பத்திரிகையாளர் ஞானி மறைவு: மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் வீரவணக்கம்

0
475

நிலவும் சமூக அமைப்பின் அநீதிகளை சுட்டிக்காட்டுவதுடன், அதை மாற்றுவதற்கான நீண்ட நெடிய போராட்டத்தில் தங்களையும் இணைத்துக்கொள்பவர்கள் மறைவிற்குப் பின்னரும் மக்களின் மனதில் வாழ்கின்றனர்.

அந்தவகையில், பிறப்பால் பார்ப்பனராக இருந்தாலும், பார்ப்பனியத்தின் பிற்போக்கு கருத்துகளை தன்னுடைய இறுதி நாள் வரை எதிர்த்துவந்தவர் பத்திரிகையாளர் ஞானி. அதேபோல், மூத்த பத்திரிகையாளராக, அரசியல் விமர்சகராக, திராவிட கருத்தியலை அடிப்படையாகக் கொண்டு அரசியல் செய்பவர்களின் தவறுகளையும் அவர் சுட்டிக்காட்ட தவறியதில்லை.

ஒவ்வொரு நபரும் தாங்கள் சார்ந்த துறையில் அமைப்பாக செயல்பட வேண்டும் என்ற தத்துவார்த்த உண்மையை உணர்ந்த ஞானி, பத்திரிகையாளர் அமைப்புகளிலும் தன்னை இணைத்துக்கொண்டு, அந்த அமைப்புகளின் நிர்வாகியாகவும் செயல்பட்டவர். அந்த சமயங்களில், பத்திரிகையாளர்கள் மத்தியில் சமூக உணர்வையும், அரசியல் தெளிவையும் ஏற்படுத்தும் வகையில், பத்திரிகையாளர்கள் அமைப்புகளின் சார்பில் தொடர் கூட்டங்களை நடத்தியவர் ஞானி.

பத்திரிகையாளராக, அரசியல் விமர்சகராக, தொழிற்சங்கவாதியாக மட்டுமின்றி கலை இலக்கியத்துறையிலும் ஞானியின் பங்கு மிக முக்கியமானது. மக்களுக்கு தேவையான அரசியலை மக்கள் மொழியில் வழங்கும் நாடகக் கலையையும் கற்று தேர்ந்த ஞானி, இளம் கலைஞர்களை ஒருங்கிணைத்து பல்வேறு சமூக பிரச்சனைகள் தொடர்பான நாடகங்களையும் நடத்திவந்தார்.

பல்துறை வித்தகராக திகழ்ந்தாலும், கற்ற வித்தைகள் அனைத்தையும் சமூக அநீதிகளுக்கு எதிராகவே பயன்படுத்திய ஞானிக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வீரவணக்கம் செலுத்துகின்றது.