பத்திரிகையாளர் கொளரி லங்கேஷ்ன் நினைவைப்போற்றுவோம்! கருத்துரிமை காக்க ஒன்றுபடுவோம்!

0
121

’மதவெறி ஃபாசிச தாக்குதலிலிருந்து தலித் மற்றும் இஸ்லாமியர்களை பாதுகாக்க, மதசார்பற்ற அமைப்புகளை உள்ளடக்கிய அமைப்பு ஒன்றை தொடங்கியுள்ளோம்…’ இப்படி கருத்து தெரிவித்த சில நாட்களிலேயே, அதே மதவெறியர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார், மூத்த பத்திரிகையாளரும் செயற்பாட்டாளருமான கவுரி லங்கேஷ். கடந்த 2017 இல் இதே செப்டம்பர் 5 ஆம் தேதியன்று, அவர் வீட்டு வாசலிலேயே கவுரியையும் கொன்று தின்றது, கருத்தை எதிர்கொள்ள முடியாத அந்த கூட்டம்.

அடிப்படைவாதத்திற்கு எதிராகவும், கருத்துரிமை காக்கவும் தொடர்ந்து எழுதிய கவுரி லங்கேஷ் என்னும் சுயமரியாதை பேனாவை, நாம் தொலைத்து இன்றோடு மூன்று ஆண்டுகள் கடந்துவிட்டன. கவுரி லங்கேஷை கொன்றவர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருந்தாலும் அடங்கிவிட்டனவா இந்த கொலைவெறி கூட்டத்தின் கூக்குரல் என்றால், அது அடுத்த ஆளை தேடி அலைந்து கொண்டிருக்கிறது.

குறிப்பாக தமிழ்நாட்டில் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து குறி வைக்கப்பட்டு கொண்டே இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக பெண் பத்திரிகையாளர்கள் மீது சமூக வலைதளங்களில் குறிவைத்து ஆபாசத் தாக்குதல் தொடுத்து வருகிறது, அதிகாரத்தின் ஆசிபெற்ற கும்பல்.

அடக்குமுறைக்கு எதிராக குரல் எழுப்பும் பத்திரிகையாளர் எவரையும் விடுவதில்லை இந்த கலவர பிறவியினர். இன்று நேற்றல்ல… தொடர்ந்து இப்படி சமூக வலைதளங்களில் ஆபாசமாக பதிவிடுவோர், தொலைபேசியில்   மிரட்டுவோர் குறித்து, காவல்துறையில் கணக்கிலடங்காத புகார்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றின் மீது ஒரு துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை பாதுகாப்பிற்கு பெயர்போன காவல்துறை.

இதுமட்டுமல்லாமல், பத்திரிகையாளர்களை அவர்கள் சார்ந்த மதத்தை வைத்து வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பதிவிடுவதும், பழி தீர்க்கப்படுவார்கள் என்று வெளிப்படையாகவே மிரட்டல் விடுப்பதுமாகவே இருப்பவர் இன்னொருவர். அவர் மீதும் பல புகார்கள். ஆனால், அவை மீதும் ஒரு நடவடிக்கையும் இல்லை. அதாவது புகார்கள் குறித்து குற்றஞ்சாட்டப்பட்டவர்களே நக்கலடித்து பதிவிடும் அளவிற்குத்தான் அப்புகார்கள் மீதான நடவடிக்கை இருக்கிறது.

இந்த நிலையில்தான் பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் செயலாளர் திலீப் கண்ணன் என்ற நபர், ஒரு பெண் பத்திரிகையாளரின் பெயரை பொதுவெளியில் குறிப்பிட்டு மிகவும் தரம் தாழ்ந்த வகையில் பதிவிட்டுள்ளார். அதை மேற்குறிப்பிட்ட ஒருவர் பின்னூட்டம் செய்து புலகாங்கிதம் அடைகிறார்.

இதுமட்டுமல்லாமல் சாதியின் பெயரால் ஊராட்சி மன்ற தலைவரை சுதந்திர தினத்தில் கொடியேற்ற விடாமல் செய்த, சாதி தீண்டாமை குறித்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் மீது, கொலைவெறி தாக்குதல் நடத்தியிருக்கிறது சாதிவெறி கும்பல் ஒன்று.

இப்படி நாள்தோறூம் பல தாக்குதல்களையும், ஆபாச அத்துமீறல்களையும், வெளிப்படையான கொலை மிரட்டல்களையும் கடந்து, இதே துறையில் தைரியத்தோடு, அடக்குமுறையை எதிர்த்து, நீதி வெல்லும் என்ற நம்பிக்கையோடு நாம் பயணிக்க முடிகிறது என்றால், அது கவுரி லங்கேஷ் போன்ற பத்திரிகை துறை தீரர்கள் காட்டிய வழிதான்.

சமரசமின்றி அடக்குமுறைக்கு அஞ்சாது கருத்துரிமை காக்க, நமக்கு முன்னோராக விளங்கும் கவுரி லங்கேஷ் போன்றோர் என்றும் நம் நினைவில் வந்து கொண்டே இருப்பார்கள்.

அவர் வழி நடப்போம்! கருத்துரிமை காப்போம் என்று இந்நாளில் உறுதியேற்றுக்கொள்வோம்.