பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியா 161 ஆவது இடத்திற்கு பின் தள்ளப்பட்டுள்ளது. உலக பத்திரிகை சுதந்திர தினத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்.
பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாக்க மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் அழைக்கிறது.
உலக பத்திரிகை சுதந்திர தினம் இன்று (03.05.23) உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தில் ரிப்போர்ட்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ் (Reporters without borders) என்ற சர்வதேச அமைப்பு, பத்திரிகை சுதந்திரத்தின் அடிப்படையில் நாடுகளை வரிசைப்படுத்தி அதற்கான காரணத்தையும் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, பத்திரிகை சுதந்திரம் தொடர்பாக, 180 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில், இந்தியாவுக்கு 161ஆவது இடம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு (2022) இந்தியா 150ஆவது இடத்தில் இருந்த நிலையில் ஒரே ஆண்டில் 11 இடங்கள் சறுக்கி தற்போது 161ஆவது இடத்திற்கு சென்றுள்ளது.
பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள், பத்திரிகை / ஊடக நிறுவனங்களின் அரசியல் சார்பு மற்றும் அனைத்து பத்திரிகை / ஊடக நிறுவனங்கள் ஒரு சில நபர்களின் கட்டுப்பாட்டில் இருப்பதுமே இந்தியா பத்திரிகை சுதந்திரத்தில் பின்னடைவை சந்தித்திருப்பதற்கு காரணம் என்று ரிப்போர்ட்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஊடக நிறுவனங்களின் முதலாளிகளுக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையே, பரஸ்பர நலன்களுக்கான உறவு வெளிப்படையாக அமைந்திருப்பது, பத்திரிகை சுதந்திரத்தை கடுமையாக பாதிப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 70 ஊடக நிறுவனங்களையும், 80 கோடி வாசகர்களையும் கொண்ட ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருங்கிய நண்பர் என்பதையும், மோடியின் மற்றொரு நண்பரான தொழிலதிபர் கௌதம் அதானி, என்டிடிவி நிறுவனத்தை விலைக்கு வாங்கியதையும் சுட்டிக்காட்டியுள்ள ரிப்போர்ட்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ் அமைப்பு, இதுவே பத்திரிகைத்துறையில் பன்மைத்துவம் முடிவுக்கு வந்துள்ளதற்கான சமிக்ஞை என்றும் தெரிவித்துள்ளது.
அவதூறு, தேச துரோகம், நீதிமன்ற அவமதிப்பு மற்றும் தேசப் பாதுகாப்பு ஆகிய சட்டங்களின் கீழ் பத்திரிகையாளர்கள் ஆட்சியாளர்களால் துன்புறுத்தப்படுகிறார்கள் என்று கூறியுள்ள ரிப்போர்ட்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ் அமைப்பு, அரசை விமர்சிக்கும் பத்திரிகையாளர்கள் “தேச துரோகிகள்”என்று முத்திரை குத்தப்படுவதாகவும் கூறியுள்ளது. பத்திரிகை / ஊடக நிறுவனங்களின் உயர் பொறுப்புகளில் பெரும்பாலும் உயர்சாதியைச் சேர்ந்தவர்களே இருப்பதால், செய்திகள் பக்கசார்பாக இருக்கின்றன என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், ஒரு ஆண்டில் 3 அல்லது 4 பத்திரிகையாளர்கள் கொல்லப்படுவதாக கூறியுள்ள ரிப்போர்ட்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ் அமைப்பு, பெண் பத்திரிகையாளர்கள் சமூக வலைதளங்களில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுவதையும் குறிப்பிட்டுள்ளது.
தெற்காசியாவில் பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் நாடுகளை விட பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியா மோசமான இடத்தில் உள்ளதாக கூறியுள்ள ரிப்போர்ட்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ் அமைப்பு, உலகிலேயே பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பற்ற மோசமான 31 நாடுகளில் இந்தியாவும் ஒன்று எனவும் தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கை, இந்தியாவில் பத்திரிகை / ஊடக நிறுவனங்களின் செயல்பாடு மற்றும் பத்திரிகையாளர்களின் நிலையை படம்போட்டுக் காட்டியுள்ளது.
ஆகவே, உலக பத்திரிகை சுதந்திர தினத்தை கடைபிடிக்கும் இன்றை தினம், இந்தியாவில் வீழ்ச்சியடைந்து வரும் பத்திரிகை சுதந்திரத்தை மீட்டெடுத்து அதை மேலும் வலுப்படுத்த உறுதி ஏற்போம் என்று அனைத்து பத்திரிகையாளர்களையும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது.