CMPC
STATEMENTS / அறிக்கைகள்

பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம்!

ஏப்ரல் 8 2014

பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம்!

16 வது மக்களவை தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில், அதுகுறித்த செய்திகளை மக்களுக்கு சென்று சேர்க்கும் சமூக கடமையில் பத்திரிக்கையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் சமீபத்தில் நடைபெற்றுள்ள சில சம்பவங்கள், தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் தங்கள் பணியை நேர்மையாகவும், நடுநிலையுடனும் செய்வதற்கான சூழல் இல்லையே என்று எண்ணத் தோன்றுகின்றது.

மார்ச் 19 ஆம் தேதி அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் காஞ்சிபுரத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது, சாலையின் இருபக்கங்களையும் மறித்து மேடை அமைக்கப்பட்டிருப்பதாக கூறி, திமுக வினர் ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டனர். இதனை செய்தி சேகரிக்கச் சென்ற கலைஞர் தொலைக்காட்சி செய்தியாளர் ஜாபர் மற்றும் திணமனி செய்தியாளர் ராஜவேலு ஆகியோர் அதிமுகவினாரால் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகார் மீது போலீசார், தாமதமாகவே நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், தாக்குதலுக்குள்ளான பத்திரிகையாளர்கள் ஜாபர் மற்றும் ராஜவேலு மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், ஏப்ரல் 2ஆம் தேதி திருப்பூரில் இந்து முன்னணி சார்பில், பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஒருங்கிணைத்து, இந்துக்களின் ஓட்டு யாருக்கு, என்பது குறித்து கூட்டம் நடைப்பெற்றது. இந்த கூட்டம் நிறைவு பெறுவதற்கு முன்னரே, பொதுமக்கள் கூட்டரங்கிலிருந்து வெளியேறினர். இதனை ஒளிப்பதிவு செய்ய முயன்ற புதியதலைமுறை ஓளிப்பதிவாளர் சபரீஸ், அங்கிருந்த தொண்டர்களால் தாக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்படார். மறுநாள் இதுதொடர்பாக, இந்து முண்ணனியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

ஏப்ரல் 5 ஆம் தேதி மதுரை, திருமங்கலம் பகுதியில், அதிமுக தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. அந்த கூட்டத்தில் விதியை மீறி கொக்கிபோட்டு மின்சாரம் திருடியுள்ளனர். அதை படம் பிடித்த கேப்டன் தொலைக்காட்சி செய்தியாளர் மணிகண்டன் தாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 6ஆம் தேதி திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்ட பொதுக்கூட்டத்தில் பத்திரிகையாளர்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்காத காணரணத்தால், செய்தி சேகரிக்க சென்றிருந்த ஆங்கில தொலைக்காட்சி செய்தியாளரிடம், திமுக தொடண்டர்கள் சிலர் தவறாக நடந்துள்ளனர். இந்நிலையில் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக அருகில் இருந்த மேடையில் ஏற முயன்ற, புதிய தலைமுறை செய்தியாளர் தமிழரசி, காவலர்களால் தடுக்கப்பட்டு தள்ளுமுள்ளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

எந்தவித அச்சுறுத்தல்களுக்கும் ஆளாகாமல், சுதந்திரமாக செயலாற்ற வேண்டிய செய்தியாளர்கள் தொடர்ந்து இதுபோன்று கட்சிக்காரர்களாலும், காவல்துறையாலும் அடக்குமுறைக்கு உட்படுத்தப்படுவதை “மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மய்யம்” வன்மையாக கண்டிக்கிறது. பாதுகாப்பு அளிக்கக்கூடிய அரசு எந்திரம் உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம். அரசியல் கட்சியைச் சேர்ந்த தொண்டர்களும், பத்திரிகையாளர்களிடம் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

மேற்கண்ட சம்பவங்களின் வெளிச்சத்தில், தேர்தல் காலங்களில் பத்திரிகையாளர்கள் மீது இதுபோன்ற யாரேனும் அத்துமீறல்களில் ஈடுபட்டால், அந்த குறிப்பிட்ட கட்சியின் வேட்பாளரை, தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தகுதிநீக்கம் செய்ய வழிவகை செய்யும் விதியை, தேர்தல் விதிமுறையில் அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொள்கின்றோம். இந்த கோரிக்கையை, அனைத்து பத்திரிகையாளர் சங்கங்களும் ஒரே குரலில் வலியுறுத்த வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கின்றது.

Related posts

பத்திரிகையாளர்களிடம் கண்ணியக்குறைவாக நடந்துகொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை வன்மையாக கண்டிக்கின்றோம்.

admin

சமீப காலங்களில் பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களுக்கு கண்டனம்.

admin

நியூஸ் 18 தமிழ்நாடு தொலைகாட்சியிலிருந்து குணசேகரன் விலகல்! வலதுசாரிகளின் அழுத்தத்திற்கு பணிந்த கார்ப்பரேட்!

CMPC EDITOR