CMPC
POLITICS / அரசியல்

பயங்கரவாதம் என்ற சொல்…

மனித வரலாற்றின் அநேக இறுதி பக்கங்களை இயற்றியதில், கொள்கை போர்களுக்கு மிக முக்கிய பங்குண்டு. தற்காலத்தில் அந்த ரத்த சரித்திரத்தை தொடரும் கைகளுக்கு, தீவிரவாதிகளென்றும் பயங்கரவாதிகளென்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. நாட்டின் வெகு ஜன மக்களுடைய உயிருக்கு உத்திரவாதமின்மையை உருவாக்கும் உருவங்களாக மட்டுமே இவர்களை காட்சிப்படுதியதின் விளைவு, நாட்டின் சக குடிமக்களை கூட சந்தேக பார்வையின் இரையாக்கியுள்ளது. இந்த போக்கே, தற்போது நிலவுகின்ற ஆயுத கலாசாரத்தை பற்றிய உண்மை புரிந்துகொள்ள அவசியமாக்கியுள்ளது.

இங்கே ஆயுத வாதம் பேசுபவர்கள், ஏதோ வான் வழி குதித்தவர்களை போன்ற விஸ்தரிப்பு ,அவர்களின் வாத முரணிற்கான அடிப்படை உண்மையை மறையசெய்வதோடு, அவர்களைப்பற்றிய அச்ச உணர்வை மட்டுமே சாமானிய மக்களிடம் மேல் வளரச் செய்கிறது. பயங்கரவாதம் மனித உயிர்களுக்கு பயங்கரம் விளைவிக்கும் பாதகம் என்ற உண்மையை கடந்து,அவர்களின் தீவிரவாதத்தின் தன்மை,அப்படி மாற காரணமாய் இருக்கும் வேர்களை பற்றிய புரிதலை,வெகுஜன மக்கள் பகுத்தறிவது , சக மனிதத்தின் மீது அவர்கள் கொண்டிருக்கும் கண்ணோட்டத்தை மேம்படுத்த பேருதவியாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. புறக்கணிப்பும், உரிமை பரிப்பும், சாமானியத்தை சாக்குளியில் தள்ளுகின்ற தருணங்களில், அது அசாதாரண சூழ்நிலைகளை உருவாக்குகிறது.தனக்கும் தன்னை சுற்றி இருக்கும் சக அறியா உயிர்களையும் அது காவுவாங்குவதே பயங்கரவாதத்தின் அகோர தோற்றதிற்கான காரணமாகிறது.

தங்களின் உரிமை மீட்டலுக்கான தர்க்க மொழியாக, ஆயுதத்தை கையாள்பவர்கள், அடிப்படையில், பொருளாதார பின்னணியில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாகவும், சமூக அநீதிகளுக்கு ஆளானவர்களாகவும் இருப்பதினால், நிகழும் தீங்கினைகளுக்கு, சாமானிய சமூகத்தின் பெரும் பங்கும், முக்கிய காரணம் என்ற சுடும் உண்மையை, ஏற்க வேண்டியதுள்ளது. ஆனால் போராளிகளின் போராட்ட போக்கு பயங்கரவாதமாக இருப்பதால், ஒளி வேண்டி நிற்கும் அவர்களின் தீவிரவாதம், குடில் மேல் பற்றிய தீயாய் பார்க்கப்படுகிறது.
வளர்ச்சிகண்டிருக்கும் கொலை கருவிகளின் நவீனத்துவம், சதி செயல்களின் யுக்திகளில் பயங்கரவாதத்தின் மேதமைத்தனம், உலகெங்கும் தங்களின் வேர்ப்பரப்பி,வெகுஜன மக்களை போன்று முகமூடி அணிந்து வாழும் தைரியம் என பயங்கரவாதத்தின் வடிவத்தில் மேம்படுத்தப்பட்ட பல மாறுதல்கள் வந்திருந்தாலும், அது குடிகாரன் கையில் கிடைத்த மதுக்குடம் போலதான் இருகிறதே தவிர, தாங்கள் கொண்டிருக்கும் கோரிக்கைகளை அடைய அது எவ்விதத்திலும் பயன் தராமலேயே இருக்கிறது. தங்களின் தீவிரவாத பாதை தங்களை தடம் மாற்றி பயங்கரவாதிகளாக மாற்றிவிட்டதை உணர்ந்தாலும் கூட, அவர்களுக்கு திருந்தி வாழும் சந்தர்ப்ப சூழ்நிலைகள் வாய்க்கப்படுவதில்லை, கிட்டத்தட்ட ஒரு வழி பாதையில் எதிர் திசை பயணம் போலாகிவிட்ட அவலம், அவர்களுக்கு அரசிடம் அகப்படாமல் அனுபவிக்கும் தண்டனையைப் போலானதாகும்.

எதிர்வினை உணர்ச்சிபெருக்கு மாத்திரம் தீவிரவாதத்தின் மூல காரணமன்று, புதிய தலைமுறை பயங்கரவாதத்தின் காரணியாக விளங்குவதில், பெரும்பாலும் பெரும்பான்மையினரின் பழிபோடும் பண்பிற்கு பலியாகும் சிறுபான்மையினரின் அவல நிலையும் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதுவே பயங்கரவாதத்தின் ஜன தொகை பெருக பெரும் காரணமாகும். புறக்கனிக்கப்படுதலை பொறுத்தாலும், பலி ஏர்த்தலை எந்த இனமும் ஏற்காதென்பதே மானுட பொது உண்மை.
வெடித்து விழுங்கிய பயங்கரவாத நிகழ்வுகளை, விசாரிக்க காவல் துறையும், நீதி வழங்க நீதிமன்றங்களும் இயல்பாக பொறுப்பேற்பது போல் , பயங்கரவாத நிகழ்வில் சமூக பண்பாட்டு காரணிகளை ஆய்வு செய்து ஆவணம் செய்துகொள்ளும் பொறுப்பை அரசு ஏற்றுகொண்டதாக தகவல் இல்லை. பயங்கரவாதத்தை விஞ்ஞான பூர்வமாக புரிந்து கொள்ளாமல், மீண்டும் ஒரு அசம்பாவிதம் தோன்றாமல் செய்வதற்கான வாய்ப்புகளை பற்றிய கருத்தில், கனத்த மௌனமே நிகழ்கிறது.மேலும், அரசின் பிரதிநிதிகளாக உள்ளவர்கள், தங்கள் தேர்தல் அரசியளுக்கான குழம்பிய குட்டையாகவே பார்க்கும் சூழல் மட்டுமே இங்கு நிலவுகிறது. அமெரிக்காவில் 2001 செப் 11, வர்த்தக கட்டிட தாக்குதலுக்கு பிறகு, ஒரு பயங்கரவாத தாக்குதலையும் அமெரிக்க அரசாங்கம் அனுமதிக்கவில்லை. ஆனால் 2001 நாடாளுமன்ற தாக்குதலுக்கு பிறகு இந்தியாவில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் எண்ணிக்கை 45 ஆகும். தவறை திருத்திக்கொள்ள மறுக்கும், தவறை 45 முறை அரசு தரப்பு தொடர்வதென்பது, அதன் திட்டமிடலின் பலகீனமா? அல்லது திட்டமிட்டுதான் பலம்காட்ட தவறவிடப்பட்டுள்ளதா? என்ற ஐயத்தை உருவாக்குகிறது.

இதையெல்லாம்தாண்டி , பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டவர்கள் பிடிபட்டால், அவர்களை கையாள்வதென்பது அரசாங்கத்திற்கு,பெரும் இரை விழுங்கிய சிறு பாம்பின் நிலைபோல் ஆகிவிடுகிறது. பயங்கரவாத கொலைகளத்தில் இறையான உயிர்களை விட, நாட்டின் இறையாண்மை கொள்கைகளை காப்பாற்றுவது என்ற பேரில், அண்டை நாட்டின் ஆட்சேபனைக்கு காத்திருப்பதென்பது, உண்மையில் மக்களுக்காக நாட்டின் இறையாண்மையா? அல்லது ஆட்சியின் இறையாண்மைக்காக மக்களா ? என்ற கேள்வியை எழச்செய்கிறது. இது ஒருபுறமிருக்க, தேசத்தின் மனசாட்சியை திருப்திபடுத்தும் நடவடிக்கை என்ற பெயரில், தூக்கு கயிற்றின் முன் சந்தேக உருவங்களையெல்லாம் நிறுத்துவதென்பது, தேசத்தின் வாய்மை அளிக்கும் திறனில் உள்ள வலுவற்ற நிலையை அம்பலப்படுத்துகிறது.

முரண்களினால் ஏற்படும் தர்க்கத்தில், உரிமைகளின் வாதம் புறக்கணிக்கப்படும் போது, தர்க்கத்தின் ஊடகத்தில் மாற்றம் ஏற்படுகின்றது. அதன் பெயரே தீவிரவாதம். உரிமை மீட்புக்கான தேடலென்பது ஜனநாயக கட்டமைப்பிற்குள் இருக்குமாயின், அது மக்கள் மத்தியில் சம தெளிவிற்கும், சமரச தொடக்கத்திற்கும் வழிவகுக்குமே தவிர, பயங்கரவாதம் தீரா வியாதியாகவே அமையும். நம் நாட்டின் அன்றாடத்தை இயக்கும் முக்கிய உறுப்புகளான ஊடகங்கள், அரசாங்க துறைகள், சமூக அமைப்புகள் என அணைத்து தரப்பினரும் பயங்கரவாதம் பற்றியும் பயங்கரவாதிகளை பற்றியும் புதிய புரிதலை பெற வேண்டியுள்ளது. ஏனெனில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்பது அவர்கள் வாழ்க்கைக்குள் நாம் குண்டு வைத்து விட்டு வரும் எளிய எதிர்வினை அல்ல. அது பாதிக்கப்பட்டவரையும் ஏன் பயங்கரவாதியையும் இயல்புக்கு மீட்கும் மாபெரும் வரலாற்று நடவடிக்கை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

Related posts

உனக்கு ஏன் விடுதலை?

CMPC EDITOR

ஜனநாயகத்தின் அவலத்தை காட்டிக்கொடுத்த ஆர்.கே.நகர்…

CMPC EDITOR

அடக்கப்பட வேண்டிய மாடு எது?

admin