பத்திரிகையாளர் சந்தியாவுக்கு எதிராக தொடரப்படும் கீழ்த்தரமான அவதூறு மற்றும் மிரட்டல்களுக்கு எதிராக பத்திரிகையாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டுமென மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கிறது.

0
558

பத்திரிகையாளர் சந்தியாவுக்கு எதிராக தொடரப்படும் கீழ்த்தரமான அவதூறு மற்றும் மிரட்டல்களுக்கு எதிராக பத்திரிகையாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டுமென மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கிறது.

மற்ற பணிகளை மேற்கொள்பவர்களை காட்டிலும், ஊடகங்களில் பணிபுரிபர்களுக்கு இந்த சமூகம் குறித்த சரியான புரிதலும், அதில் நிகழும், அவலங்களையும், கொடுமைகளையும் அம்பலப்படுத்த வேண்டிய மிக முக்கிய பொறுப்பு உள்ளது. மக்கள் அறிய வேண்டிய பிரச்சனைகளை வெளிக்கொண்டு வர நினைக்கும் பத்திரிகையாளர்கள், பணிப்பாதுகாப்பில்லாத நிலை, நிறுவன அழுத்தம், அதிகாரம் படைத்தவர்களின் மிரட்டல் என இவற்றையெல்லாம் தாண்டி உண்மைகளை வெளிக்கொண்டு வர முடிகிறது. ஆனால் அவ்வாறு செயல்படுபவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம்.

அந்த வகையில்,  வி.வி.மினரல்ஸ் என்ற நிறுவனம் அரசின் விதிமுறைகளை மீறி தொழில் நடத்துவதாக, பத்திரிகையாளர் சந்தியா இணையதளம் ஒன்றிற்காக எழுதிய கட்டுரைகளை தொடர்ந்து அவர் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறார். சமூக வலைதளங்களில் அவர் மீது தொடர்ச்சியான மிகவும் கீழ் தரமாக அவதூறு பரப்பப்பட்டு வருகின்றன. அத்துடன் பல்வேறு வகையில் மிரட்டல்களும் தொடர்ந்தவண்ணம் உள்ளன. ஊடகத்தில் பணிபுரியும் பெண்கள் எந்த விதத்திலும் மற்ற பெண்களை காட்டிலும் பாதுகாப்பானவர்கள் இல்லை என்ற தோற்றத்தை இந்த நிகழ்வு தோலுரித்துக்காட்டுகிறது.

செய்தியாளர்களின் நடவடிக்கை அனைத்தும் கேள்விகளுக்கு அப்பாற்பட்டதில்லை. அவர்களின் மீது அல்லது அவர்களின் படைப்புகள் மீது சந்தேகம் எழுத்தால் நிச்சயம் விசாரனைக்குட்படுத்தலாம், பொதுவெளியில் விவாதத்திற்கு எடுத்துச்செல்லலாம். ஆனால், செய்தியாளர் தான் சேகரித்த செய்தியை வெளியிடும்போது, மிரட்டல்களும், அவர்களுக்கு எதிராக பரப்பப்படும் கேவலமான அவதூறுகளும் எந்தவகையிலும், யார் செய்தாலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.  இதுபோன்ற நடவடிக்கை செய்தியாளர்களின் குரல்வளை நெறித்து, கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் நடவடிக்கையேயன்றி வேறில்லை.

பத்திரிகையாளர் சந்தியாவுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இதுபோன்ற தரம் தாழ்ந்த நடவடிக்கை, பத்திரிகையாளர்கள், தங்களை கூட பாதுகாத்துக்கொள்ள முடியாதவர்கள், இவர்களால் என்ன செய்துவிடமுடியும் என்ற அதிகார திமிரோ என்று அச்சம் கொள்ள வைக்கிறது. ஆகவே, முதலாளிகளின் பந்துமுனையல்ல நாம், கிழிந்திருக்கும் சமூகத்தை தைக்கும் ஊசி நாம், என்பதை காட்ட வேண்டிய கடமை நமக்கிருக்கிறது.

ஆகவே, பத்திரிகையாளர் சந்தியாவுக்கு எதிராக கீழ்த்தரமாக அவதூறு பரப்புபவர்களையும், மிரட்டல் விடுப்பவர்களையும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது.

தங்களுடைய அதிகார, பண பலத்தால் கருத்து சுதந்திரத்தை ஒடுக்க நினைப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை மாற்றதிற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.

நம்முடைய சக பத்திரிகையாளருக்கு ஏற்பட்டுள்ள நிலையை நாம் கண்டுகொள்ளாத பட்சத்தில், அதிகாரத்தின் மூலம் பத்திரிகையாளர்களை பணியவைத்து விடலாம் என்ற தவறான முன்னுதாரணம் உருவாவதற்கு நாமே காரணமாக அமைந்துவிடுவோம். ஆகவே, பத்திரிகையாளர்களின் உரிமையை பாதுகாக்கவும், கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கவும், அனைத்து பத்திரிகையாளர்களும், பத்திரிகையாளர்கள் அமைப்பும் ஒருங்கிணைந்து, சந்தியாவுக்கு ஆதரவாக குரல்கொடுக்க வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கிறது.