CMPC
STATEMENTS / அறிக்கைகள்

பத்திரிகையாளர்களை மிரட்டும், கருத்துசுந்திரத்தை ஒடுக்க நினைக்கும் மாரிதாஸ் என்ற சமூக விரோதியை உடனே கைது செய்ய வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் தமிழக அரசை வலியுறுத்துகிறது.

தங்கள் கருத்தோடு ஒத்துவராத ஊடகவியலாளர்களை நசுக்கிவிட வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு ஊடகவியலாளர்களையும், ஊடக நிறுவனங்களையும் மிரட்டும் போக்கு தொடர்ந்து வருகிறது. ஒருவேளை மிரட்டல்களுக்கெல்லாம் அந்த ஊடகவியலாளர்கள் அடிபணியாமல் இருந்தால், அவர்களின் நிறுவனத்தை குறிவைப்பதன் மூலமும், நிறுவனர்களுக்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமும் அந்த ஊடகவியலாளர்களை பணியிலிருந்தே நீக்கிவிட வேண்டும் என்ற மிகக் கேவலமான எண்ணத்தோடு சிலர் தொடர்ந்து இயங்கி வருகின்றனர். அவர்களில் ஒருவர் தான் மாரிதாஸ் என்ற அரைகுறைப் பேர்வழி.

தன்னைத்தானே மிகப்பெரிய அறிவாளி என்று நினைத்துக்கொண்டு புள்ளி விவரங்களை எல்லாம் எடுத்து வைத்து, சரியானவற்றை விளக்குவதாக நினைத்துக் கொண்டு, தப்பும் தவறுமாக எதையாவது உளறிக்கொண்டிருக்கிறார் அவர். அதை பார்த்து நகைத்துவிட்டு கடந்து சென்றுவிட முடியவில்லை. காரணம் கடந்த காலங்களில் சாமானியர்கள் மற்றும் பாதிக்கப்படும் மக்களின் பக்கம் நின்று செய்திகளை வெளிக்கொண்டு வந்த பத்திரிகையாளர்கள் மீதும் இப்படித்தான் மிரட்டும்படியான, தப்பும் தவறுமான, கொச்சைப்படுத்தும் நோக்கம் கொண்ட, கருத்துக்களை சிலர் வெளிப்படுத்த தொடங்கினர். அதற்கும் அஞ்சாமல் பணி செய்த பல பத்திரிகையாளர்கள் தாக்குதலுக்கு உள்ளாகினர்.  உச்சமாக சிலர் படுகொலையும் செய்யப்பட்டனர். உதாரணமாக கௌரி லங்கேஷ் என்ற மக்கள் பத்திரிகையாளர் பாசிசவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டதை சொல்லலாம்.

இப்படிப்பட்ட மோசமான சூழலில் பணியாற்றும், பத்திரிகையாளர்களின் நலனை பாதுகாக்கும் பணியை, முதன்மை நோக்கமாக கொண்டே மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் செயல்பட்டு வருகிறது. எந்த கருத்தியல் கொண்டவராக இருந்தாலும் அவர் ஊடகவியலாளர் என்ற அடிப்படையில் ஒவ்வொருவரின் பணிப் பாதுகாப்பு, தொழிலாளர் உரிமைகள், உள்ளிட்டவைகளை பெற்றுத்தருவதை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் உறுதி செய்து வருகிறது. சட்டத்திற்கு புறம்பாக ஊடகவியலாளர்களை பணி நீக்கம் செய்யும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக களத்திலும், சட்ட ரீதியாகவும் போராடி வருகிறது. பத்திரிகைதுறை கருத்து சுதந்திர ஒடுக்குமுறைக்கு ஆளாகும்போத, ஊடக நிறுவனங்களுக்காகவும் களத்தில் இறங்கி போராடியுள்ளது.

இந்நிலையில், YOUTUBE தளத்தில் மாரிதாஸ், சமூகத்தில் குழப்பம் விளைவிக்கும் நோக்கிலும், வன்முறையை தூண்டும் விதமாகவும் தொடர்ந்து பேசி வருவது, அனைவரும் அறிந்ததே. அந்த சமூக விரோதியின் தற்போதைய குறி ஊடகவியலாளர்களாக உள்ளனர். லட்சிய கனவுகளோடு இந்த துறைக்குள் நுழைந்த எண்ணற்ற இளம் ஊடகவியலாளர்களையும், தொடர்ந்து கொச்சைபடுத்தும் விதமாகவும், மிரட்டும் விதமாகவும் பேசி வருகிறார் மாரிதாஸ். இது அப்பட்டமான கருத்து சுதந்திர ஒடுக்குமுறையே அன்றி வேறு எதுவும் இல்லை.

ஒரு காணொலியில், புதிய தலைமுறையில் கார்த்திகை செல்வன்  தாலி தேவையா? என்ற விவாதத்தை முன்னெடுத்ததை ஆதரித்து மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் போராட்டம் நடத்தியதாக போகிற போக்கில் பொய் மூட்டைகளை வீசியிருக்கிறார் மாரிதாஸ். தாலி குறித்த விவாதம் கட்டமைக்கப்பட்ட போது கார்த்திகை செல்வன் புதிய தலைமுறையில் பணியாற்றவில்லை என்பது அந்த அரைகுறைக்கு தெரியவில்லை.

அடுத்து அந்த விவாதம் நடத்தப்பட இருந்ததால், புதிய தலைமுறை தொலைக்காட்சியின் மீது சில சமூக விரோதிகள் டிஃபன் பாக்ஸ் குண்டு வீசினர். இவ்வளவு கொடூரமான விசயம் நடக்கும் போது ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட, நெஞ்சுரம் மிக்க யாராக இருந்தாலும் அதனை கண்டிப்பர். அதுவும் ஊடகவியலாளர்களின் அமைப்பு, ஊடக நிறுவனத்தையும், அதில் பணிபுரியும் ஊழியர்களை காக்கும் பொருட்டு, அவர்கள் பக்கம் நிற்க வேண்டியது தார்மீக கடமை. அதைத்தான் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் செய்தது. குண்டு வீசிவர்களை கண்டித்தது, ஜனநாயகத்தின்பால் அக்கறை கொண்டு அனைத்து அரசியல்கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்களை ஒருங்கிணைத்து கருத்து சுதந்திர ஒடுக்குமுறைக்கு எதிராக கண்டன கூட்டத்தை நடத்தியது. ஆனால் குண்டு வீசயவர்களுக்கு ஆதரவாக இருந்திருக்க வேண்டும் என பொய்மூட்டைகளை வீசும் மாரிதாஸ் நினைக்கிறார். அதனால்தான் அந்த கூட்டத்தை தவறானது என்பதுபோல் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த கூட்டத்தில் அந்த சமயம் ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் மீது தமிழக அரசு தொடுத்த அவதூறு வழக்குகளுக்கும் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது திமுகவின் பொருளாளராக இருந்த ஸ்டாலினை மேடையில் வைத்துக்கொண்டே, திமுக ஆட்சிகாலத்தில் பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களும், கருத்து சுதந்திர ஒடுக்குமுறையும் மாற்றத்திற்கான ஊடகவியலளார்கள் மையத்தின் சார்பாக தைரியமாக சுட்டிக்காட்டப்பட்டது. திமுக ஆட்சிகாலத்தில் நிகழ்ந்த தவறுகளையும் சுட்டிக்காட்டிய அறிக்கையை, ஸ்டாலின் மூலமே வெளியிடவைத்ததை விட வேறு எந்த வகையில் ஒரு கட்சியின் தவறை சுட்டிக்காட்ட முடியும்?

அதேபோல், சமீபத்தில் கலைஞர் தொலைகாட்சியில் சம்பள குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டபோது, எந்த ஒரு பத்திரிகையாளர் அமைப்பும் அதற்கு எதிராக கண்டன அறிக்கையைக் கூட வெளியிடவில்லை. ஆனால், மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் அதை கண்டித்து கண்டன அறிக்கை வெளியிட்டதுடன், இந்த சம்பளகுறைப்பு நடவடிக்கையை திரும்ப பெற வேண்டும் என்று பல்வேறு வகையில் தொடர்ந்து வலியுறுத்தி வருவதுடன், ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து இதை வலியுறுத்துவதற்காக தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறோம். ஆனால், ஸ்டாலின் இதுவரை அமைப்பின் நிர்வாகிகளை சந்திக்க மறுத்துவருகிறார்.

மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் இணையதளத்தில் உள்ள கட்டுரைகள் திமுக நிர்வாகிகளால் நடத்தப்படும் ஒரு நிறுவனத்தால் எழுதிக்கொடுக்கப்பட்டவை என்று புழுகுமூட்டை மாரிதாஸ் போகின்ற போக்கில் ஒரு பொய்யை சொல்லிவிட்டு நகர்கிறார். அந்த இணைய தளத்தில்தான் திமுக நிர்வாகிகள் பத்திரிகையாளர் ஒருவரை தாக்கியதை எதிர்த்து விடப்பட்ட கண்டன அறிக்கையும், கலைஞர் தொலைகாட்சி நிர்வாகத்தை எதிர்த்த கண்டன அறிக்கையும் உள்ளது. கண்டன அறிக்கைகள், அமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட நிகழ்வுகள், கவிதைகள், புத்தக விமர்சனங்கள் ஆகியவற்றை தாண்டி அந்த இணையதளத்தில் வேறு எந்த பதிவுகளும் இல்லை. அப்படி என்றால், திமுக நிர்வாகிகளால் நடத்தப்படும் நிறுவனம்தான் இந்த திமுகவிற்கு எதிரான கண்டன அறிக்கையை எழுதி கொடுத்தார்களா? கவிதை எழுதி கொடுத்தார்களா? புத்தக விமர்சனம் எழுதி கொடுத்தார்களா? இதன்மூலம் மாரிதாஸ் என்பவர் எப்படிப்பட்ட அரைவேக்காடு என்பது அப்பட்டமாக தெரியவருகிறது.

அதேநேரம், மக்கள் பிரச்சனைகளை, சரியான விமர்சனங்களை ஊடகங்கள் பேசிவிடவே கூடாது என்ற மிக மோசமான எண்ணத்தையே மாரிதாஸ் வெளிப்படுத்தி வருகிறார். அத்தோடு மிகக் கேவலமாக ஊடகவியலாளர்களின் குடும்பம் புகைப்படங்களை வெளியிட்டு அவர்களின் குடும்பத்திற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளார். இது மிக மிக ஆபத்தான விசயமாகும்.

ஆகவே, சமூகத்தில் குழப்பம் விளைவித்து, சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் நோக்கில் செயல்படும், கருத்து சுதந்திரத்தை ஒடுக்க நினைக்கும், ஊடகவியலாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் மாரிதாஸ் மீது தமிழக அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொடர்ந்து மக்களை திசை திரும்பும் பொய்யான தகவல்களை அளிப்பதுடன், தனக்கு பிடிக்காதவர்களை மிரட்டும் வகையில் தகவல்களை வெளியிடும் அவரது YouTube பக்கத்தை உடனடியாக முடக்க வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கிறது.

தன் சமூகவிரோ செயலுக்கு, தமிழகத்தின் முன்னணி நடிகர், ரஜினிகாந்தின் பெயரை மாரிதாஸ் பயன்படுத்திவரும் நிலையில், பத்திரிகையாளர்களை மிரட்டும் மாரிதாசின் இந்த செயலுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்பதை நடிகர் ரஜினிகாந்த் விளக்க வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலளார்கள் மையம் கேட்டுக்கொள்கிறது.

மிரட்டல், கொச்சைப்படுத்துதல், உள்ளிட்டவற்றுக்கெல்லாம் அஞ்சாத நேர்மையான ஊடகவியலாளர்களுக்கு, ஜனநாயக சக்திகளும், ஊடக நிறுவனங்களும் ஆதரவளிக்க வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கிறது.

Related posts

வெறுப்புணர்வை தூண்டும் பிரிவினைவாதிகளுக்கு தமிழக மக்கள் இடமளிக்க மாட்டார்கள்! – பத்திரிகையாளர் அமைப்புகளின் கூட்டறிக்கை

CMPC EDITOR

ஊடகங்களை அச்சுறுத்தும் சக்திகளை எதிர்க்க ஒன்றுபடுங்கள் – கூட்டறிக்கை

CMPC EDITOR

செய்தியாளர் இசைப்பிரியாவின் கொடூரமான கொலையை கண்டிக்கின்றோம்!

admin