cmpc.in
Statements

பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையின் அருவெறுக்கத்தக்க, கீழ்த்தரமான பேச்சை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது!

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சென்னையில் இன்று (19.01.24) பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, சமீபத்தில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் ஆசிரியர் கார்த்திகை செல்வனுக்கு கொடுத்த நேர்காணலில், அவர் தெரிவித்த கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, கேட்போர் முகம் சுழிக்கும் வகையில் மிகவும் கீழ்த்தரமான ஒரு ஒப்பீட்டை கருத்தாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் அந்த நேர்காணலை எடுத்த பத்திரிகையாளர் கார்த்திகைச்செல்வனை மிகவும் கேவலமாக சித்தரித்துள்ளார்.

பொதுவெளியில் பேசும்போது, சாதாரண பொதுமக்கள் கூட பேசத் தயங்கும் கேவலமான வார்த்தைகளை அண்ணாமலை மிகச் சாதாரணமாக பேசியுள்ளார். அதுவும் பத்திரிகையாளரை குறிப்பிட்டு அவ்வாறு பேசியுள்ளது பத்திரிகையாளர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த காலங்களிலும் பத்திரிகையாளர்கள் குறித்து அண்ணாமலை தெரிவித்த கேவலமான கருத்துகளுக்கு இதுவரை அவர் மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்காத நிலையில், தற்போது மிகவும் தரம் தாழ்ந்து மற்றொரு கருத்தை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலையின் இந்த இழிவான நடவடிக்கைகளை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் தொடர்ந்து கண்டித்து வருகின்றது. ஒருமுறை, அமைப்பின் பிரதிநிதிகள் நேரடியாக அவருடைய அலுவலகத்திற்கே சென்று எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம். மேலும், அண்ணாமலையின் இந்த தரங்கெட்ட தொடர் செயல்கள் கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்கும் வகையில் அமைந்திருப்பதால், இதுதொடர்பாக இந்திய பிரஸ் கவுன்சிலில், சங்கம் சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகார் குறித்து இந்திய பிரஸ் கவுன்சிலில் அண்ணாமலை அளித்துள்ள பதிலிலும், பிரஸ் கவுன்சிலை அவமதிக்கும் வகையிலும், எதற்காக புகார் அளிக்கப்பட்டதோ அதை உறுதிப்படுத்தும் வகையிலும், வாய்க்கு வந்த வகையில் உளறிக்கொட்டியுள்ளார். இவ்வாறு நாம் கொடுத்த புகாருக்கான ஆதாரத்தை தன்னுடைய பதில் அறிக்கையின் மூலம் அண்ணாமலையே கொடுத்திருக்கும் நிலையிலும், மாதங்கள் பல கடந்தும் இந்திய பிரஸ் கவுன்சிலில் நமது புகார் நிலுவையில் உள்ளது. இத்தகைய சூழலில்தான் பத்திரிகையாளர்களிடம் மீண்டும் தரம் தாழ்ந்து நடந்துள்ளார் அண்ணாமலை.

ஆகவே, அண்ணாமலையின் இந்த கீழ்த்தரமான பேச்சை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

மேலும், அண்ணாமலையின் இந்த தொடர் கீழ்த்தர நடவடிக்கையை, பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் கண்டிப்பதுடன், இந்திய பிரஸ் கவுன்சிலின் கவனத்திற்கு கொண்டு சென்று நமது புகாருக்கு வலு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

பத்திரிகையாளர்களிடம் தொடர்ந்து தரக்குறைவாக நடந்துகொள்ளும் அண்ணாமலையின் பத்திரிகையாளர் சந்திப்பை, அவர் பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை புறக்கணிக்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்தும் அதேவேளையில், பத்திரிகை ஆசிரியர்கள் சங்கமும் அதுபோன்ற ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி பத்திரிகை நிறுவனங்களை ஏற்கச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

தான் பேசிய கேவலமான வார்த்தைகள், தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் பேசப்படுவது என்று வாய் கூசாமல் பொய் சொன்னதுடன், தமிழ்நாடு மக்களையும் அவமானப்படுத்தியுள்ள அண்ணாமலை மீது பாஜக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.

Related posts

பத்திரிகையாளர் மோசஸ் படுகொலைக்கு நியாயம் வேண்டும். அவர் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்

CMPC

ஊடக நெறியை பாதுகாக்க பிஹைண்ட்வுட்ஸ் (Behindwoods) டிஜிட்டல் ஊடக நிறுவனம் எடுத்துள்ள முடிவை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் வரவேற்று, வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது.

CMPC

சாதிய பாகுபாட்டை வெளிக்கொண்டு வந்த நியூஸ் தமிழ் செய்தியாளரை மிரட்டும் திமுகவினரை மாற்றத்திற்கான ஊடகவியலளார்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது

CMPC

Leave a Comment