பத்திரிக்கையாளர் வினோத் வர்மா கைது நடவடிக்கையை மாற்றதிற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது

0
663

மூத்த பத்திரிக்கையாளர் வினோத் வர்மாவை காவல்துறையினர் கைது செய்துள்ளது இந்திய பத்திரிக்கையாளர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தின் பொதுப்பணித் துறை அமைச்சருக்கு அச்சுறுத்தல் விடுத்ததாகவும், அமைச்சரிடம் பணம் பறிக்க முயன்றதாகவும் வினோத் வர்மா மீது சத்தீஸ்கர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பிபிசி இந்திப் பிரிவில் பணியாற்றியவரும், அமர் உஜாலா என்னும் பத்திரிக்கையின் இணையப்பிரிவு ஆசிரியருமான வினோத் வர்மா, சத்தீஸ்கரின் அரசியல் சமூக பிரச்சனைகள் குறித்து நீண்ட காலமாக எழுதி வருகிறார். தற்போது சுயேட்சையான பத்திரிக்கையாளராக செயலாற்றிவரும் வினோத், Editor’s Guild of India-வின் உறுப்பினராகவும் உள்ளார்.

உத்தர பிரதேசத்தில் உள்ள தனது காசியாபாத் இல்லத்தில் தங்கியிருந்த வினோத்தை, அக்டோபர் 27-ம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் உ.பி காவல்துறையினருடன் வந்த சத்தீஸ்கர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் மீது, அச்சுறுத்தல், பணம் பறிக்க முயற்சி, மிரட்டல் உள்ளிட்ட குற்றங்கள் செய்ததாக, ஐ.பி.சி பிரிவு 384, 507 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வினோத் வர்மா மீது சத்தீஸ்கர் மாநில பாஜக செயற்குழு உறுப்பினர் பிரகாஷ் பஜாஜ் என்பவர் அக்டோபர் 26-ம் தேதி மாலை 4 மணியளவில் புகார் அளித்துள்ளார். பிரகாஷ்-ஐ அலைபேசியில் மிரட்டிய அடையாளம் தெரியாத நபர், அம்மாநில அமைச்சர் ராஜெச்ஷ் முனாத்தின் ஆபாச சிடி தன்னிடம் இருப்பதாகவும், அதை வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து, உடனடியாக களத்தில் குதித்த சத்தீஸ்கர் போலீசார், அடுத்த 12 மணி நேரத்திற்குள் வினோத் வர்மாவை கைது செய்துள்ளனர். காவல்துறையின் இந்த மின்னல் வேக நடவடிக்கையே மிகப்பெரிய சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

சி.டி, விவகாரம் குறித்து தான் புலனாய்வு செய்து வருவதால், தன் மீது சத்தீஸ்கர் அரசு பொய் வழக்கு போட்டுள்ளதாக கைது செய்யப்பட்ட வினோத் வர்மா தெரிவித்துள்ளார். சத்தீஸ்கரில் உள்ள பத்திரிக்கையாளர்கள் அரசின் கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் பணியாற்றுவதாகவும், பத்திரிக்கையாளர்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு இருப்பதாவும், வினோத் வர்மா அங்கம் வகித்த உண்மை அறியும் குழு கடந்தாண்டு அறிக்கை சமர்ப்பித்தது. அந்த அறிக்கைக்கு ஏற்றாற்போல, மூத்த பத்திரிக்கையாளர் வினோத் வர்மாவை எந்தவித முகாந்திரமும் இல்லாமல் கைது செய்து, சக பத்திரிக்கையாளர்களுக்கு அச்சுறுத்தலை விடுத்துள்ளது சத்தீஸ்கர் அரசு.

இதேபோல், சமீபத்தில், பாஜக தலைவர் அமித் ஷாவின் மகன் ஜே அமித்ஷாவின் வணிக வருமானம் சந்தேகத்திற்கிடமான வகையில் 16 ஆயிரம் மடங்கு உயர்ந்துள்ளது குறித்து எழுதிய செய்தியாளர் ரோகிணி சிங் மீதும், செய்தியை வெளியிட்ட ‘தி வயர்’ என்ற ஊடகத்தின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் உள்ளிட்ட 7 பேர் மீது ரூ.100 கோடி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் ஜே அமித்ஷா. அந்த செய்தியை மறுவெளியீடு செய்யும் அனைத்து ஊடகங்கள் மீதும் வழக்கு தொடரப்படும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டது.

‘எக்னாமிக் அண்டு பொலிடிகல் வீக்லி’ ஆசிரியர் பரனாய் குகா தகுர்தா அதானி சமீபத்தில் பதவி விலகியதின் பின்னணியில்,  அதானி குறித்த செய்தி வெளியிட்டதற்காக கொடுக்கப்பட்ட அழுத்தமே காரணம் என்று கூறப்படுகிறது. ஹிந்துஸ்தான் டைம்ஸ் தலைமை ஆசிரியர் பாபி கோஷ் பதவி விலகிய சில தினங்களில், பாஜக ஆட்சியில் இந்தியாவில் நடைபெற்ற சாதி/மத மோதல்களை ஆவணப்படுத்திய அதன் செய்தி இணையப்பக்கம் நீக்கப்பட்டது. பாபி கோஷ் பதவி விலகிய பின்னணியில் பாஜகவின் தலையீடு இருப்பதாகவும் பரவலாக தகவல்கள் வெளியாகின. கேரள பாஜகவின் தலைவர்களில் ஒருவராகவும், அதே நேரம் ‘சுயேட்சை எம்.பி.’யாகவும் ஒரே நேரத்தில் இருக்கக்கூடிய ராஜிவ் சந்திரசேகரின் ‘ரிபப்ளிக் டிவி’ தொடர்புகளை வெளியிட்ட ‘தி வயர்’ மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. ஜெட் ஏர்வேய்ஸ் நரேஷ் கோயலின் தாவூத் இப்ராஹிம் தொடர்புகளை அம்பலப்படுத்திய பத்திரிக்கையாளர் ஜோசி ஜோசப் மீது ரூ.1000 கோடி மானநஷ்ட வழக்கும், எஸ்ஸார் நிறுவனம் அரசியல்வாதிகளுக்கு வழங்கிய சலுகைகள் குறித்து செய்தி வெளியிட்டதற்காக ‘கேரவன்’ பத்திரிக்கை மீதான ரூ.250 கோடி வழக்கு என அதிகார வர்க்கதினால், பத்திரிக்கையாளர்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்படுகின்றனர்.

அத்தனை அச்சுறுத்தல்களையும் மீறி, மக்களுக்கு உண்மையை சொல்லும் உறுதியோடு கவுரிலங்கேஷ் போன்ற  பத்திரிக்கையாளர்கள் இங்கே பணியாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களின் தோளோடு தோள் நின்று, இன்று கைது செய்யப்பட்டுள்ள வினோத் வர்மா உள்ளிட்ட அனைத்து பத்திரிக்கையாளர்கள் மீதான தாக்குதல்களையும் மாற்றத்திற்கான ஊடகவியலார்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது.

வினேத் வர்மா கைதுக்கு எதிராக, அனைத்து பத்திரிகையாளர் அமைப்புகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று மாற்றுத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கிறது.