேர்வு, மீனவர் பிரச்னை, முருகன் சாந்தன் பேரறிவாளன் ஆகியோரை விடுவிப்பது, கூடங்குளம் அணு உலை பிரச்னை, மீத்தேன், ஷேல் வாயு என பல பிரச்னைகள் தீர்க்கப்படும். தற்போதுள்ள அரசியல் சாசனத்தை மாற்றினாலொழிய மாநில உரிமைகளை மீட்டெடுக்க முடியாது. எதற்கெடுத்தாலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்நோக்கும் நிலை மாற வேண்டுமானால் தற்போதுள்ள அரசியல் சாசனத்தை தூக்கியெறிய வேண்டும். பல பிரச்னைகளால் உள்ளுக்குள் குமுறிக்கொண்டிருந்த இளைஞர்களின் கோபம் வெடித்து வெளிவந்த அந்த தருணத்தில் அதனை ஜல்லிக்கட்டு, பாரம்பரியம், பண்பாடு, உணர்வு என குறுகிய வட்டத்துக்குள் அடைக்கும் சிறந்த பணியை மீடியாக்கள் மேற்கொண்டிருந்தன. ஜல்லிக்கட்டு கோரிக்கையை கடந்து போராட்டம் சரியான திசையில் பயணிப்பதை விரும்பாத அரசு, போராட்டத்தில் இருந்த கறுப்பு ஆடுகளை வைத்து போராட்டத்தை நீர்த்துப் போக செய்யும் வேலைகளை முன்னெடுத்தது. அதனை தொடர்ந்து காவல்துறை உதவியுடன் போராட்டத்தை வன்முறையாக மாற்றி போராட்டக்காரர்களை கலைத்தது. காவல்துறையை ஏவி அரசால் ஏற்படுத்தப்பட்ட வன்முறை மக்கள் மனதில் கோபத்தை அதிகரிக்கவே செய்துள்ளது. போராட்டம் என்பது இரு வர்க்கங்களுக்கு இடையே நடைபெறும் யுத்தம் என்ற கார்ல் மார்க்ஸின் தத்துவத்தை மக்கள் புரிந்துகொண்டு எழுச்சியை புரட்சியாய் மாற்றும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பது அரசுக்கு எதிராக குழந்தைகள் போடும் கோஷத்திலிருந்து உணரமுடிகிறது. ஒருங்கிணைந்த போராட்டத்தால் அரசை பணிய வைக்க முடியும் என்ற மிகச்சிறிய நம்பிக்கையை இந்த போராட்டம் ஏற்படுத்தியுள்ளது. கோஷங்களுக்கிடையே ஆங்காங்கே ஒலித்த “தோழர்” என்ற வார்த்தை அதிகார வர்க்கத்தின் அச்சாணியை அசைத்து பார்க்கும் வல்லமைமிக்கது என்பதை அனைவரும் அறியும்படி செய்திருப்பதும் இந்த போராட்டமே. உன் இனத்தில் யார் பெயரைச் சொன்னால் எதிரி குலை நடுங்குவானோ அவனே உன் இனத்தின் தலைவன் என்ற சே குவேராவின் சொல்லை நினைவுபடுத்துகிறது தோழர் என்ற வார்த்தை.

Related posts

ஜல்லிக்கட்டு அரசியல்

CMPC EDITOR

தொழிலாளர்கள் நிலையும்! மே தினத்தின் இன்றைய தேவையும்!!!

admin

பொன்முட்டையிடும் வாத்தும், அறுக்கத்துடிக்கும் அரசும்

CMPC EDITOR