செப்டம்பர் 24 2015
பத்திரிகை அறம் தவறிய, குமுதம் ரிப்போர்ட்டர் இதழை கண்டிக்கின்றோம்!
பெண்கள் எவ்வாறு ஆடை அணிய வேண்டும். ஆணும் பெண்ணும் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடிய சமூக காவலர்களின் (Moral Police) அத்துமீறல்கள் சமீப காலங்களில் அதிகரித்திருப்பதை பார்க்க முடிகின்றது. இதுபோன்ற ஜனநாயகத்திற்கு புறம்பான நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை, ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று வர்ணிக்கப்படும் பத்திரிகைதுறை,தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகின்றது. இந்த சூழ்நிலையில், பெண்கள் அணியக் கூடிய “லெக்கின்ஸ்” என்ற ஆடை
குறித்து, குமுதம் ரிப்போர்ட்டர் புலனாய்வு வார இதழ் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அந்த இதழின் அட்டைப்படத்தில், லெக்கின்ஸ் அணிந்த சில பெண்களின் படங்களை அநாகரீகமாக வெளியிட்டுள்ளது.
ஜனநாயகத்தை காப்பாற்றும் மிக முக்கிய பொறுப்பை கொண்டுள்ள பத்திரிகை,
பெண்கள் அணியக்கூடிய ஆடைகள் குறித்து விமர்சனம் செய்வதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும், பெண்களின் படங்களை அநாகரீகமாக பத்திரிகையில் வெளியிடுவது, ஊடக அறத்திற்கு முற்றிலும் எதிரானது. அந்தவகையில், குமுதம் ரிப்போர்ட்டர் இதழின் இந்த ஜனநாகத்திற்கு எதிரான, பத்திரிகை அறம் தவறிய நடவடிக்கையை மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையம்கண்டிக்கின்றது. இனி இதுபோன்று பத்திரிகை அறம் தவறிய நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்றும், குமுதம் ரிப்போர்ட்டர் இதழை வலியுறுத்துகின்றது.