CMPC
ART / கலை

“பரியேறும் பெருமாள்”… தலித் படமா? ஒடுக்கப்பட்ட மக்களுக்கான படமா? – அருண்மொழி வர்மன்

“பரியேறும் பெருமாள்”… வெறும் படமாக இதை கடந்து செல்ல முடியவில்லை. படத்தின் பல காட்சிகள் நம் தொண்டை குழியை அடைக்கின்றது. படம் முழுவதும் பார்க்கப் போகும் எல்லா கொடுமைகளுக்குமான தீர்வை, படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, “உங்க அப்பனும், எங்க அப்பனும் அவுங்க கிட்ட கையேந்தாத நிலை வரும் வரை இது தீராது” என சொல்லி விட்டு கதைக்குள்  செல்கிறார் இயக்குநர்.

ஒடுக்கப்படும் மக்களில் முதல் தலைமுறை பட்டதாரிகள் பெரும்பாலானோர் வரலாறு, ஆங்கிலம் அல்லது சட்டத்தை படிப்பாக தேர்வு செய்கின்றனர். இந்தப் படிப்புகள் கூட பணத்திற்காகவோ? புகழுக்காகவோ அவர்கள் படிப்பதில்லை. அவர்களின் தேவை அடிப்படையிலேயே இந்தப் படிப்புகளை தேர்வு செய்கின்றனர். அந்தத் தேவைகள் அதன் காரணங்கள் என்ன என்பதை இயக்குனர் மாரி எதார்த்தமாகச் சொல்லி இருக்கிறார்.

சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளில், கட் ஆஃப் மார்க்கை வைத்து சாதிய வன்முறை நடந்து கொண்டிருக்கும் நிலையில், திருநெல்வேலி போன்ற சிறிய நகரங்களில் உள்ள சட்ட கல்லூரிகளின் நிலை என்னவாக இருக்கும் என்பது இந்தப் படத்தில் மிக அழகாக காட்சிப்படுத்தப் பட்டுள்ளது. முன் வரிசைகளும் பின் வரிசைகளும் யாருக்கானது? என்பதை காட்டும் மாரி, பின் வரிசை மாணவர்கள் ஏன் படிக்காத மக்காக சித்தரிக்கப்படுகிறார்கள் என்ற உண்மையையும் புரியவைத்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் மூன்று மாணவர்கள் தாக்கப்பட்டனர். அதைக் கண்டு தமிழகமே என்ன இது கொடூரமான செயல், எனத் தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் குறித்து கத்தி கூப்பாடு போட்டனர். ஆனால் கடைசிவரை தக்கிய மாணவர்கள் ஏன் தாக்கினர்? அங்கு உண்மையாகவே என்ன நடந்தது? என்பது குறித்து யாரும் எந்தக் கவலையும் கொள்ளவில்லை.

ஞாபகம் வைத்துக்கொண்ட சிலர் மட்டும் சொல்வார்கள் “அது, சாதி சண்டப்பா…. தேவர்க்கு விழா எடுக்க கூடாதுனு படிக்கிற பசங்கள இந்த ரவுடி பசங்க அடிசானுக” என்று. ஆனால் இன்று கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் கழித்து அந்தக் காட்சிகளை மீண்டு நினைவு கூர்வோம். ஆனால்  அடித்தவர்களை பரியன்களாகவும், அடிவாங்கியவர்களை போஸ் பாண்டிகளாகவும் பாருங்கள் நடந்தது புரியும்.

” உங்க பொண்ணுக்கு என்ன சார்… நெனச்சத எல்லாத்தையும் பேச முடியுது. எங்களுக்கு எல்லாம் அப்படியா சார், நெனச்சத பேசுனும்னு நெனச்சாலே டவுசர கழிட்டிடுறீங்க…” எனப் பரியன் சொல்லும்போது, ஜோதி மகால‌ஷ்மிகளின் வாழ்வில் காதல் ஒரு உணர்வு, ஆனால் பரியன்களுக்கோ அது ஆடம்பர தேவை, என்பதை சொல்லாமல் சொல்லிச் சென்றுள்ளார் மாரி.

திரைகலையில் சிறந்த படைப்பு என அனைவரும் புகழும் இந்தத் திரைப்படம் கொண்டாடப்பட வேண்டியது. கொண்டாடப்பட்டுக் கொண்டும் இருக்கிறது.

இதுவரை ஒடுக்கப்பட்ட மக்களின் திரைப்படங்களையே வெறுத்து வந்த பலர் இப்படத்தை  மட்டும் ஆதரிக்கவும் காரணம் இருக்கிறது. அது என்னவென்றால், பரியன் எல்லா இடத்திலும் தன்னை தற்காத்துக் கொண்டானே தவிர எந்த ஒரு இடத்திலும் ஆதிக்கவாதிகளை அடிக்கவில்லை.  இன்னும் சொல்லப் போனால் பரியன் எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டான். பார்ப்பவர்களிடம் பரிதாபத்தை மட்டுமே பரிசாகப் வேண்டினான். கடைசி வரை அவன் தனியாகவே இருந்தான். உதிரியான அவனின் வாழ்க்கை அவனுக்கு என்ன தரும்?  கடைசிவரை புலம்பி பொறுத்து  இந்த சமூகத்தில் தனித்து வளர்ந்து இன்னொரு பரியனுக்கு நன்றாக படி என அறிவுரை மட்டுமே  கூற முடியும். இது மட்டுமே இந்த படத்தில் எதிர்ப்பார்த்து ஏமாந்த ஒன்று. இது தலித் படமாக பார்க்கப்பட்டால் அது மாரிக்கு பாதி வெற்றி மட்டுமே. அதுவே ஒடுக்கப்பட்ட மக்களின் படமாக பார்க்கப்பட்டால் அதுதான் இயக்குனருக்கு கிடைக்கும் முழு வெற்றி.

Related posts

கோலிவுட் ரஞ்சித்தை பின் தொடருமா/வெளியேற்றுமா?

CMPC EDITOR

மகளிர் தின கவிதை – டேனியல் வி.ராஜா

admin

‘எப்போதும் மக்களை தூற்றுதல் தவறு’- திவ்யா

admin