புதிய தலைமுறை செய்தியாளர் மற்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு எதிராக கோவை மாநகர காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருப்பதை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது

0
812

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சார்பாக கோவையில் நேற்றைய தினம் வட்டமேசை விவாதம் என்ற நிகழ்ச்சி ஒரு தனியார் அரங்கத்தில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து இருவேறு தலைப்புகளின் கீழ் பேசுவதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் அழைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியின் முதல் பகுதி தொடங்கி நடைபெற்று வந்த சூழ்நிலையில் இறுதியாக இயக்குனர் அமீர் பேசத் தொடங்கியிருக்கிறார். அவர் பேசும்போது அவருடைய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரங்கத்தில் கூடியிருந்த சிலர் அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன் மேடையை நோக்கி ஓடி வந்து அவரை தாக்குவதற்கும் முற்பட்டுள்ளனர். உடனே அங்கிருந்த புதிய தலைமுறை ஊழியர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முயற்சி செய்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் கூட்டத்தை அமைதிப்படுத்த அறிவுறுத்த வேண்டுமென்று புதிய தலைமுறையின் சார்பாக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை  சவுந்தரராஜனுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் கூட்டத்தினரை கட்டுப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அந்த நிகழ்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்றைய தினம் (09.06.2018) கோவை மாநகர காவல் துறை, (IPC 505, 153a, 3(1) ) பொது மக்களை அச்சுறுத்துவது, ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக கருத்துக்களை தெரிவிப்பது ஆகிய பிரிவுகளின் கீழ் புதிய தலைமுறையின் கோவை செய்தியாளர் சுரேஷ் மற்றும் புதிய தலைமுறை நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த நிகழ்ச்சியை நடத்துவது தொடர்பாக ஏற்கனவே கோவை மாநகர காவல் துறையினரிடம் புதிய தலைமுறையின் சார்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதை கருத்தில் கொண்டு காவல் துறையினர் உரிய பாதுகாப்பை வழங்கி இருக்க வேண்டும்.  நிகழ்ச்சியில் இப்படிப்பட்ட ஒரு அசம்பாவிதம் நடைபெறும் என்பதை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் முன்கூட்டியே கணிப்பதற்கு  வாய்ப்பு இல்லை.  இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு கட்சியை சேர்ந்த பிரதிநிதிகளும் அவர்கள் பேசுவதற்கு நேரம்  ஒதுக்கப்படும் போது அவர்கள் கருத்தை கூறலாம் என்று நிகழ்ச்சியை நெறிப்படுத்திய புதிய தலைமுறை தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் கார்த்திகை செல்வன் கூறியுள்ளார். இருந்தபோதும் இயக்குனர் அமீர் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  ஒரு பிரிவினர் இது போன்ற அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஆகவே அராஜகத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தவறிய காவல்துறையினர் புதிய தலைமுறை செய்தியாளர் சுரேஷ் மற்றும் புதியதலைமுறை நிர்வாகத்தின் மீதும் வழக்குப்பதிவு செய்திருப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.  கலவரத்தை தூண்டும் விதமாக நடந்து கொண்ட நபர்கள் மீது கலவரத்தை தூண்டும் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யாமல் அதில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்திருப்பது, காவல்துறையினர் ஒரு தலைபட்சமாக செயல்பட்டு இருக்கின்றார்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

ஆகவே புதியதலைமுறை நிர்வாகத்தின் மீதும், புதிய தலைமுறையின் கோவை செய்தியாளர் சுரேஷ் மீதும் பதிவு செய்துள்ள வழக்கை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகின்றது.

கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் வகையில் காவல்துறையினர் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு எதிராக, அனைத்து ஜனநாயக சக்திகளும் பத்திரிக்கையாளர் அமைப்புகளும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் அழைப்பு விடுக்கிறது.