பத்திரிகையாளர்கள் அனைவருக்கும், மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் மே தின வாழ்த்துகள்

0
742

குரங்கிலிருந்து மனிதன் உருவானதற்கும், இந்த மாபெரும் உலகத்தின் இயக்கத்திற்கும் உழைப்பே அடிப்படையான காரணம். சமூக இயக்கத்தில் தன் உழைப்பைச் செலுத்தாத எந்த மனிதனும், மதிப்போடும், மரியாதையோடும் வாழ முடியாது என்பது தர்க்க ரீதியிலான உண்மையென்றாலும், அடுத்தவர் உழைப்பைச் சுரண்டி பிழைக்கும் மனிதர்களுக்கு, அனைத்தையும் அளித்து பாதுகாக்கும், தர்க்கத்திற்கு எதிரான ஒரு சமூகத்தை, நாம் இன்னும் முழுமையாக கடக்கவில்லை என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இந்த கீழ்த்தரமான சமூகத்தை கடப்பதற்காக தொடங்கப்பட்ட போராட்டம், இன்றளவும் தொடர்கின்றது. “ஹே” மார்க்கெட் தொடங்கி பெங்களுரு பின்னலாடை தொழிலாளர்களின் பேராட்டம் வரை, மாபெரும் லட்சியத்தை நோக்கிய இந்த நகர்வில், பல்லாயிரம் தொழிலாளர்கள் ரத்தம் சிந்தி வருகின்றனர். சம்மட்டியும், ஏர்க்கலப்பையும் பிடித்து சிவந்த கைகளால், இந்த தியாக வரலாற்றின் இறுதி அத்தியாயம் ஒருநாள் எழுதி முடிக்கப்படும். அன்று, இந்த தியாகிகளின் கனவு நனவாக்கப்படும். அந்த நாளில், சுரண்டல் ஒழிக்கப்பட்டிருக்கும். மனிதனுக்கும், இயந்திரத்திற்கும் இடையிலான அனைத்து வித்தியாசங்களும் அறியப்பட்டிருக்கும். உழைப்பின் உண்மையான மதிப்பை, உழைத்தவன் அனுபவிப்பான். இந்த சூழல் படிப்படியாக செழுமை பெற்று, உழைப்பிற்கேற்ற உண்மையான ஊதியம் என்ற இடைநிலையை கடந்து, தேவைக்கேற்ற உழைப்ப, தேவைக்கேற்ற ஊதியம் என்ற உன்னத நிலையை அடையும். சமூக அறிவியல்பூர்வமான இந்த மாற்றம், நிகழ்ந்தே தீரும்.

மாற்றம் நிகழும் வரை, மாற்றத்திற்கான முன்னெடுப்பில் தன் உயிரை தியாகம் செய்த, தொழிலாளர்களின் கனவுகளை நினைவூட்டும் நாளாக, “மே தினத்தை” அனுசரிப்போம். உழைக்கும் அனைவரும் ஒன்று கூடி, தியாக வரலாற்றின் இறுதி அத்தியாயத்தை விரைவில் எழுதி முடிப்போம்.