CMPC
STATEMENTS / அறிக்கைகள்

பத்திரிகை போராளி குல்தீப் நய்யாருக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் அஞ்சலி.

1975 ஆம் ஆண்டு…இந்தியாவில் நெருக்கடி நிலை.ஆளும் காங்கிரஸ் கட்சியின் மிகமுக்கிய தலைவர்கள், எதிர்கட்சித்தலைவர்கள் என அரசை எதிர்த்து பேச எண்ணியவர்கள், அவ்வாறு எண்ணியவர்களுடன் அருகில் வெறுமனே அமர்ந்திருந்த தலைவர்கள் என அனைவரும் சிறைவைக்கப்பட்டார்கள். கூட்டங்கள் நடத்தவோ, நான்கு பேர் ஒன்றாக சேர்ந்து சாலையில் நடந்துசெல்வதற்கோ கூட ஏக கெடுபிடிகள் இருந்த இந்திராவின் ஆட்சி. பத்திரிகைகள் கடும் தணிக்கைக்குள்ளான நேரம். அரசுக்கு எதிராக எவரேனும் வாய் திறந்தால், சிறை வாயில் திறந்த காலமது.

“மக்களாட்சியை கொன்று புதைத்து இந்திரா நடத்துவதற்கு பெயர் மக்களாட்சியா? காவல்துறையின் காட்டாட்சியா?” என்றெழுதி எமெர்ஜென்சி காலத்தில் பேனாவை முதலாய் தூக்கிய பத்திரிகையாளர் திரு.குல்தீப் நய்யார் அவர்கள். அதனாலேயே மிசா கொடுஞ்சட்டத்தினால் கைதுசெய்யப்பட்டு சிறைகண்ட தலை பத்திரிகையாளர் அவர்.

“பிரிட்டிஷ் இந்தியா, பிரிவினைகால இந்தியா, தற்போதைய இந்தியா என மூன்று இந்தியாவையும் பார்த்தவன் நான்” என்று எப்போதும் பெருமிதப்படும் திரு.நய்யார், தற்போது பாகிஸ்தானில் இருக்கும் சியால்கோட்டில் 1924 இல் பிறந்தவர். பிரிவினைக்காலத்தில் இரத்தச்சகதிகளுக்கு நடுவே இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து வந்து ‘இனி ஒரு உயிர் மத்த்தின்பெயரால் போகவேக்கூடாது’ என்று எண்ணி காலத்தை கவனித்தவர். குஜராத் கலவரக்கொலைகளை பார்த்து இரத்தம் கொதித்தது என்கிறார். தற்கால இந்தியாவில் அரங்கேறும் ஒவ்வொரு பயங்கரங்களுக்கு பின்னும், பட்டினி கிடக்கும் ஒருவனின் பழிதீர்ப்பு இருக்கிறது என்று பொறுமிய திரு.நய்யார், சாதி, மதத்தின் பெயரால் நிகழும் பிரிவினைகள் நாட்டையே துண்டாக்கிவிடும், அதுதான் காந்தியையும் பலிவாங்கியது என்றார்.

யாருக்காகவும் எதற்காகவும் எதையும் சமரசபடுத்தாத திரு. குல்தீப் நய்யார், ஒரு இளம் பத்திரிகையாளனாக, இந்திய பிரிவினைக்கு சற்று முன்பாக ஜின்னாவிடம்,
“ஒரு வேளை பாகிஸ்தான் தனிநாடு அடைந்துவிட்டால், இந்தியாவுடனான உங்களது உறவு எப்படிப்பட்டதாக இருக்கும் ?” என்று கேட்டது தொடங்கி நடப்பாண்டின் ஜனவரியில் பிபிசிக்காக “காந்தியைக் கொன்றது கோட்சே மட்டும்தானா ?” என்று கட்டுரைத்தது வரை சமூகத்திடம் பதில்களை தேடச்சொல்லும் ஒரு பெருங்கேள்விக்காரராகவே இருந்திருக்கிறார். மவுண்ட்பேட்டன், காந்தி, நேரு, இந்திரா, சாஸ்திரி, காமராசர், மன்மோகன்சிங் உள்ளிட்ட இந்தியத் தலைவர்கள் மட்டுமின்றி உலகத்தலைவர்கள் பலரையும் தம் கேள்விகளுக்கு பதில் கொடுக்க வைத்துள்ளார்.”நேருவின் காதல் கடிதங்கள், காந்தியார் படுகொலை, இந்தியப் பிரிவினை, ஸ்கூப்,வ்பகத்சிங் பற்றிய வரலாறு என பல நூல்களையும் எழுதியிருக்கிறார்.

ஆரம்பகாலத்தில் உருது பத்திரிகை,பிறகு ஸ்டேட்ஸ்மேன் இப்படி பல பத்திரிகைகளில் பணியாற்றி, 80 க்கும் அதிகமான பத்திரிகைகளுக்கு கட்டுரை எழுதியும் வந்த திரு.குல்தீப் நய்யார் தன்னுடைய எழுத்திலும், பேச்சிலும் எளிய மக்களின் வாழ்வை பேசுவதிலும், அவர்களின் ரணங்களை பதிவு செய்வதிலும், தன்னை எப்போதுமே தளர்த்திக்கொள்ளாத பேனாக்காரர். இரோம் சர்மிளாவின், கிழக்கு இந்திய மக்களின் உரிமையையும், காஷ்மீரத்தின் மீதான பீரங்கிப்பிடிகளையும், பாபர் மசூதி இடிப்பையும், தலித், பழங்குடியினரின் பலநூறாண்டு கதறல்களையும்,கூடங்குளம் மக்களின் போராட்டத்தையும், ஈழத்தமிழரின் தாயக உரிமையையும், மக்களின் தோளோடு தோள் நின்று கேள்விகேட்ட நம்காலத்தின் பத்திரிகையாளர் திரு.குல்தீப் நய்யார் அவர்கள் முதுமையால் தன் 95 வயதில் 23-8-18 அன்று காலமானார்.

திரு.நய்யார் அவர்கள் அதிகாரங்களை நோக்கி கேட்ட பல கேள்விகளுக்கு அவர் வழிநின்று பதில் தேடி கொடுப்பதே அவர் விரும்பிய இந்த சமூகத்திற்கும், அவருக்கும் நாம் செய்யும் கடமை.
அவர்தம் கனவுகளை நெஞ்சில் ஏந்தி அவருக்கு விடை கொடுக்கிறது மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம்.

Related posts

கேப்டன் தொலைக்காட்சி செய்தியாளர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் நடந்தது என்ன? – விளக்க அறிக்கை

admin

தந்தி தொலைக்காட்சி நிருபர் கோகுல ரமணன் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது.

admin

தினமணி பத்திரிகையில் நடப்பது என்ன? தொழிலாளர் நலத்துறை உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கிறது

CMPC EDITOR